ETV Bharat / city

அமைதியான பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் - தமிழ்நாடு அரசு

author img

By

Published : Nov 1, 2021, 8:25 PM IST

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

மருத்துவமனைகள், பள்ளிகள், மத வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட அமைதியான பகுதிகளில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

சென்னை: தீபாவளி பண்டிகையைப் பாதுகாப்பாகவும், மாசு ஏற்படாத வகையில் கொண்டாடவும், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை பல்வேறு அறிவுரைகளை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மாசுபடுத்தும் பட்டாசுகளை வெடிப்பதால் காதுகேளாமை, கண்களில் நீர் வடிதல் மற்றும் கடுமையான சுவாசக் கோளாறு உள்ளிட்ட மனித மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்தில் கடுமையான பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

பட்டாசுகளின் புகையால் ஏற்படும் காற்று மற்றும் நீர் மாசுபாட்டிற்கு வழிவகுக்கும். இந்நிலையில், பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், பேரியம் கலந்த பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்வதை தடை செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் படி, தமிழ்நாடு அரசு 2018, 2019 & 2020 ஆம் ஆண்டுகளில் பட்டாசுகளை வெடிப்பதற்கு காலை 6.00 மணி முதல் 7.00 மணி மற்றும் இரவு 7.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நேரம் நிர்ணயித்ததைப்போல், பசுமை பட்டாசுகளை வெடிக்க அரசு நேரத்தை நிர்ணயித்துள்ளது.

பாதுகாப்பான மற்றும் மாசு இல்லாத தீபாவளியைக் கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) ஒவ்வொரு ஆண்டும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதுமட்டுமின்றி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது.

அதன்படி, தீபாவளி நாளில் காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை மற்றும் இரவு 7.00 மணி முதல் 8.00 மணி வரை பசுமை பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிக ஒலி மாசுபாட்டை உருவாக்கும் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் போன்ற ‘அமைதியான பகுதிகளில்’ பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசைகள் மற்றும் தீ விபத்து ஏற்படும் பகுதிகளுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்", என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு அரசு ஏற்கனவே, உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல் படி பேரியம் கலந்த பட்டாசுகளைத் தயாரிப்பது, விற்பது, வெடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.