நடிகர் சூர்யா நடித்துள்ள, 'ஜெய் பீம்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு, நவம்பர் 2ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இத்திரைப்படம் வெளியானது.
இப்படத்தில் சூர்யா 'வழக்கறிஞர் சந்துரு' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குரலற்றவர்களின் உரிமைகளை மீட்டெடுக்க, உண்மையை வெளிக்கொணர அயராது உழைக்கும் வழக்கறிஞர் சந்துருவாக சூர்யா நடித்துள்ளார்.
த.செ.ஞானவேல் இயக்கத்தில், 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சூர்யா நடித்துள்ள, 'ஜெய் பீம்' திரைப்படத்தில், ரெஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இருளர் இன மக்களுக்கு நேர்ந்த அநீதியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி, பொதுச் சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் பாராட்டிவருகின்றனர்.
அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தமிழ்த் திரைப்பட வரலாற்றிலொரு ஒப்பற்ற திரைக்காவியமாக , 'ஜெய் பீம்' வந்திருப்பதாகக் கருதுகிறேன்.
படம் அல்ல பாடம்
அதிகாரத்தின் கூர்முனைகள் எளிய மக்களின் வாழ்வினை கோரமாகக் குத்திக்கிழிக்கிற பார்க்க இயலா அவலங்களைப் படமாக ஆவணப்படுத்தி, பாடமாக மாற்றியிருக்கின்ற இத்திரைப்படத்தின் இயக்குநர் தம்பி ஞானவேல் அவர்களை உச்சி முகர்ந்து பாராட்டுகிறேன்.
காலம் காலமாக புறக்கணிக்கப்படும் ஆதிக்குடிகளின் வாழ்வியல் படைப்பு ஒன்றை வணிகக் காரணங்களுக்காகத் துளியளவும் சிதைக்காமல் தயாரித்து நடிக்க முன்வந்ததும், ஒரு வெற்றிப்படமாக சகல விதத்திலும் உருவாக்கித் தந்த தம்பி சூர்யாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
அத்தனை உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் கலைஞன் சூர்யா
தனது வழக்கறிஞர் பணியிலும், நீதியரசரான பிறகும் தனது நேயமிக்கச் செயல்பாடுகளாலும் மாற்றியமைத்து நேர்மை செய்த பெருமகன் மக்கள் நீதியரசர் பெருமதிப்பிற்குரிய ஐயா சந்துரு அவர்களின் கதாபாத்திரத்தை ஏற்று, அப்படியே திரையில் நிறுத்தி, விழி, மொழி, கண்ணசைவு, ஆற்றாமை, கோபம், பரிதவிப்பு என அனைத்து உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தித் தேர்ந்த நடிப்பால் நெகிழச் செய்திருக்கிறார், தம்பி சூர்யா.
தம்பி மணிகண்டன், கதை நாயகி தங்கை லிஜோமோல் ஜோஸ் ஆகிய இருவரும் அளவற்ற திறமையை வெளிப்படுத்தி, இயல்பான நடிப்பினால் இக்கலைப் படைப்பிற்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.
எனதன்புச் சகோதரன் பிரகாஷ்ராஜ் தனது தேர்ந்த முதிர்ச்சியான நடிப்பினால் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்.
காவல் துறை உதவி ஆய்வாளராக வரும் எனதன்பு இளவல் தமிழ் அவர்கள் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார்.
சுருக்கமாக சொன்னால், ஜெய்பீம் ஆதிக்கத்திற்கெதிரான போர்க்கருவி' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை