ETV Bharat / city

ஆனந்த் டெல்டும்டே உள்ளிட்டவர்களின் விடுதலைக்காக மனிதச் சங்கிலி போராட்டம்

author img

By

Published : Aug 29, 2021, 6:33 PM IST

tamil-nadu-untouchability-eradication-front-press-release-on-bhima-koregaon
ஆனந்த் டெல்டும்டே உள்ளிட்டவர்களின் விடுதலைக்கா மனிதச் சங்கிலிப் போராட்டம்

உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆனந்த் டெல்டும்டே உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்யக் கோரி செப்டம்பர் 15ஆம் தேதி மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

சென்னை: பீமா கொரேகான் சதி வழக்கில் சிறைப்படுத்தப்பட்டோர் விடுதலை இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பீமா கோரேகான் எழுச்சியை சகித்துக் கொள்ள முடியாத ஒன்றிய பாஜக அரசினால் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச்சட்டத்தின் (உபா) கீழ் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்ட ஸ்டான் சாமி சிறையிலேயே மரணம் அடைந்தார்.

இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே, ஜோதி ரகோபா ஜக்தாப், சாகர் டாட்யாராம் கோர்கே, ரமேஷ் முரளிதர் கெய்சோர், சுதிர் தாவ்லே, சுரேந்திர கேட்லிங், மகேஷ் ராவுத், ஷோமா சென், ரோனா வில்சன், அருண் பெரைரா, சுதா பரத்வாஜ், வரவரராவ், வெரோன் கன்சால்வ்ஸ், கவுதம் நவ்லாகா, ஹனி பாபு ஆகிய 15 பேரும் இப்பொழுதும் நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கி சிறையில் இருக்கிறார்கள்.

இவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும். இதே போல் நாடு முழுவதும் அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அனைவரையும் விடுதலை செய்திட வேண்டும் என்ற முழக்கத்துடன் தீண்டாமை ஒழிப்பு முன்னணியால் ஒருங்கிணைக்கப்படுள்ள பீமா கொரேகான் சதி வழக்கில் சிறைப்படுத்தப்பட்டோர் விடுதலை இயக்கம், செப்டம்பர் 15ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டத்தை நடத்தவுள்ளது.

மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய, மனித உரிமை, பெண்ணுரிமை ஆகிய தளங்களில் பணியாற்றும் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஜனநாயக இயக்கங்கள் ஒருங்கிணைந்து நடத்துகிற இந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் தமிழ்நாடு மக்கள் அனைவரும் கைகோர்த்திட வேண்டும். அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் இப்போராட்டத்துக்கு தங்கள் ஆதரவினை வழங்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பீமா கோரேகான் வழக்கு: சரத் பவாரின் வாக்குமூலத்தை பதிவு செய்ய முடிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.