ETV Bharat / city

பன்னாட்டு விமான சேவை மீண்டும் தொடக்கம்

author img

By

Published : Nov 29, 2021, 12:43 PM IST

இன்று முதல் விமான சேவைகள் தொடக்கம்
இன்று முதல் விமான சேவைகள் தொடக்கம்

கரோனா வைரஸ் காரணமாக ரத்துசெய்யப்பட்டிருந்த சிங்கப்பூா் ஏா்லைன்ஸ் விமான சேவை, 20 மாதங்களுக்குப் பின்பு இன்றுமுதல் (நவம்பர் 29) மீண்டும் தொடங்கியுள்ளது.

சென்னை: கரோனா பெருந்தொற்று வைரஸ் காரணமாக இந்தியாவில் வெளிநாட்டு விமான சேவைகள் அனைத்தும் 2020 மார்ச் 25ஆம் தேதியிலிருந்து ரத்துசெய்யப்பட்டன.

அதன்படி சென்னை விமான நிலையத்திலும், அனைத்து பன்னாட்டு விமானங்களும் ரத்துசெய்யப்பட்டன. அதன்பின்பு 2020 மே 9ஆம் தேதியிலிருந்து சில குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் வந்தே பாரத் மீட்பு விமானங்களும், சில சிறப்பு விமானங்களும் மட்டும் இயக்கப்பட்டுவருகின்றன.

முதலமைச்சரின் கடிதம்

இதற்கிடையே தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த வாரம் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில், "சென்னையிலிருந்து சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு மீண்டும் விமான சேவைகளை உடனே தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நாடுகளில் தமிழர்கள் ஏராளமானவர்கள் வசித்துவருகின்றனர்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் மத்திய அரசு வரும் டிசம்பர் 15ஆம் தேதியிலிருந்து அனைத்துப் பன்னாட்டு விமான சேவைகளும் இயங்க அனுமதி அளித்திருந்தது. அத்தோடு சிங்கப்பூர்-இந்தியா இடையே விமான சேவைகள் உடனடியாகத் தொடங்க அனுமதி அளித்துள்ளது.

அதன்பேரில் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு இன்றிலிருந்து நாள்தோறும் விமான சேவைகளை சிங்கப்பூர் ஏா்லைன்ஸ் விமான நிறுவனமும், இண்டிகோ ஏா்லைன்ஸ் விமான நிறுவனமும் தொடங்குகின்றன.

சிங்கப்பூர் ஏா்லைன்ஸ் விமானம் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்குச் சென்னை பன்னாட்டு விமான நிலையம் வந்து சேர்கிறது. மீண்டும் இரவு 11.15 மணிக்குச் சென்னையிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் செல்கிறது. அதைப்போல் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் மாலை 3 மணிக்குச் சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டு, நள்ளிரவு 12.30 மணிக்குச் சென்னைக்குத் திரும்பிவருகிறது.

தடுப்பூசி சான்றிதழ்கள் அவசியமா... நெகட்டீவ் சான்றிதழ் அவசியமா?

சென்னை - சிங்கப்பூர் - சென்னை இடையே கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிக்கொண்டிருந்த சிங்கப்பூர் ஏா்லைன்ஸ் விமானம் 2020 மார்ச் 25ஆம் தேதியிலிருந்து ரத்துசெய்யப்பட்டிருந்தது. தற்போது 20 மாதங்களுக்குப் பின்பு மீண்டும் சென்னை - சிங்கப்பூர் - சென்னை இடையே நேரடி பயணிகள் விமான சேவைகள் தொடங்கியுள்ளன.

இன்று முதல் விமான சேவைகள் தொடக்கம்
இன்றுமுதல் விமான சேவைகள் தொடக்கம்

இந்த விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போட்டு, அதற்கான சான்றிதழ்கள் வைத்திருக்க வேண்டும். அத்தோடு 48 நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கரோனா வைரஸ் நெகட்டீவ் சான்றிதழும் அவசியம். சிங்கப்பூர் விமான சேவை தொடங்கியதால், சென்னையிலிருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்குச் செல்லும் விமான பயணிகளுக்கும் இது இணைப்பு விமானமாக இருக்கும்.

அதைப்போல் இந்த விமான சேவையால் தமிழ்நாடு பயணிகள் மட்டுமின்றி, ஆந்திரா, புதுச்சேரி, அந்தமான் பயணிகளுக்கும் மிகவும் வசதியாக இருக்கும். சிங்கப்பூர் ஏா்லைன்ஸ் விமானம் நிறுவனம் இன்றிலிருந்து டெல்லி, மும்பையிலிருந்தும் சிங்கப்பூருக்கு நேரடி விமானங்களை இயக்குகிறது.

இதையும் படிங்க: Omicron Variant Virus: கோவை விமான நிலையத்தில் ஒமைக்ரான் தொற்றுப் பரிசோதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.