பிறந்தாச்சு புரட்டாசி.. வைணவ ஆலயங்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா

author img

By

Published : Sep 24, 2022, 6:24 PM IST

Etv Bharat

புரட்டாசி மாதத்தையொட்டி, வைணவத் திருக்கோயில்களுக்கு செல்லும் ஆன்மிகச் சுற்றுலாவினை அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுற்றுலாத்துறை அமைச்சர் எம். மதிவேந்தன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

சென்னை: பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கும், வைணவத் திருக்கோயில்களுக்கும் முக்கிய விழா நாட்களில் ஆன்மிகப் பயணம் செல்ல சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்யப்படும் என்ற அறிவிப்பின்படி, குறைந்த கட்டணத்தில் புரட்டாசி மாத திருமால் தரிசன சிறப்பு ஆன்மிகச் சுற்றுலாவிற்கு பதிவு செய்த பக்தர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.

இந்து சமய அறநிலையத்துறை சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்துள்ள, புரட்டாசி மாத வைணவத் திருக்கோயில் ஆன்மிகச் சுற்றுலாவினை இன்று (செப்.24) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சுற்றுலாத்துறை அமைச்சர் எம். மதிவேந்தன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

2022 – 2023 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் “தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கும், வைணவத் திருக்கோயில்களுக்கும் முக்கிய விழா நாட்களில் ஆன்மிகப் பயணம் செல்ல சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்யப்படும்” என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், கடந்த ஆடி மாதம் பிரசித்த பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு சுற்றுலாத்துறையுடன் இணைந்து ஆன்மிகச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு பெருமளவில் பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, புரட்டாசி மாதத்தில் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைத் தலைமையிடமாக கொண்டு புகழ்பெற்ற வைணவத் திருக்கோயில்களுக்கு குறைந்த கட்டணத்தில் ஆன்மிகச் சுற்றுலா அழைத்து செல்லும் வகையில் அறிவிப்புகள் செய்யப்பட்டு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் முன்பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் வைணவ ஆலயங்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா
தமிழ்நாட்டில் வைணவ ஆலயங்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா

அதன்படி, சென்னையில் புரட்டாசி மாத திருமால் தரிசன சிறப்பு ஆன்மிகச் சுற்றுலாவிற்கு பதிவு செய்துள்ள பக்தர்கள் பங்கேற்கும் ஆன்மிகச் சுற்றுலாவினை இன்று (24.09.2022) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுற்றுலாத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இப்பயணத்தின் முதல் திட்டத்தில்

திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில்,

பெசன்ட் நகர், அருள்மிகு அஷ்டலெட்சுமி திருக்கோயில்,

திருவிடந்தை, அருள்மிகு நித்ய கல்யாண பெருமாள் திருக்கோயில்,

மாமல்லபுரம், அருள்மிகு ஸ்தல சயன பெருமாள் திருக்கோயில்,

சிங்கப்பெருமாள் கோவில்,

அருள்மிகு பாடலாத்ரி நரசிம்மர் திருக்கோயில்,

திருநீர்மலை, அருள்மிகு நீர்வண்ண பெருமாள் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.

இரண்டாவது திட்டத்தின் ஒரு பகுதியாக

திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில்,

திருநீர்மலை, அருள்மிகு நீர்வண்ண பெருமாள் திருக்கோயில்,

திருமுல்லைவாயில், அருள்மிகு பொன்சாமி பெருமாள் திருக்கோயில்,

திருவள்ளூர், அருள்மிகு வைத்திய வீர ராகவபெருமாள் திருக்கோயில்,

திருபெரும்புதூர், அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில்,

பூந்தமல்லி, அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில் உள்ளிட்ட திருக்கோயில்களுக்கும் பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இந்த இரண்டு திட்டங்களிலும் பக்தர்களுக்கு கட்டணமில்லா சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு, திருக்கோயில் பிரசாதம், திருக்கோயில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடுடன் மதிய உணவும் வழங்கப்படுகிறது.

இந்நிகழ்வில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், சுற்றுலாத்துறை இயக்குனரும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநருமான சந்தீப் நந்தூரி, மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: அதிகரித்து வரும் தொற்று நோயைக் கட்டுப்படுத்த ஓபிஎஸ் வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.