இலங்கைக்கு அனுப்பப்படும் அரிசி குறித்து அவதூறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை

author img

By

Published : May 8, 2022, 11:59 AM IST

உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி அறிக்கை

இலங்கைக்கு அனுப்பப்படும் அரிசி குறித்து உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று (மே7) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கையில் அமைச்சர் சக்கரபாணி, "இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக கடுமையான துன்பத்திலிருக்கும் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிட வேண்டும் என்று முதலமைச்சர் முடிவெடுத்து ஒன்றிய அரசின் அனுமதியைக் கோரியிருந்தார்.

அனுமதி கிடைத்தவுடன் 40 ஆயிரம் டன் அரிசி உள்ளிட்ட பொருள்களை அனுப்பிடும் நடவடிக்கையைத் துரிதப்படுத்தினார்.

குறைந்த விலையில் கொள்முதல்: அதன்படி, ஒப்பந்தப்புள்ளிகள் கோரி இறுதிப்படுத்திட தாமதமாகும் நிலையில், உடனடியாக நிவாரணப் பொருள்கள் வழங்குவதற்காக வெளிப்படைத்தன்மையுடன் அரிசி ஆலை அலுவலர்களின் சங்கங்களை அழைத்துப் பேசி, குறுகிய காலத்தில் உற்பத்தி செய்யமுடிந்த 51 ஆலைகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விநியோக ஆணைகள் வழங்கப்படுகின்றன.

இலங்கை அரசு ஏற்கெனவே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்துள்ள அரிசிக்கு இணையான, ஆந்திரா பொன்னி, ஏடிட்டி-45 , கோ-51 போன்ற உயர் ரக அரிசி இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்டு, 10 கிலோ பைகளில் அனுப்பப்பட உள்ளது.

இவற்றை சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களுக்கு அனுப்புவதற்கான போக்குவரத்துச் செலவு, பை உள்பட கிலோ ஒன்றிற்கு ரூ.33.50 என்ற குறைந்த விலையில் கொள்முதல் செய்ய ஆணை வழங்கப்பட்டுள்ளது.

மானிய விலையில்: இந்நிலையில் சில விஷமிகள் வழக்கமாக விஷத்தைக் கக்கும் விதமாக இந்திய உணவுக் கழகத்திடமிருந்து கிலோ ஒன்றிற்கு ரூ.20-க்கு வாங்காமல், அதிகமாகக் கொடுத்து வாங்கிவிட்டதுபோல் சமூக ஊடகங்களில் எழுதுகின்றனர். இது தவறான பொய்ப் பரப்புரையாகும்.

ஒன்றிய அரசின் உணவு மானியத்தால் விலை குறைக்கப்பட்டு, ரூ.20க்கு இந்திய உணவுக் கழகம் வழங்கக்கூடிய அரிசியானது, நமது நாட்டில் பொது விநியோகத் திட்டத்தில் மாநில அரசுகள் விநியோகிப்பதற்கும் மாநில அரசின் திட்டங்களுக்கும் மானிய விலையில் வழங்கப்படும் அரிசி ஆகும்.

இதனை மாநில அரசுகள் வெளிநாடுகளுக்கு அனுப்ப இயலாது. இதனால்தான் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக அரிசி கொள்முதல் செய்யப்பட்டு, இலங்கைக்கு அனுப்பப்படுகிறது.

எனவே இந்த இந்திய உணவுக் கழக அரிசியை, இலங்கைக்கு அனுப்புவதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் ஆணை வழங்கியுள்ள உயர் ரக அரிசியோடு ஒப்பிடுவது முற்றிலும் தவறானது.

இந்த உண்மைகள் முழுமையாகத் தெரிந்திருந்தும் அவதூறு செய்யவேண்டும் என்பதற்காகவே சிலர் இந்த பரப்புரையை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு அவதூறு பரப்புவோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்" என அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: 'சாதனை அரசல்ல... சோதனை அரசுதான் - அண்ணாமலை விமர்சனம்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.