ETV Bharat / city

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது - பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கு தமிழக ஆசிரியர் கூட்டணி கடிதம்

author img

By

Published : Aug 6, 2021, 11:03 PM IST

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது
டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

பள்ளியில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்த ஆசிரியர்கள், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற தகுதியானவர்களாகி விடுவார்களா? என பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கு தமிழக ஆசிரியர் கூட்டணி கடிதம் அனுப்பியுள்ளது.

சென்னை: டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்குத் எவ்வாறு தேர்வு செய்யப்படுவார்கள் என்பதற்காக வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

அதில், “டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்குத் தேர்வு செய்யப்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளிவந்துள்ளன. அதனை நாங்கள் கூர்ந்து படித்துப் பார்த்தோம். பள்ளிக்கல்வித் துறை ஆணையர் அவர்களின் செயல்முறை கடிதத்தில் முதலாவதாக அனைத்து வகை ஆசிரியர்களும் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.

ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற தகுதியானவர்களாகி விடுவார்களா? அரசாணை உள்ளே போக நாங்கள் விரும்பவில்லை தவிர்த்து விடுகிறோம். டோக்கியோவில் விளையாடுகின்ற ஒலிம்பிக் போட்டி விருதல்ல டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது.

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

ஐந்து ஆண்டுகளில் ஒரு ஆசிரியரின் அனுபவத்தை வைத்து பெருமைக்குரிய டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை எப்படி தேர்வு செய்ய முடியும். கரோனா காலத்தில் இணையவழிக் கல்வியும் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்றுதான்‌. ஆனால், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு கரோனா பெருந்தொற்று காலத்தில் இணையவழிக் கல்வியினை மாணவர்களிடம் கொண்டு சென்றிருக்க வேண்டும் என்பது மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய தகுதி அல்ல.

ஒரு மாவட்டத்திற்கு தொடக்கக் கல்விக்கு மூன்று பேர், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு மூன்று பேர் ஆக மொத்தம் ஆறு விருதுகளும், பெரிய மாவட்டமாக இருந்தால் தொடக்கக் கல்வியில் ஆறு பேர், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியில் ஆறு பேர் விருதுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். 2ஆயிரம் ஆசிரியர்கள் தொடங்கி 5ஆயிரம் ஆசிரியர்கள் வரை பணியாற்றுகின்ற மாவட்டங்களில் பணியில் மூத்தவர்கள் மூன்று பேர் ஆறு பேர் கூட விருதுக்கு தேர்வு செய்ய தகுதி உடையவர்கள் இல்லாமல் இருக்கிறார்களா?

ஆசிரியர்கள் மத்தியில் பிரிவினை

அனைத்து துறைகளும் இப்படி பணிமூப்பு அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுகிறார்கள். நல்லாசிரியர் என்ற விருதினை கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது விருது பெறுபவர்கள் மட்டுமே நல்லாசிரியர்கள் என்றால் விருது பெறாதவர்கள் நல்லாசிரியர்கள் இல்லையா? என்ற கேள்வியை முதலமைச்சர் அவர்களே கேட்டுக்கொண்டு செப்டம்பர் 5 டாக்டர் ராதாகிருஷ்ணன் அவருடைய பிறந்த நாள் ஆசிரியர் தினமாக நாம் கொண்டாடி மகிழ்வோம்.

அவர் பெயரால் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்று அரசாணை வெளியிடப்பட்டு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் குறைந்தபட்சம் 15 ஆண்டுகாலம் பணி முடித்திருக்க வேண்டும். தலைமை ஆசிரியராக இருந்தால் 20 ஆண்டுகளுக்கு முக்கியத்துவம் அளித்து அந்த அரசாணை வெளியிடப்பட்டு இது நாள் வரை நடைமுறையில் இருந்து வந்தது.

இன்னும் சொல்லப்போனால் பணி நிறைவு பெறுகிற 3 அல்லது 4 ஆண்டுகளில் தான் அந்த விருதினை வழங்குவது நடைமுறையில் இருந்து வந்தது. இளையவர்கள் மூத்தவர்கள் என்று ஆசிரியர்கள் மத்தியில் பிரிவினை நிர்வாக கட்டமைப்புகளை உருவாக்க வேண்டாம். நல்லவர்கள், கற்றல் கற்பித்தலில் அவர்கள் பெற்றுள்ள அனுபவ கொள்முதல், மாணவர்கள் சேர்க்கை, பள்ளிச் சூழலில் நல்ல தோற்றம், சமூகப்பணி, பள்ளியின் உள்கட்டமைப்புகள், இனிய அணுகுமுறை உள்ளவர்கள் என உள் நோக்கமின்றி நீங்கள் தேர்வு செய்தால் நன்முத்துக்களாக முத்திரை பதித்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தமிழக ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், குறைந்தபட்ச பணிக்காலம் 5 ஆண்டுகள் என்பதை ஏற்கனவே இருந்த அரசாணையின்படி 15 ஆண்டுகள் என மாற்றியமைத்து திருத்திய அரசாணை வெளியிட்டு உதவிடுமாறு பெரிதும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம். ஒவ்வொரு நொடியிலும் நல்லாட்சியினை மலரச் செய்து வருகிற தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் பரிசுத்த பார்வையில் வரலாற்றுப் பிழை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.

பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை துறை ஆணையரும் மறுபரிசீலனை செய்து மரபினை சேதாரப்படுத்த முனையாமல் தெளிவுரை வழங்கி உதவிடுமாறு தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் பெரிதும் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது - தகுதியானவர்களை பள்ளிக்கல்வித்துறை பரிந்துரைக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.