ETV Bharat / city

ரவுடி போலீஸ்: மாமூல் தர மறுத்த வியாபாரிக்கு வெட்டு!

author img

By

Published : Feb 25, 2022, 6:12 PM IST

சாலையோரப் பூக்கடை வியாபாரியிடம் மாமூல் கேட்ட காவலர் மாமூல் தர மறுத்ததால் வியாபாரியை கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாலையோரப் பூக்கடை வியாபாரியிடம் மாமூல் கேட்ட காவலர்
சாலையோரப் பூக்கடை வியாபாரியிடம் மாமூல் கேட்ட காவலர்

சென்னை: தாம்பரம் சானடோரியம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (50). இவர் கிழக்கு தாம்பரம் பாரத மாதா சாலையில் அமைந்துள்ள விநாயகர் கோயில் அருகில் 40 ஆண்டுகளாகப் பூக்கடை நடத்திவருகிறார்.

பூக்கடை அருகில் சேலையூர் காவல் நிலைய உதவி மையம் அமைந்துள்ளது. இந்த நிலையில் வழக்கம்போல் கடந்த 19ஆம் தேதி வெங்கடேஷ் பூக்கடையை நடத்திக் கொண்டிருந்தார்.

அப்போது சேலையூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் மணிவண்ணன் இந்தப் பகுதியில் கடை நடத்தக் கூடாது, அப்படி நடத்த வேண்டுமென்றால், தினமும் மாமூல் 200 ரூபாய் தர வேண்டுமெனக் கூறியுள்ளார். மாமூல் தர மறுத்தால் கடையை நடத்த விடமாட்டோம் என்று மிரட்டியுள்ளார்.

சாலையோரப் பூக்கடை வியாபாரியிடம் மாமூல் கேட்ட காவலர்

கடையின் உரிமையாளர், இந்தக் கடையை வைத்துதான் குடும்பத்தை நடத்த வேண்டும், தினமும் மாமூல் கேட்டால் நான் என்ன செய்ய முடியும் எனக் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த காவலர் மணிவண்ணன் அங்கிருந்து சென்றுள்ளார்.

இதையடுத்து மறுநாள் அங்குச் சென்ற காவலர் மணிவண்ணன் பூக்கடை நடத்திக் கொண்டிருந்த வெங்கடேசனிடம், மாமூல் கேட்டால் தராமல் பூக்கடை நடத்துகிறாயா எனக் கூறி கடையை அடித்து நொறுக்கி கூடையில் வைத்திருந்த பூக்களை சாலையில் தூக்கி வீசியுள்ளார்.

காவலரின் அருவருக்கத்தக்க செயல்

அப்பொழுது வெங்கடேஷ் காவலரைத் தடுக்க முயன்றபோது, காவலர் மணிவண்ணன் இருசக்கர வாகனத்தின் சாவியில் வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்து வெங்கடேஷின் கன்னத்தில் வெட்டியுள்ளார். இதில் வெங்கடேசன் முகம், சட்டை முழுவதும் ரத்தம் கசிந்துள்ளது. பின்னர் காவலர் மணிவண்ணன் அங்கிருந்து சென்றுள்ளார்.

இதனையடுத்து வெங்கடேஷ் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முகத்தில் 35 தையல்கள் போடப்பட்டன. பின்னர் இது குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால் சம்பந்தப்பட்ட காவலர் மீது காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என வெங்கடேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் தாம்பரம் காவல் ஆணையரகத்திற்குச் சென்று புகார் அளித்தபோது, அங்கிருந்த காவலர் ஒருவர் நீங்கள் சேலையூர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளியுங்கள் எனக் கூறியுள்ளார்.

இதனால் விரக்தியடைந்த வெங்கடேஷ், என்னை வெட்டிய காவலர் பணிபுரியும் காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளிக்க கூறுகிறீர்களே என வேதனையுடன் அங்கிருந்து சென்றுள்ளார்.

தாம்பரம் காவல் ஆணையர் ரவி சம்பந்தப்பட்ட காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட நபர் கோரிக்கைவைத்துள்ளார்.

குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டிய காவல் துறையினரே இதுபோன்ற அருவருக்கத்தக்க செயலில் ஈடுபடுவது மிகவும் வேதனைக்குரிய செயலாக அமையவதோடு, அவப்பெயரையும் ஏற்ப்படுத்துகிறது.

இதையும் படிங்க: பாஜக நிர்வாகி ஒருவருக்கு முன்பிணை, மற்றொருவருக்கு மறுப்பு

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.