தமிழ்நாட்டில் வேகமாகப் பரவும் பிஏ 4, பிஏ5 வகை கரோனா - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

author img

By

Published : Jun 23, 2022, 4:19 PM IST

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் ()

தமிழ்நாட்டில் கரோனா பரவலின் பெரும்பகுதி வேகமாகப் பரவும் தன்மை உடைய பிஏ-4, பிஏ-5 என்ற வகை கரோனாவாக தான் உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பரவலின் பெரும் பகுதி பிஏ-4, பிஏ-5 என்ற வகை கரோனாவாகத் தான் உள்ளதாகவும், அவை வேகமாக பரவும் தன்மை உடையதாக உள்ளது எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்தில் கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்ட கஸ்தூரி பாய் நகர் 3ஆவது பிரதான சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஜூன்23) ஆய்வு செய்தார். மேலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களை நேரடியாக சந்தித்து அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், 'உலகம் முழுவதிலும் கரோனா தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, 7 முதல் 8 மாநிலங்களில் 1,000 முதல் 6,000 வரை தொற்றின் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் பதிவாகியுள்ளது.

உலகம் முழுவதிலும் 8 முதல் 10 நாடுகளில் 8,000 தொடங்கி ஒரு லட்சம் வரையில் தொற்றின் பாதிப்பு உயர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

சென்னையில் தொடரும் பாதிப்பு எண்ணிக்கை: இந்தத் தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் அனைத்து இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 24 மணிநேரத்தில் ஏற்படுகிற தொற்றின் விழுக்காட்டில் 50 விழுக்காடு தொற்று பாதிப்பு சென்னையில் மட்டும் ஏற்படுவதனால், தொடர்ந்து சென்னையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னையில் 112 தெருக்களில் 3 நபர்களுக்கு மேலும், 25 தெருக்களில் 5 நபர்களுக்கு மேற்பட்டவர்களுக்கும் தொற்று பாதிப்பு உள்ளது. மொத்தமாக சென்னையில் இன்று 2,225 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 92 விழுக்காடு நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பாதிப்புகள் இருப்பின் மருத்துவமனைக்குச்செல்லவேண்டும்: கரோனா தொற்று பாதித்தவர்களில் 8 விழுக்காடு நபர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த 8 விழுக்காடு நபர்களும் மாநகராட்சி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவதற்குப் போதுமான இடவசதி இல்லாத 5 நபர்கள் மட்டும் தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

கரோனா தொற்று பாதித்த 2,225 நபர்களுக்கும் எந்தவிதமான உயிர்ப்பாதிப்பும் இல்லை என்கின்ற நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கரோனா தொற்று பாதித்த அனைவருக்கும் காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு முன்பு அவர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற சிறிய அளவிலான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவர்களின் ஆலோசனையை பெறுவது மிகவும் அவசியமானது. அவர்களைப் பரிசோதித்து விட்டு மீண்டும் பாதிப்பு இல்லை என்றால் பள்ளிக்கு அனுப்பலாம்.

மக்கள் ஒத்துழைத்தால் தொற்றைத் தடுக்கலாம்: ஒரு குழந்தைக்கு தொற்றுப் பாதிப்பு இருந்தால் அது நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். சிறிய அளவில் சளி, இருமல் போன்ற பாதிப்பு என்று அலட்சியமாக இல்லாமல் பரிசோதனை மேற்கொண்டால் மற்ற குழந்தைகளுக்கு அந்தப் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். எனவே, பெற்றோர்கள் இதனைக்கருத்தில் கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு
தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு
தற்போது கரோனா பரவலின் பெரும் பகுதி பிஏ-4, பிஏ-5 என்ற வகை கரோனாவாகத் தான் உள்ளது. இவை வேகமாக பரவும் தன்மை உடையது என்பது நிரூபணமாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் வருகிற ஜூலை மாதம் 10ஆம் தேதி 1 லட்சம் இடங்களில் 31ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மீண்டும் அதிகரிக்கும் கரோனா; தயார் நிலையில் திருவள்ளூர் மாவட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.