ETV Bharat / city

புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் மூலம் அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்டித்தர வேண்டும்: அமைச்சர் துரைமுருகன்

author img

By

Published : Mar 25, 2022, 3:31 PM IST

புவியியல் மற்றும் சுரங்கத்துறையினை மேம்படுத்தும் நோக்கில் அரசுக்குக் கூடுதல் வருவாய் ஈட்டித்தர அனைத்து அலுவலர்களும் முழு ஒத்துழைப்புடன் செயல்படவேண்டும் எனவும், மாவட்ட மற்றும் மண்டல பறக்கும்படை அலுவலர்கள் முனைப்புடன் செயல்படவேண்டும் எனவும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அலுவலர்களைக் கேட்டுக்கொண்டார்.

MINISTER DURAIMURUGAN REVIEW MEETING
MINISTER DURAIMURUGAN REVIEW MEETING

சென்னை: தமிழ்நாடு கனிம நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் ஆகியவற்றின் திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்தும் அலுவலர்களின் செயல்திறன் குறித்தும் ஆய்வுக்கூட்டம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று (மார்ச் 25) தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர், 'சட்டவிரோதமாக கனிமங்களை வெட்டி எடுப்பது தொடர்பாக பெறப்படும் புகார்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்வதுடன், அப்பகுதிகளை கள ஆய்வு மேற்கொண்டு தேவைப்படும்பட்சத்தில், ஆளில்லா விமான தொழில்நுட்பத்தின் மூலம் அளவீடு செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என அலுவலர்களிடம் வலியுறுத்தினார்.

மேலும் அவர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள தகுதிவாய்ந்த கிரானைட் குவாரிகளை உடனடியாக பொது ஏலத்திற்கு கொண்டுவந்து, அரசுக்கு மேலும் வருவாய் சேர்க்கவும், மாவட்ட கனிம கட்டமைப்பு விதிகள் 2017-இன் கீழ் மாவட்ட கனிம கட்டமைப்பு நிதியினைக்கொண்டு மக்கள் நலத் திட்டங்களை விரைந்து செயல்படுத்திட நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தினார்.

MINISTER DURAIMURUGAN REVIEW MEETING
ஆய்வுக்கூட்டத்தில் அலுவலர்களுடன் அமைச்சர் துரைமுருகன்

நியாய விலையில் கட்டுமானப்பொருள்கள்: இந்த நிதியாண்டில் (2021-22) ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையில் கனிம வருவாய் ரூ.1024 கோடி ஈட்டப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி இனி வரும் மாதங்களில் அதிக வருவாயினை ஈட்டிட நடவடிக்கை மேற்கொள்ள அமைச்சர் துரைமுருகன் அறிவுரை வழங்கினார். மேலும், கனிம வருவாய் விவரங்களை மாவட்ட வாரியாக கேட்டறிந்தார்.

மேலும், அமைச்சர் துரைமுருகன், "கனிம வருவாயை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களில் உள்ள தகுதி வாய்ந்த கல்குவாரிகளை உரிய ஏலத்திற்கு கொண்டு வந்து கனிம வருவாயினை ஈட்ட வேண்டும். பொது மக்களுக்கு கட்டுமானப்பொருட்களை நியாயமான விலையில் கிடைக்க வழிவகை செய்ய முனைப்புடன் செயல்பட வேண்டும்'' என அனைத்து மாவட்ட அலுவலர்களிடம் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக அவர், அனைத்து மாவட்ட அலுவலர்களும் குறைந்தபட்சம் மாதத்திற்கு 20 வாகனங்கள் கைப்பற்றிடவும், அண்டை மாநிலங்களுக்கு எடுத்துச்செல்லும் மணல் வாகனங்களை முற்றிலும் தடுக்க மாவட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மண்டலப் பறக்கும் படையினர் முனைப்புடன் செயல்பட்டு அதிக அளவில் வாகனங்களைக் கைப்பற்றி கனிம திருட்டினை முற்றிலும் தடுத்து மாநில அரசுக்கு அதிக அளவில் வருவாய் ஈட்டித் தருமாறும் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: குல தெய்வ வழிபாடு.. பாரம்பரிய நடனம்.. சித்த ராமையா அசத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.