ETV Bharat / city

'மாநிலப் பாடல் தமிழ்த்தாய் வாழ்த்து' பாடப்படும்போது எழுந்து நிற்பது கட்டாயம் - அரசாணை

author img

By

Published : Dec 17, 2021, 2:32 PM IST

tamilnadu state song  stalin annouced  government released statement  தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்து  பாடல் பாடப்படும்போது அனைவரும் எழுந்து நிற்க அரசாணை  மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய “நீராரும் கடலுடுத்த’’ எனும் பாடல்
அரசின் மாநிலப் பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்து–முதலமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக இனி தமிழ்த்தாய் வாழ்த்து இருக்கும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் பாடல் பாடப்படும்போது அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை: இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஆணையில், "தமிழர்களின் வாழ்வாக அவர்தம் உணர்வுக்கு ஒளியாகத் திகழ்வது தமிழ் மொழி. அத்தகைய ஒப்புயர்வற்ற உயர்தனிச் செம்மொழியாம் இலக்கண, இலக்கிய வளங்கள் நிறைந்த தமிழ் மொழியைத் தாயாகப் போற்றும் தமிழர், தம் அன்னையை வாழ்த்திப் பாட பொதுவான பாடல் ஒன்றை ஏற்க வேண்டும்.

இத்தகைய எண்ணங்களை உள்ளடக்கிய ஒரு பாடலை ஒரு நூற்றாண்டுக்கும் முன்னதாகவே வெளிப்படுத்தியுள்ளனர். இதனைத் தமிழறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும், இலக்கிய அமைப்புகளும், தமிழ்ச் சங்கங்களும், பொதுமக்களும் தொடர்ந்து வலியுறுத்திவந்துள்ளனர்.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் வரலாறு

தமிழ்நாட்டின் அனைத்து விழாக்களிலும் மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய “நீராரும் கடலுடுத்த’’ என்னும் பாடல் பாடப்பட வேண்டும் என்னும் கோரிக்கை 1913ஆம் ஆண்டைய கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டறிக்கையில் இடம்பெற்றது.

இந்தப் பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக, 1914ஆம் ஆண்டுமுதல், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாக்களில் பாடிவந்துள்ளார்கள். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைத் தாய்ச் சங்கமாகக் கொண்டு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் உருவான தமிழ்ச் சங்கங்களின் விழாக்களிலும் தொடக்கப் பாடலாக இப்பாடல் பாடப்பட்டது.

இதனைத் தமிழ்நாடு அரசின் பாடலாக அறிவிக்க வேண்டும் என்று அன்றைய முதலமைச்சர் அண்ணாதுரைக்கு, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினர் கோரிக்கையாக எழுதி அனுப்பியும் வைத்தனர்.

தமிழ்த்தாய் வாழ்த்தை அறிவித்த கருணாநிதி

தமிழறிஞர்கள், ஆர்வலர்கள், பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை ஏற்று 1970ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 11ஆம் தேதியன்று நடந்த அரசு விழாவில் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி பேசும்போது, ''இனி தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இருக்கும் என அறிவித்தார். அன்றே 'நீராருங் கடலுடுத்த' என்னும் மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய பாடலே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அமையும்’’ என்று அறிவித்தார்.

அதன்படியே 1891ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணீயம் நூலில் உள்ள பாயிரத்தில் “தமிழ்த் தெய்வ வணக்கம்’’ என்னும் தலைப்பிலுள்ள பாடலின் ஒரு பகுதியை தமிழ்த்தாயைப் போற்றும்வகையில் அமைந்த வரிகளைத் தேர்ந்தெடுத்து ஏற்றுக்கொண்டது.

இதனடிப்படையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை 1970 நவம்பர் 23 அன்று, கருணாநிதி தலைமையில் அமைந்த அன்றைய அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்து, அரசாணையும் வெளியிட்டுள்ளது.

அவ்வரசாணையைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அரசு விழாக்களில், கல்வி நிலையங்களில், பொது நிறுவனங்களில், பொது நிகழ்ச்சிகளின்போது நிகழ்வு தொடங்குவதற்கு முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டுவருகிறது.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நெறிமுறைகள்

இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படுவது குறித்து சில வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டிய காலச் சூழ்நிலையால் தமிழ் வளர்ச்சி - செய்தித் துறையின் மூலம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இசை வட்டுக்களைக் கொண்டு இசைப்பதைத் தவிர்க்கவும், பயிற்சி பெற்றவர்கள் மூலம் பாடல் நிகழ்ச்சியில் பாட வேண்டும் எனவும் சமீபத்தில் ஆணையிடப்பட்டுள்ளது.

புதிய அரசாணை

இந்நேரத்தில் அன்னைத் தமிழ் மொழியைப் போற்றிடும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படுவதை ஒருங்கிணைத்து, நெறிமுறைப்படுத்த வேண்டிய அவசிய நிலையில், கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என தற்போது அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு:

1. மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய கீழ்க்கண்ட வரிகளைக் கொண்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக அறிவிக்கப்படுகிறது. தமிழ்த்தாய் வாழ்த்தின் கீழ்க்காணும் வரிகள், 55 விநாடிகளில் முல்லைப்பாணி ராகத்தில் (மோகன ராகம்) மூன்றன் நடையில் (திசுரம்) பாடப்பட வேண்டும்,

”நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!”

2. தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்.

3. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும்.

4. மாற்றுத் திறனாளிகளுக்கு இவ்வரசாணையின்படி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படும்போது எழுந்து நிற்பதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

5. பொது நிகழ்வுகளில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' இசை வட்டுக்களைக் கொண்டு இசைப்பதைத் தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாகப் பாடப்பட வேண்டும்.

6. அன்னைத் தமிழின் பெருமையை உலகறியச் செய்வதிலும், இளம் தலைமுறையினருக்குக் கொண்டுசேர்ப்பதிலும், பொதுமக்களும், தனியார் அமைப்புகளும் பெரும்பங்காற்ற முடியும் என்பதால், தமிழ்நாட்டில் நடைபெறும் தனியார் அமைப்புகள் நடத்திடும் கலை, இலக்கிய, பொதுநிகழ்வுகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படுவது ஊக்குவிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பள்ளி கழிவறை சுவர் இடிந்து விபத்து - 3 மாணவர்கள் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.