அரசு ஒப்பந்ததாரரிடம் வட மாநிலத்தவர்கள் நூதன மோசடி

author img

By

Published : Sep 7, 2021, 9:36 AM IST

அரசு ஒப்பந்ததாரரிடம் வட மாநிலத்தவர்கள் நூதன மோசடி

தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகத்தின் அரசு ஒப்பந்ததாரரை நூதன முறையில் மோசடி செய்த வடமாநில நிறுவனத்தின் உரிமையாளர் உள்பட மூவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் பொருள்களுடன் 13 வகையான உணவுப்பொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்குவதாக அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும்வகையில் 13 உணவுப் பொருள்களுக்கான டெண்டரை தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகம் மேற்கொண்டது.

இதில் ரவா, சர்க்கரை பொருள்களை அரசுக்கு விநியோகிப்பதற்காக மூகாம்பிகை என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொண்டது. அதனடிப்படையில் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் வம்சி ரெட்டி தனது நண்பர் மூலம் அறிமுகமான கான்பூர் நிறுவனத்திடமிருந்து ரவா, சர்க்கரை ஆகியவற்றைக் கொள்முதல் செய்வதற்காகத் தொடர்புகொண்டுள்ளார்.

அதன்படி, கான்பூரில் உள்ள கங்கா ஜமுனா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் உதவி மேலாளர் ஜான்சன் டேவிட் என்பவர் தொடர்புகொண்டு இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான ஐந்து லட்சம் ஒரு கிலோ ரவா பாக்கெட்டுகள், மூன்று லட்சம் அரை கிலோ சர்க்கரை பாக்கெட்டுகளைக் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளார்.

முன்னதாக கங்கா ஜமுனா பிரைவேட் லிமிடெட் குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்வதற்கு ஆன்லைன் மூலமாகவே நிறுவனம் தொடர்பான ஆவணங்களை ஜான்சன் டேவிட் மூலம் பெற்று வம்சி ரெட்டி சோதனை செய்துள்ளார்.

அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்ததால், முதற்கட்டமாக ஒப்பந்தத்தின் அடிப்படையில் கங்கா ஜமுனா நிறுவனம் 65 லட்சம் ரூபாய் முன்தொகை செலுத்துமாறு வம்சி ரெட்டியிடம் கூறியுள்ளது.

அதன் அடிப்படையில் கங்கா ஜமுனா நிறுவனத்தின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் 35 லட்ச ரூபாய் பணத்தை முன் தொகையாகச் செலுத்தியுள்ளார். அதன்பின் 30 லட்ச ரூபாயைச் செலுத்தும்போது கங்கா ஜமுனா நிறுவன வங்கிக் கணக்கு செயல்படாததால், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் என்பவரது வங்கிக் கணக்கிற்கு அனுப்புமாறு ஜான்சன் டேவிட் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் வம்சி ரெட்டி 30 லட்ச ரூபாயையும் அனுப்பியுள்ளார். இதனை அடுத்து ஆர்டர் செய்த ரவா, சக்கரை ஆகிய 25 டன் உணவுப் பொருள் மூன்று வாகனங்களில் நாக்பூரிலிருந்து சென்னை வருவதாக ஜான்சன் டேவிட் தெரிவித்துள்ளார்.

வண்டியின் ஆவணங்களையும் முறையாகக் கொடுக்காமல், உணவுப் பொருள்களை வெளி மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு கொண்டுவருவது தொடர்பான ஆவணங்களையும் கொடுக்காமல், வாகனத்தை கொண்டுவரும் ஓட்டுநர் சஞ்சய் என்பவரது தொடர்பு எண்ணை மட்டும் ஜான்சன் டேவிட் கொடுத்துள்ளார்.

அரசுக்கு உடனடியாக உணவுப் பொருள்களை வழங்க வேண்டும் என்று நெருக்கடியைத் தொடர்ந்து, வம்சி ரெட்டி தொடர்ந்து சஞ்சயைத் தொடர்புகொண்டுள்ளார். ஆந்திராவில் குறிப்பிட்ட பகுதியில் வாகனங்கள் சோதனைக்காக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், வாகனத்தை மீண்டும் நிறுவனத்திற்கு எடுத்துச் செல்வதாகவும் வம்சி ரெட்டியிடம் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த வம்சி ரெட்டி ஒப்பந்தத்தை ரத்துசெய்வதாகக் கூறி முன்தொகையைத் திருப்பிச் செலுத்துமாறு, கங்கா ஜமுனா நிறுவன உதவி மேலாளர் ஜான்சன் டேவிட்டிடம் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் 10 லட்ச ரூபாயை, ஒன்பது லட்ச ரூபாய் தொகைக்கான காசோலையை அனுப்பியுள்ளனர். ஆனால் அந்தக் காசோலையும் பணம் இல்லாததால் திரும்ப வந்ததையடுத்து, கங்கா ஜமுனா நிறுவனத்தை வம்சி ரெட்டி தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

திடீரென அந்த நிறுவனம் வம்சி ரெட்டியின் அழைப்புகள் அனைத்தையும் ப்ளாக் செய்துள்ளது. இந்நிலையில் மூகாம்பிகை எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்கை கான்பூர் காவல் துறையினர் முடக்கம் செய்துள்ளதாக, தகவல் அறிந்து வம்சி ரெட்டி அதிர்ச்சியடைந்தார்.

திடீரென வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து, வம்சி ரெட்டி கான்பூர் காவல் துறையினரிடம் நேரடியாகச் சென்று விளக்கம் கேட்டுள்ளார். கான்பூரில் வழக்கு ஒன்றில் தொடர்புடைய குற்றவாளியின் வங்கிக் கணக்கிற்கு வம்சி ரெட்டி லட்சக்கணக்கில் பணம் அனுப்பியிருந்ததால், சந்தேகத்தின் அடிப்படையில் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக கான்பூர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் சென்னை காவல் துறையில், மோசடிக்கு உள்ளானதை புகார் அளித்து வழக்குப்பதிவு செய்யுமாறு கான்பூர் காவல் துறையினர் வம்சி ரெட்டியிடம் அறிவுறுத்தியுள்ளனர். அந்த முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக வைத்து வங்கிக் கணக்குகளை விடுவிப்பதாக கான்பூர் காவல் துறையினர் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வம்சி ரெட்டி அளித்த புகாரின் அடிப்படையில் முகேஷ், ஜான்சன் டேவிட், சஞ்சய் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திட்டமிட்டு நூதன முறையில் பொருள்களை விநியோகம் செய்வதாகக் கூறி மோசடி செய்யும் வட மாநிலத்தைச் சேர்ந்த கும்பலின் போலியான நிறுவனமா என மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இது போன்று மோசடியிலிருந்து தற்காத்துக்கொள்ள வெளிமாநில நிறுவனங்களிடமிருந்து பொருள்களைக் கொள்முதல் செய்யும் நபர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனத்தைப் பற்றி நன்கு ஆய்வுசெய்து தொழில் மேற்கொள்ளுமாறு காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: 23.ம் புலிகேசியும், திமுக எம்எல்ஏக்களும் - அண்ணாமலையின் ஒப்பீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.