ETV Bharat / city

சி.வி.சண்முகத்திற்கு நீண்ட காலமாக வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ்

author img

By

Published : Nov 7, 2021, 9:38 AM IST

Updated : Nov 7, 2021, 9:47 AM IST

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாகக் காவல் துறை தரப்பு தெரிவித்துள்ளது.

விழுப்புரம்: அதிமுக முன்னாள் அமைச்சரான சி.வி. சண்முகம், கடந்த 2006ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திண்டிவனம் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது, திமுக கூட்டணியில் திண்டிவனம் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது. அந்த தேர்தலில், சி.வி. சண்முகம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளரான கருணாநிதியை வீழ்த்தினார்.

இதையடுத்து, தேர்தல் முடிவுகள் வெளியான அன்று சி.வி. சண்முகம் தனது ஆதரவாளர்களுடன் வீட்டிலிருந்தபோது, அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அவர் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் இருந்து சி.வி. சண்முகம் உயிர் தப்பினாலும், அவரின் ஆதரவாளரான முருகானந்தம் கொலை செய்யப்பட்டார்.

ராமதாஸ், அன்புமணி மீது குற்றச்சாட்டு

கொலை முயற்சி தாக்குதலுக்கு பாமகவினர்தான் காரணம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ், திண்டிவனம் பாமக வேட்பாளரும், பாமக தலைமை நிலைய செயலாளருமான கருணாநிதி உள்பட 26 பேரின் மீது சி.வி. சண்முகம் புகார் அளித்தார்.

ramadoss, anbumani, ராமதாஸ், அன்புமணி, பாமக, சி.வி.சண்முகம் பாமக
ராமதாஸ் - அன்புமணி

அவர் அளித்த புகாரின் மீது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை முடிவில் ராமதாஸ், அன்புமணி, கருணாநிதி ஆகிய மூவரின் பெயர்களும் நீக்கப்பட்டு, 15 பேர் மீது வழக்குப்பதிவானது.

சிபிஐ விசாரணை

இதனைத் தொடர்ந்து, அவரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாததால், சி.வி. சண்முகம் காவல் துறை பாதுகாப்பு தனக்கு வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

பின்னர், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சி.வி. சண்முகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர, கடந்த 2012ஆம் ஆண்டு முருகானந்தம் கொலை வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன்பின்னரே, சி.வி. சண்முகம் வீட்டிற்கு 24 மணிநேரமும் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டது.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்

மேலும், அவர் கலந்துகொள்ளும் நிகழ்வுகள் என அனைத்து இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் உள்பட பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் அங்கு அளிக்கப்படும்.

விலக்கப்பட்ட பாதுகாப்பு

இந்நிலையில், தமிழ்நாடு மாநில பாதுகாப்பு ஆணையம், பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லாதவர்கள் யார் யார் என்ற முறையில் ஆய்வு மேற்கொண்டது. அதில், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகமும் இடம்பெற்றுள்ளார். இதனால், தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான நவ. 3ஆம் தேதி முதல் அவருக்கு வழங்கப்பட்டு வந்த காவல் துறை பாதுகாப்பு விலக்கப்பட்டதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.வி. சண்முகம், 2001, 2006ஆம் ஆண்டுகளில் திண்டிவனம் தொகுதியில் இருந்தும், 2011, 2016ஆம் ஆண்டுகளில் விழுப்புரம் தொகுதியில் இருந்தும் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நடந்த முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விழுப்புரத்தில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் ஆர். லஷ்மணனிடம் தோல்வியடைந்தார்.

முந்தைய அதிமுக அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம், அதற்குமுன் ஜெயலிலிதா ஆட்சிக்காலங்கான 2003 முதல் 2006 வரையிலும், 2011 முதல் 2012 வரையிலும் அமைச்சராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளராக அமுதா ஐ.ஏ.எஸ் நியமனம்

Last Updated :Nov 7, 2021, 9:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.