ETV Bharat / city

போட்டோ எடுக்குறதுக்காக மட்டும் வந்தாங்க..! மருத்துவத்தை தேடி அலையும் மக்கள்..? எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு...

author img

By

Published : Aug 7, 2022, 3:27 PM IST

வெற்று விளம்பரத்திற்காக மக்களைத் தேடி மருத்துவம் என்று அறிவித்துவிட்டு, முதலமைச்சரை வைத்து`போட்டோ ஷூட்’ நடத்திவிட்டு, மருத்துவத்தைத் தேடி மக்களை அலைய வைக்கும் போக்கை இந்த விடியா அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் ``அம்மா மினி கிளினிக்’’ திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் சாதாரண காய்ச்சல், சளி, இருமல், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தங்களின் வீடுகளுக்கு அருகிலியே மருத்துவ உதவி பெற்று வந்தனர்.

மக்களிடம் ஆதரவைப் பெற்ற இந்த திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு முடக்கி, `மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற ஒரு பயன் இல்லாத திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதற்கு பிரமாண்டமாய் ஒரு தொடக்க விழாவை கடந்தாண்டு இந்த விடியா திமுக அரசு நடத்தியது. தற்போது இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்பாட்டில் உள்ளதா ? இல்லையா? என்று மாநில மக்களுக்குத் தெரியவில்லை.

குறிப்பாக‘மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின் கீழ் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று, அவர்களுக்கு மாதம் தோறும் மருந்து, மாத்திரைகள் தர இருப்பதாகத் தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.

அதன்படி `` 20 லட்சம் பேரின் இல்லங்களுக்கே மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் நேரில் சென்று மருந்து, மாத்திரைகளைக் கொடுக்க இருக்கிறோம் என்பது உள்ளிட்ட தகவல்களை கடந்த ஆகஸ்ட் மாதம் இத்திட்டத்தைத் தொடக்கி வைக்கும்போது, இந்த விடியா அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 40 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர் என்று அடுத்த சில நாட்களில் அரசு தெரிவித்துள்ளது. ‘மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின் இன்றைய அவல நிலை குறித்து பலதரப்பட்ட மக்களின் புலம்பல்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. அதன்படி பெரும்பாலான நோயாளிகள் கூறுவன பின்வருமாறு

போனவங்க வரவே இல்ல!

முதல் நாள் மாத்திரை கொடுத்துவிட்டுப் போனவங்க, இப்பவரைக்கும்

ஒருநாள் கூட திரும்ப வந்து செக் பண்ணல!

போட்டோ எடுக்குறதுக்காக மட்டும் வந்தாங்க!

யாராவது வந்து கேட்டா அடிக்கடி வர்றாங்கன்னு சொல்லச் சொன்னாங்க!

மாசா மாசம் வீட்டுக்கே வந்து மாத்திரை தந்து, பிபி, சர்க்கரை செக் பண்ணிட்டுப்

போவோம்னு சொன்னாங்க. அதுக்கப்புறம் இதுவரை ஒருநாள் கூட வந்து

பார்க்கல. பக்கத்து வீட்டுக்காரங்ககிட்ட காசு கொடுத்து மாத்திரை

வாங்கிட்டு வந்து தரச்சொல்லி சாப்பிட்டுகிட்டு இருக்கேன்.

பக்கத்துல இருக்கிற நர்ஸுங்ககிட்ட கேட்டா, `இது என் வேலை இல்லை.

நீங்க போய் கேஸ் குடுங்க'ன்னு சொல்றாங்க.

முடக்குவாதத்துக்கு பிசியோதெரபி சிகிச்சைக்காக ஒருநாள் வந்து

பார்த்துட்டு கணக்கு எழுதிட்டு, நீங்களே எக்சர்சைஸ் பண்ணிக்கங்கன்னு

சொல்லிட்டுப் போயிட்டாங்க.

அரசின் துறைகள் ஒவ்வொன்றும் மக்களின் நலனுக்கான திட்டங்களைத் தீட்டி செயல்பட வேண்டும். குறிப்பாக, மக்கள் நல்வாழ்வுத் துறை மக்களின் உயிரைக் காக்கும் பணியில் ஈடுபட வேண்டும். கடந்த 14 மாதகால விடியா திமுக. ஆட்சியில், அம்மா அரசின் பல்வேறு நல்ல திட்டங்களையெல்லாம் முடக்கியதோடு, அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடும் பணியையே கண்ணும் கருத்துமாக மக்கள் நல்வாழ்வுத் துறை செய்து வருகிறது.

அதிமுக அரசின் ஆட்சியில், கரோனாவிற்கு மருந்தே கண்டுபிடிக்கப்படாத காலத்தில், தனியார் மருத்துவமனைகள் பல இயங்காத நேரத்தில், இப்போதுள்ள அதே அரசு மருத்துவர்கள் தங்கள் உயிரை பணயமாக வைத்து கரோனாவிற்கும், மற்ற அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளித்தனர். குறிப்பாக, அரசு மகப்பேறு மருத்துவமனைகள் மூலம் பயனடைந்த தாய்மார்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்ததை நான் இங்கு நினைவு கூர்கிறேன்.

அதே அரசு மருத்துவர்கள்தான் இப்போதும் பணிபுரிகின்றனர். ஆனால் இன்று, அரசு மருத்துவமனைகளுக்கே மக்கள் செல்ல அஞ்சும் நிலையை இந்த விடியா திமுக அரசு ஏற்படுத்தி உள்ளது கண்டிக்கத்தக்கதாகும். வெற்று விளம்பரத்திற்காக மக்களைத் தேடி மருத்துவம் என்று அறிவித்துவிட்டு, முதலமைச்சரை வைத்து `போட்டோ ஷூட்’ நடத்திவிட்டு, மக்களை, மருத்துவத்தைத் தேடி அலைய வைக்கும் போக்கை இந்த விடியா அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். காழ்ப்புணர்ச்சி அரசியலை ஓரம் கட்டிவிட்டு, மக்களின் நலனுக்காக `அம்மா மினி கிளினிக்’ திட்டத்தை மீண்டும் தொடங்கிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நடந்தாய் வாழி காவிரி திட்டம் - எடப்பாடி பழனிசாமியை வெளுத்து வாங்கிய அமைச்சர் துரைமுருகன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.