ETV Bharat / city

அஸ்ஸாம் யானைகளை திருப்பி அனுப்புவதாக இல்லை: தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் பதில்

author img

By

Published : Sep 15, 2022, 7:32 PM IST

Etv Bharat
Etv Bharat

அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து பெறப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் பராமரிக்கப்படும் 9 யானைகளையும் திருப்பி, அம்மாநிலங்களுக்கு அனுப்பப்போவதில்லை என்று தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

சென்னை: அஸ்ஸாம் அரசிடமிருந்து தமிழ்நாடு அரசு பெற்ற திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜெயமாலா யானை உட்பட ஒன்பது யானைகளையும் திருப்பி அனுப்பக்கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசு அவற்றைத் திருப்பி அனுப்பப் போவதில்லை என்று இன்று (செப்.15) சென்னை உயர் நீதிமன்றத்தில் கூறியதைத் தொடர்ந்து, நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பராமரிக்கப்படும் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து பெறப்பட்ட யானை ஜெயமாலாவை, அதன் பாகன்கள் வினைல் குமார், சிவ பிரசாத் ஆகியோர் துன்புறுத்துவது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின. கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள ஒன்பது கோயில்களுக்கு 2010-2015ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட யானைகளை திரும்பப் பெற அஸ்ஸாம் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதையடுத்து, அஸ்ஸாம் அரசிடமிருந்து தமிழ்நாடு அரசு பெற்ற ஒன்பது யானைகளையும் திருப்பி அனுப்பத் தடை விதிக்க கோரி, மயிலாடுதுறையைச் சேர்ந்த சிவகணேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனுவில், 'தமிழ்நாட்டில் கோயில் யானைகளைப் பராமரிக்க மாநில மற்றும் மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும், ஆண்டுக்கு ஒரு முறை கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

திருவில்லிபுத்தூர் யானை துன்புறுத்தப்பட்ட சம்பவத்தை அடுத்து இரு பாகன்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அஸ்ஸாமில் இருந்து கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு கோயில்களில் பராமரிக்கப்பட்டு வரும் இந்த யானைகளை மீண்டும் அஸ்ஸாமுக்கு அனுப்புவது என்பது மத உணர்வுகளைப் புண்படுத்தும். கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட யானைகளை மீண்டும் சுவாதீனம் எடுத்துக்கொள்ள முடியாது என்பதால் 9 கோயில் யானைகளையும் யாரிடமும் ஒப்படைக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அடங்கி அமர்வில் இன்று (செப்.15) விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், தமிழ்நாட்டில் உள்ள ஒன்பது கோயில்களில் பராமரிக்கப்படும் அஸ்ஸாம் மாநிலத்தைச் சார்ந்த யானைகளை திருப்பி அனுப்பப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: 'ஜெயமாலா யானையை மீட்க உதவ வேண்டும்...!' - அஸ்ஸாம் அரசு நீதிமன்றத்தில் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.