ETV Bharat / city

வனக்குற்றங்கள் தடுப்பு பிரிவு: ஆலோசனைகளை வழங்க குழு அமைப்பு

author img

By

Published : Mar 17, 2022, 10:59 PM IST

வனக்குற்றங்கள் தடுப்பு பிரிவு குழு அமைக்கப்படும்- தமிழ்நாடு அரசு
வனக்குற்றங்கள் தடுப்பு பிரிவு குழு அமைக்கப்படும்- தமிழ்நாடு அரசு

வனக்குற்றங்கள் தடுப்பு பிரிவை மீண்டும் அமைப்பது குறித்து ஆலோசனைகளை வழங்க தலைமை முதன்மை வனப்பாதுகாவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை:வன விலங்குகள் வேட்டை, வனக் குற்றங்கள் தடுப்பு ஆகியவை தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வனத்துறை மற்றும் ரயில்வே தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த அறிக்கைகளில் தடுப்புச்சுவர் கட்டுமானம் அகற்றப்பட்டது தொடர்பான தகவல்கள் இடம்பெற்றிருந்தாலும், கண்காணிப்பு கோபுரம், சூரிய ஒளி வேலிகள், சுரங்க வழிப்பாதை ஆகியவை குறித்து முழுமையான தகவல் இல்லை எனச் சுட்டிக்காட்டினர்.

பணிகளை விரைவுபடுத்த வேண்டுமென அறிவுறுத்திய நீதிபதிகள், வனக்குற்றங்கள் தடுப்பு பிரிவை மீண்டும் அமைப்பது குறித்த அரசின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில்,

தலைமை முதன்மை வனப்பாதுகாவலர் சேகர் குமார் நீரஜை தலைவராகவும், காவல்துறை ஐ.ஜி. முருகன், வருவாய் புலனாய்வுத் துறை அலுவலர் ஒருவர் ஆகியோரை உறுப்பினர்களாகவும், உதவி தலைமை முதன்மை வனப்பாதுகாவலரை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். வனக்குற்றங்கள் தடுப்பு பிரிவை மீண்டும் அமைப்பது குறித்து ஆலோசனைகளை வழங்க இருப்பதாகவும், அதைத் தெரிவிக்க அவகாசம் வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கு விசாரணையை மார்ச் 25ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.இதற்கிடையில் கொடைக்கானல், ஆனைமலை ஆகிய இடங்களில் ஏற்பட்ட காட்டுத் தீ பற்றி நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் நீரஜ் குமார் சேகர் ஆஜராகி காட்டுத் தீ 24 மணி நேரத்தில் அணைக்கப்பட்டுவிட்டதாகவும், மனிதர்களோ, வனவிலங்குகளோ பலியாகவில்லை என விளக்கம் அளித்தார்.

இதையும் படிங்க:ஆடைகளைக் கழற்றாமல் சீண்டுவதும் பாலியல் குற்றமே: மேகாலயா நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.