ETV Bharat / city

பாஜக நிர்வாகி ஒருவருக்கு முன்பிணை, மற்றொருவருக்கு மறுப்பு

author img

By

Published : Feb 25, 2022, 2:37 PM IST

ஆக்கிரமித்ததாகச் சொல்லி கோயில்களை அகற்றும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை விமர்சித்த வழக்குகளில் பாஜக இளைஞரணித் தலைவர் வினோஜ் பி. செல்வத்திற்கு முன்பிணை வழங்கியும், பாஜக செயற்குழு உறுப்பினர் சௌதாமணிக்கு முன்பிணை மறுத்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயில் இடிப்பு மீது விமர்சனம்
கோயில் இடிப்பு மீது விமர்சனம்

சென்னை: ஆக்கிரமிப்பு நிலங்களில் இருப்பதாகக் கூறி கோயில்கள் இடிக்கப்படுவது தொடர்பான செய்தியை மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டும்வகையில் தமிழ்நாடு பாஜக இளைஞரணித் தலைவர் வினோஜ் பி. செல்வம், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்ததாகப் புகார் ஒன்று அளிக்கப்பட்டது.

இதன் புகாரை அடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

சர்ச்சையான ட்விட்டர் பதிவுகள்

ஆக்கிரமிப்பில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் இடிக்கப்படவில்லை என ஒருவர் பேசிப் பகிர்ந்த காணொலியை, தமிழ்நாடு பாஜக செயற்குழு உறுப்பினர் சௌதாமணி, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்ததாக அளிக்கப்பட்ட புகாரில் தனியாக ஒரு வழக்குப் பதியப்பட்டது.

VINOJ B SELVAM, மனோஜ் பி செல்வம்
மனோஜ் பி. செல்வம்

இந்த வழக்குகளில் முன்பிணை கோரி, இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல்செய்திருந்தனர். அந்த வழக்குகள் நீதிபதி ஆர். பொங்கியப்பன் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, காவல் துறைத் தரப்பில், 'வினோஜ் செய்தியைப் பகிர்ந்ததைத் தாண்டி அரசின் செயல்பாட்டை தேர்தல் நடவடிக்கைகளுடனும், மதத்தைத் தொடர்புபடுத்தியும் விமர்சித்திள்ளார்' எனத் தெரிவிக்கப்பட்டது. அதேபோன்று, சௌதாமணியின் ட்விட்டர் பகிர்வால் மதக்கலவரம் தூண்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சௌதாமணி, Sowdhamani
சௌதாமணி

இந்நிலையில் இந்த இரு வழக்குகளிலும் நீதிபதி பொங்கியப்பன் இன்று (பிப்ரவரி 25) பிறப்பித்துள்ள தீர்ப்பில், வினோஜ் பி. செல்வத்திற்கு முன்பிணை வழங்கியும், சௌதாமணிக்கு முன் பிணை வழங்க மறுத்தும் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: திம்பம் இரவு நேர போக்குவரத்து தடை விவகாரம்: மாவட்ட ஆட்சியர் பதில் மனு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.