ETV Bharat / city

மருத்துவர் சுப்பையா படுகொலை- ஆசிரியர் உள்பட 7 பேருக்கு தூக்கு!

author img

By

Published : Aug 4, 2021, 2:38 PM IST

Updated : Aug 4, 2021, 5:01 PM IST

Dr Subbiah murder
Dr Subbiah murder

14:30 August 04

சென்னையில் மருத்துவர் சுப்பையா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அரசு மருத்துவர், வழக்குரைஞர்கள், ஆசிரியர் என 7 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை : அரசு ஒய்வு பெற்ற மருத்துவரான சுப்பையா, தனியார் மருத்துவமனையிலிருந்து பணி முடிந்து, மாலை 5 மணியளவில் நிறுத்தப்பட்டிருந்த தனது காருக்கு திரும்பியபோது, அங்கு கொலை செய்யும் நோக்கில் காத்திருந்த கூலிப்படையினரால் கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டப்பட்டார். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

நரம்பியல் மருத்துவர் சுப்பையா படுகொலை

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா 2013ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி கூலிப் படையினரால் கூர்மையான ஆயுதங்களால் சரமாரியாக வெட்டப்பட்டார்.

இரத்த வெள்ளத்தில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய மருத்துவர் சுப்பையா 9 நாள்கள் தீவிர சிகிச்சைக்கு பின்னர் உயிரிழந்தார். மருத்துவர் சுப்பையா கூலிப் படையினரால் வெட்டப்பட்ட சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகியிருந்தது.

சொத்து பிரச்சினை

இதை வைத்து காவலர்கள் விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில் மருத்துவர் சுப்பையா, தனக்கும் தனது உறவினர் பொன்னுசாமிக்கும் (60) இடையே சொத்து பிரச்சினை இருந்ததாக தெரிவித்திருந்தார்.

அந்த வழக்கின் தீர்ப்பு சுப்பையாவுக்கு சாதகமாக வந்துள்ளது. ஆகையால், பொன்னுசாமி குடும்பத்தினரே மருத்துவர் சுப்பையாவை கொலை செய்தது தெரியவந்தது.

அரசு மருத்துவர் ஜேம்ஸ் சதீஷ்குமார் கைது

இருப்பினும் இந்தக் கொலையில் நேரடியாக ஈடுபட்ட நபர்கள் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் பொன்னுசாமியும் அவரது மனைவி மேரி புஷ்பமும் கோயம்புத்தூரில் கைது செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து தனிப் படையினர் நடத்திய விசாரணையில் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், பணகுடி அருகே தண்டையார்குளத்தை சேர்ந்த முருகன், திருக்குறுங்குடியைச் சேர்ந்த அய்யப்பன், பணகுடி ரோஸ்மியாபுரத்தை சேர்ந்த செல்வ பிரகாஷ் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.

தீர்த்துக் கட்ட திட்டம்

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் வழக்குரைஞர் பாசிலுக்கு அவரின் நண்பர் உயர் நீதிமன்ற வழக்குரைஞர் வில்லியம் மூலமாக வள்ளியூர் டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார் அறிமுகமாகியுள்ளார்.

அவரிடம் பாசில் தங்களுக்கும் மருத்துவர் சுப்பையாவுக்கும் இடையே சொத்து பிரச்சினை உள்ளது. சுப்பையாவை கொலை செய்தால் இந்த சொத்துகள் எங்களுக்கு கிடைக்கும் என்று கூறியுள்ளனர்.

கூலிப் படைக்கு ரூ.50 லட்சம்

இதையடுத்து டாக்டர் ஜேம்ஸ், தனக்கு தெரிந்த முருகன், அய்யப்பன், செல்வ பிரகாஷ் ஆகிய மூன்று பேரை கூலிபடையாக நியமித்து மருத்துவர் சுப்பையாவை கொலை செய்துள்ளார். அதற்கு முதல்கட்டமாக ரூ.50 லட்சம் ஜேம்ஸ் வாங்கியதாக கூறப்படுகிறது.

மருத்துவர் ஜேம்ஸ் திருநெல்வேலி இஎஸ்ஐ மருத்துவமனையில் அரசு மருத்துவராக பணியாற்றுகிறார். இவருக்கு சொந்தமாக மருத்தவமனை ஒன்றும் வள்ளியூரில் உள்ளது. ரியல் எஸ்டேட் தொழிலும் நடத்திவருகிறார்.

அப்ரூவர் அய்யப்பன்

இந்த வழக்கில் அய்யப்பன் அப்ரூவராக மாறி அரசு சாட்சியமாக மாறினார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மற்றவர்கள் மீதான குற்றங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன.

இந்த வழக்கின் விசாரணை சென்னை முதலாவது கூடுதல் அமர்வு  நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி, குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என அறிவித்தார்.

மரண தண்டனை விதிப்பு

இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்குரைஞர் விஜயராஜ், குற்றவாளிகள் அனைவருக்கும் உச்சப்பட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க வேண்டும் என வாதாடினார்.

இதையடுத்து தண்டனை விவரங்களை வாசித்த நீதிபதி வழக்கின் முதன்மை குற்றவாளியான ஆசிரியர் பொன்னுசாமி, ஏ3 குற்றவாளி வழக்குரைஞர் பாசில், ஏ4 குற்றவாளி பொறியாளர் போரிஸ், ஏ5 குற்றவாளி வழக்குரைஞர் வில்லியம், ஏ7 குற்றவாளி மருத்துவர் ஜேம்ஸ் சதீஷ்குமார், ஏ8 குற்றவாளி முருகன், ஏ9 குற்றவாளி செல்வ பிரகாஷ் ஆகியோருக்கு இரட்டை தூக்கு தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இருவருக்கு இரட்டை ஆயுள்

வழக்கில் ஏ2 குற்றவாளியான மேரி புஷ்பம் மற்றும் ஏ6 குற்றவாளி ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார். அரசு சாட்சியாக மாறிய அய்யப்பன் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

தமிழ்நாட்டையே உலுக்கிய ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், அரசு மருத்துவர், வழக்குரைஞர்கள், கூலிப் படையினர் என அனைவருக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

இதையும் படிங்க : டாக்டர் சுப்பையா கொலை வழக்கு - அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு

Last Updated : Aug 4, 2021, 5:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.