ETV Bharat / city

காதுகேளாதோர் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்று சென்னை வந்தவர்களுக்கு உற்சாக வரவேற்பு

author img

By

Published : May 17, 2022, 9:00 PM IST

காதுகேளாதோர் ஒலிம்பிக் போட்டி
காதுகேளாதோர் ஒலிம்பிக் போட்டி

பிரேசில் நாட்டில் நடைபெற்ற காதுகேளாதோர் ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கப்பதக்கங்கள் வென்ற மதுரை மாணவிக்கும், 2 வெண்கலம் மற்றும் ஒரு சில்வர் பதக்கத்தை வென்ற சென்னையைச் சேர்ந்தவருக்கும் சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை: சர்வதேச அளவில் பிரேசிலில் நடந்த 24ஆவது காதுகேளாதோர் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக்கில், இந்திய அணியின் சார்பாக பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்று, அனிகா 3 தங்கப் பதக்கங்களும் சென்னையைச் சேர்ந்த பிரித்வி 2 வெண்கலம் மற்றும் ஒரு சில்வர் பதக்கமும் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

பிரேசில் நாட்டில் 24ஆவது காதுகேளாதோர் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக்போட்டி மே 1ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி முடிவடைந்தது. இதில் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயரட்சகன் என்பவரின் மகள் ஜெர்லின் அனிகா இறகு பந்து (Badminton) போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் கலந்து கொண்டு மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளார். அதேபோல், சென்னையைச் சேர்ந்த பிரித்வி இறகு பந்து (Badminton) போட்டியில் 2 வெண்கலம் மற்றும் ஒரு சில்வர் பதக்கத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார்.

விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு: இதையடுத்து பிரேசிலில் இருந்து இன்று (மே 17) சென்னை வந்த ஜெர்லின் அனிகாவையும், பிரித்வியும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மண்டல முதல் நிலை மேலாளர் சுஜாதா, SDAT மேலாளர், வெங்கடேஷ், தமிழ்நாடு காது கேளாதோர் விளையாட்டு கவுன்சில் தலைவர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் சென்னை விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து, மாலை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர்.

இதையடுத்து ஜெர்லின் அனிகாவின் தந்தை ஜெயரட்சகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், '2021-ல் நடக்க வேண்டிய போட்டிகள் 2022-ல் பிரேசிலில் நடைபெற்றது. ஒரு மாதமாக ஜெர்லின் அனிகா டெல்லியில் பயிற்சி மேற்கொண்டார். 2019-ல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார்.

சாதனைகள் தொடர ஊக்கத்தொகை வழங்கக் கோரிக்கை: முன்னதாக, தனது மகளின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக அரசு சார்பில் இருந்து ஆண்டிற்கு ரூ.10 லட்சம் ஒதுக்கிக் கொடுத்தார்கள். இது அவரது விளையாட்டுத் திறனை வளர்க்க எங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. உலகில் இன்று யாருமே காதுகேளாதோர் ஒலிம்பிக் போட்டிகளில் 3 தங்கம் எடுத்ததாக சரித்திரம் கிடையாது; தமிழ்நாட்டில் பிறந்து இந்த சாதனை புரிந்த என் மகளால் நான் பெருமைப்படுகிறேன்.

பிறந்ததிலிருந்து வாய் பேச முடியாமல் இருந்த ஜெர்லினை பற்றி தற்போது உலகமே பேசுகிறது; காதுகேளாதோர் ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பனுக்கு கொடுத்த ஊக்கத்தொகையைபோல் ஜெர்லினுக்கும் ஊக்கத்தொகை கொடுத்தால் அவர் மற்ற ஒலிம்பிக் போட்டிகளிலும் சென்று வெற்றி பெற ஊக்கமாக இருக்கும்' என்று அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளார்.

காதுகேளாதோர் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு உற்சாக வரவேற்பு
முதலமைச்சருக்கு நன்றி: பின்னர் பிரித்வி செய்தியாளர்களிடம் கூறியதாவது, '84 நாடுகள் பங்கேற்ற போட்டியில் மிகவும் கடுமையான சூழ்நிலையில் வெற்றி பெற்றுள்ளேன். இந்த காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டியில் முதல் முறை இந்தியா சார்பில் 3 பதக்கங்கள் வென்றுள்ளது நான் தான். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய உதவி செய்திருந்தார். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தாண்டு நடந்த போட்டியானது, கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த போட்டியைவிட கடினமானதாக இருந்தது. இருப்பினும், நான் எதை பற்றியும் யோசிக்காமல், 100 விழுக்காடு முயற்சி செய்தேன். அதனால், மூன்று பதக்கங்களை வென்றுள்ளேன்' என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

இதையும் படிங்க: மீண்டும் மகளிர் மினி ஐபிஎல் - களத்தில் மந்தனா, ஹர்மன்பீரித் கவுர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.