சென்னை: சட்டப்பேரவையில் நாகப்பட்டினம் சட்டப்பேரவைத்தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், ’திட்டச்சேரி ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் பழுதடைந்து, தற்போது தற்காலிகமாக மாற்று இடத்தில் செயல்பட்டு வருகிறது. புதிய கட்டடம் அமைக்க மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டும் திட்டப்பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
மேலும் அதேபோல் நாகூர் நகர்ப்புறம் சுகாதாரநிலையம் மற்றும் திருக்கண்ணபுரம் சுகாதாரநிலையம் ஆகியவையும் பழுதடைந்துள்ளது. திருமருகல் பகுதியைப் பொறுத்தவரை வயல்வெளிகள் காடுகள் நிறைந்த பகுதி. அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் விஷக்கடி மருந்துகள் இல்லை என்கிற சூழ்நிலையில் நாகப்பட்டினம் அரசு பொது மருத்துவமனைக்கு வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது. எனவே, திருமருகல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் விஷக்கடி மருந்துகளை வழங்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதிலளித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி பழுதடைந்த சுகாதார நிலையங்களைச் சீரமைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கானப் பணிகள் இந்த ஆண்டே தொடங்கப்படும். உறுப்பினர் குறிப்பிட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்குத் தேவையான விஷக்கடி மருந்துகள் விரைந்து வழங்கப்படும்’ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: துணைவேந்தர்களை நியமிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றம்!