ETV Bharat / city

சலசலப்பில் முடிந்த தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக்கூட்டம்!

author img

By

Published : Sep 18, 2022, 8:06 PM IST

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2022ஆம் ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டம் சலசலப்பில் முடிந்தது.

சலசலப்பில் முடிந்த தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம்!
சலசலப்பில் முடிந்த தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம்!

சென்னை: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2022ஆம் ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பார்கள் சங்கத்தின் தலைவர் முரளி இராம நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திரைப்படத் தயாரிப்பாளர்கள் எஸ்.பி. முத்துராமன், மன்சூர் அலிகான், ஆர்.வி. உதயகுமார், மனோபாலா, சக்தி சிதம்பரம், எஸ்.ஏ. சந்திரசேகர், எர்ணாவூர் நாராயணன், ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட சுமார் 300 தயாரிப்பாளர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தின்போது சங்கத்தின் கணக்கு வழக்குகள் தொடர்பாகவும் தீர்மானங்கள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. இதில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டபோது, சங்க விதிகளை திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக எழுந்த தீர்மானத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

மேலும் தேர்தல் தேதியை அறிவிக்கவில்லை எனவும்; தலைவர் பதவிக்குப் போட்டியிட ஏற்கெனவே தலைவர், செயலாளர் உள்ளிட்டப் பதவிகளில் இருந்திருக்க வேண்டுமெனவும் திருத்தம் மேற்கொண்டதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு கூட்டம் நிறைவுற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் சதீஷ், ’ தலைவர் பதவிக்கு ஏற்கெனவே தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியில் இருந்தவர் மட்டுமே போட்டியிட வேண்டும் என பைலாவில் உள்ளது.

ஒரு படம் 25 திரையரங்கில் வெளியிட்ட நபர் மட்டும் வாக்களிக்க முடியும் எனக்குறிப்பிட்டுள்ளார்கள். இது ஜனநாயகத்திற்கு எதிரான ஒன்று. பொதுக்குழுவில் வரவு செலவு கணக்கு மட்டும் தான் ஏற்றுக் கொள்ளப்பட்டது. சுரேஷ், S.A. சந்திரசேகர், ஆர். வி. உதயகுமார் உள்ளிட்டோர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

மொத்தம் 1500 பேர் உள்ளனர். அதில் 300 நபர்கள் மட்டுமே பொதுக்குழுவில் பங்கேற்றனர். பொதுக்குழு பாதியில் முடிக்கப்பட்டுள்ளது. செயற்குழு உறுப்பினர் ஆர்.வி. உதயகுமார் பேசும்போது பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது. சங்க விதிகளில் மாற்றம் என்பது ஏற்க முடியாத ஒன்றாக உள்ளது. நடப்பு தயாரிப்பாளர் சங்கம் எனப் பாதி பேர் போய்விட்டார்கள்.

ஏற்கெனவே மூன்று சங்கம். அதில் டி.ஆர் ஒரு சங்கம் ஆரம்பித்தார். விதி மாற்றங்களை ஏற்க முடியாதவையாக உள்ளார்’ என்றார்.

தலைவர் முரளி ராம நாராயணன் பேசும்போது, ’7 ஆண்டுகள் கழித்து இந்த பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு நடத்துவதற்கு இடம் கொடுத்த முதலமைச்சருக்கும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதிக்கும் நன்றி. 5,6 நபர்கள் மட்டுமே இந்த தீர்மானத்தை எதிர்த்தார்கள்’ என்று தெரிவித்தார்.
செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது, ’நூற்றுக்கு 95 விழுக்காடு ஆதரவு இருந்தது. ஐந்து விழுக்காடு மட்டும் ஆதரவு இல்லை. அனைத்து தீர்மானங்களும் பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட்டன’ என்றார்.

சலசலப்பில் முடிந்த தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம்!
சலசலப்பில் முடிந்த தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக்கூட்டம்!
எஸ்.வி. சேகர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, ’பலரது ஆதரவைப் பெற்று பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. இதற்கு முன்பு பொறுப்பில் இருந்தவர்கள் 13 கோடி ரூபாயை வீண் செய்துள்ளார்கள். அதனை மீட்கும் பொருட்டு செயல்பட வேண்டும். தென் இந்தியாவில் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். சினிமாவில் உள்ளவர்களே சினிமாவில் இருப்பவர்களை ஏமாற்றுவது சரியானது அல்ல. தீர்மானம் பெரும்பகுதி மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது’ என்றார்.

இதையும் படிங்க: 'இனி நான் உங்கள் கால்களில் விழுவேன்...!' - ராகவா லாரன்ஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.