ETV Bharat / city

'அரசு நிர்ணயித்த கட்டணத்தை செயல்படுத்த இயலாது' - தனியார் மருத்துவக்கல்லூரி தரப்பு வாதம்

author img

By

Published : Aug 8, 2022, 10:12 PM IST

'தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50% மாணவர்களிடம் அரசு கட்டணத்தையே வசூலிக்குமானால், மீதமுள்ள 50% மாணவர்களிடம் ரூ.50 முதல் ரூ.60 லட்சம் வரை வசூலிக்க வேண்டியநிலை வரும்'என தனியார் மருத்துவக்கல்லூரி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகள், மொத்தமுள்ள இடங்களில் 50% இடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களிடம் அரசு மருத்துவக்கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ஸ்ரீராமச்சந்திரா, ஆதிபராசக்தி, பி.எஸ்.ஜி. உள்ளிட்ட நிகர்நிலை பல்கலைக்கழகங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன.

அந்த மனுக்களில், அரசு கல்லூரிகளில் மிக குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுவதாகவும், தனியார் கல்லூரிகள் 50% இடங்களுக்கு அரசு கட்டணத்தை வசூலிப்பது என்பது சாத்தியமற்றது எனவும்; அப்படி வசூலித்தால் கல்லூரிகளை நிர்வகிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் இன்று (ஆக.8) விசாரணைக்கு வந்தபோது, தனியார் மருத்துவக்கல்லூரி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ’50% இடங்களுக்கு அரசு கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவின்கீழ் முதலில் அரசு ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இரு பிரிவு மாணவர்களிடம் இரு வேறு கட்டணம் வசூலிப்பது பாரபட்சமானது. அரசியல் சட்டத்துக்கு விரோதமானது’ என்றார்.

'ரூ.18,000 கட்டணம் வசூலிக்கும் அரசு, படிப்பை முடித்தவர்கள் இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய ஒப்பந்தம் செய்கிறது. அரசு கட்டணத்தை வசூலித்து தனியார் கல்லூரிகளை நிர்வகிக்க முடியாது' எனவும் விளக்கினார்.

மேலும் அவர் '50% மாணவர்களிடம் ரூ.18,000 மட்டும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றால், மீதமுள்ள 50% மாணவர்களிடம் 50 முதல் ரூ.60 லட்சம் வரை வசூலிக்க வேண்டி வரும். அதிக வசதிகளுடன் ஒரு கல்வி நிறுவனத்தை தொடங்கும்போது, அந்த செலவினங்களை கட்டணம் மூலம் தான் சரிகட்ட முடியும்' என்றார். இந்த வழக்கில் வாதங்கள் நிறைவடையாததால், விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட கட்டணக்குறைப்பு தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படுமா- அண்ணாமலை கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.