சென்னை: தமிழ்நாட்டில் முதல்முதலாக 2020 மார்ச் 9ஆம் தேதி ஒமனிலிருந்து வந்த ஒருவருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல் அடிப்படையில் 94 நாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் பிற வெளிநாடுகளில் கரோனா பாதிப்பு தொடங்கியது முதல் 2020 பிப்ரவரி 9ஆம் தேதிமுதல் வெளிநாடுகளிலிருந்து வந்த பயணிகளில் ஆயிரத்து 137 நபர்களுக்கு கரோனா அறிகுறிகள் இருந்ததாகச் சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டனர். 2020 மார்ச் 31ஆம் தேதி 124 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பெற்று கரோனா வைரஸ் தொற்று நோயாக 2020 மார்ச் 15ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. கரோனா வைரஸ் தாெற்று தீவிரமாகப் பரவிவருவதால் பட்ஜெட் மீதான மானியக் கோரிக்கையை தள்ளிவைக்க வேண்டும் எனவும், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் முகக் கவசம் வழங்க வேண்டும் எனச் சட்டப்பேரவையில் துரைமுருகன் கோரிக்கைவிடுத்தார்.
2020 மார்ச் 24ஆம் தேதிமுதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே செல்வதற்கு இ-பாஸ் முறை அறிமுகம் செய்யப்பட்டது.
கரோனா தொற்று பரிசோதனை அதிகரிக்க ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மையங்கள் அதிகரிக்கப்பட்டன. தமிழ்நாட்டில் 2020 ஆகஸ்ட் 30ஆம் தேதி ஒரு நாள் கரோனா பாதிப்பு ஆறாயிரத்து 495 எனப் பதிவானது. அப்போது ஒரே நாளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 94 எனப் பதிவாகியது.
கரோனா தொற்று குறைய தொடங்கியதால் பொதுமுடகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. முதல் அலையின் கரோனா தொற்று படிப்படியாக குறைந்து 2021 பிப்ரவரி 8ஆம் தேதி 464 எனக் குறைந்தது. ஒரே நாளில் இறப்பும் நான்கு எனக் குறைந்தது. மேலும் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்து 354 என இருந்தது.
மத்திய அரசு இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை அவசரக் கால பயன்பாட்டின்கீழ் ஜனவரி 16ஆம் தேதிமுதல் முன்களப் பணியாளர்களுக்குப் போடுவதற்கு அனுமதி அளித்தது. 2021 பிப்ரவரி 10ஆம் தேதி மீண்டும் 479 என உயர்ந்தது.
ஆனால் பிப்ரவரி 28ஆம் தேதி வரையில் ஒருநாள் பாதிப்பு 479 என இருந்தது. மார்ச் மாதம் 5ஆம் தேதி தினசரி பாதிப்பு 543 என அதிகரிக்கத் தொடங்கியது. தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் மீண்டும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்தது.
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி தொடங்கியது. இறுதி வேட்பாளர் பட்டியல் மார்ச் 22ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சியினர் கரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி பரப்புரை செய்ய வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. அதனையும் மீறி கரோனா கட்டுப்பாடுகள் காற்றில் பறக்கவிடப்பட்டு, தேர்தல் பரப்புரை நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தேர்தல் அலுவலர்கள் தீவிரமாக இருந்தனர். இதனால் கரோனா தொற்று பாதுகாப்பு நடைமுறைகள் காற்றில் பறந்தன. அரசியல் பரப்புரைக் கூட்டங்களுக்குச் சென்றுவந்தவர்களுக்கு கரோனா தொற்று தாக்கம் ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவந்தது.
தமிழ்நாட்டில் காபந்து அரசு செயல்பட்டதால், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளைப் போதுமான அளவில் ஏற்படுத்த முடியவில்லை. நோய்த்தொற்று அதிகரித்தால் வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டன. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு வீடுகளிலேயே கடுமையான சிரமங்களை அனுபவித்தனர்.
மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக இல்லாத நிலை ஏற்பட்டதால், மூச்சுத்திணறலுடன் வரும் நோயாளிகள் ஆம்புலன்ஸ்களில் காத்திருக்கும் அவலநிலையும் ஏற்பட்டது. மேலும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதால், மயானங்களிலும் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டன.
கரோனா தொற்று பாதிப்பு 11 ஆயிரத்து 681 எனவும், மருத்துவம் பலனின்றி இறப்பு 53 என ஏப்ரல் 21ஆம் தேதி இருந்தது. தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட, தேர்தலில் நின்ற வேட்பாளர்களும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். முதல்முறையாக கரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி அனைவரும் முகக்கவசம் அணிந்தும், கைகளில் கையுறை அணிந்துகொண்டும் வாக்களித்தனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெற்றது. அதில் திமுக கூட்டணி 159 எண்ணிக்கையிலும், அதிமுக கூட்டணி 75 இடங்களிலும் வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் மே 7ஆம் தேதி பதவி ஏற்றார். தேர்தலில் வெற்றிபெற்றது முதல் அரசின் அலுவலர்களை அழைத்து கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கவும், இறப்புகளைக் குறைக்கவும் அறிவுறுத்தினார்.
கரோனா பாதிப்பு அதிகரித்து, மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுவதற்குத் தேவையான படுக்கை வசதிகள் இல்லாமல் ஆம்புலன்ஸ் வாகனங்களில் மூச்சுத்திணறலுடன் காத்திருக்கும் நிலைமை நீடித்தது. இதனைத் தொடர்ந்து கரோனா தொற்று கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டுவரப்பட்டது.
பொது முடக்கம் அறிவிக்கப்பட்டன. மேலும் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், ஐசியு படுக்கைகள், ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்குவதற்கு உற்பத்தி நிறுவனங்களிலிருந்து தொழிற்சாலை ஆக்சிஜன் பெறப்பட்டு, மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்டது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, வெளி மாநிலங்களிலிருந்தும் ஆக்சிஜன் பெறப்பட்டு நோயாளிகளுக்குச் செலுத்தப்பட்டன. மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் நோயளிகள் அவதிப்படுவதைத் தடுக்கவும், அவர்களுக்குப் படுக்கை வசதி, சிகிச்சை அளிப்பதை கண்காணிக்கவும் மே மாதம்13ஆம் தேதி கரோனா கட்டுப்பாட்டு அறை தொடங்கிவைக்கப்பட்டது.
https://stopcorona.tn.gov.in/covid-19-war-room/. கரோனா கட்டுப்பாட்டு அறையினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மே 15ஆம் தேதி நேரில் ஆய்வுசெய்தார். கரோனா தொற்று கட்டுப்படுத்துவதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் எனவும், அனைவரும் பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திவந்தார்.
மேலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கி சிசிக்கை பெறுவதற்கு கரோனா தனிமைப்படுத்தும் மையங்கள் அரசால் ஏற்படுத்தப்பட்டன. கரோனா தொற்று 2ஆவது அலையில் அதிகபட்சமாக மே மாதம் 21ஆம் தேதி 36 ஆயிரத்து 184 என அதிகரித்தது.
மேலும் ஒரு நாளைய இறப்பு 467 என்ற நிலையில் இருந்தது. இறப்பு எண்ணிக்கை மே 30ஆம் தேதி 493 என அதிகபட்சமாக பாதிப்பு இருந்தது. மே மாதம் 22ஆம் தேதிமுதல் கரோனா தொற்று புதிய பாதிப்பு குறையத் தொடங்கியது.
கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு போதுமான அளவிற்குத் தராமல் இருந்ததால், மாநில அரசே நேரடியாகக் கொள்முதல் செய்யும் என அறிவித்து, ஒப்பந்தப்புள்ளி கோரியது. ஆனால் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் கொள்முதல் செய்ய முடியாது என்பதால் அந்த முடிவை தமிழ்நாடு அரசு கைவிட்டது.
தனியார் மருத்துவமனைகளிலும் கரோனா சிகிச்சை அளிக்கப்படுவதை அரசு தொடர்ந்து கண்காணித்து முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கட்டணத்தைச் செலுத்தியது. தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தியதால், கரோனா தடுப்பூசிகள் அதிகளவில் அளிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு அரசு தனிக்கவனம் செலுத்தியது.
கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்பதால் தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும், இதனை மக்கள் இயக்கமாக மாற்றவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தினா்.
அதனைத் தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் தீவிரமாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
தடுப்பூசி செலுத்துவதற்குச் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு, வாரந்தோறும் செலுத்தப்பட்டுவருகிறது. டிசம்பர் 20ஆம் தேதி வரையில் ஏழு கோடியே 79 லட்சத்து 18 ஆயிரத்து 488 தடுப்பூசிகள் தமிழ்நாட்டில் முதல், இரண்டாம் தவணையில் செலுத்தப்பட்டுள்ளது. https://stopcorona.tn.gov.in/dashboard-3/.
இந்த நிலையில் தென்ஆப்ரிக்காவில் உருவான உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று நைஜீரியாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒருவருக்கு டிசம்பர் 9ஆம் தேதி கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.
அவர்களுக்கு கரோனா தொற்று இருந்தால் மரபணு மாற்றம் கண்டறிவற்கான பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் டிசம்பர் 28ஆம் தேதி வரையில் 45 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'மீண்டும் மிதக்கும் சென்னை! விடியா அரசின் அமைச்சர் ராஜினாமா செய்வாரா?'