ETV Bharat / city

உபா சட்டத்தில் கைதான வழக்கறிஞர்... விடுவிக்க உத்தரவிட மறுப்பு...

author img

By

Published : Oct 15, 2022, 12:03 PM IST

Etv Bharat
Etv Bharat

தடை செய்யப்பட்ட அமைப்பின் கருத்துக்களை பரப்பியதால் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட வழக்கிலிருந்து வழக்கறிஞரை விடுவிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை: தடை செய்யப்பட்ட அமைப்பான மாவோயிஸ்ட் இயக்கத்தின் சித்தாந்தத்தை சமூக ஊடகத்தில் பரப்பியதாக உபா சட்டம் என அழைக்கப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் மோகன் ராமசாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்ககோரி அவர் தொடர்ந்த வழக்கை, தேசிய புலனாய்வு முகமையின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மோகன் ராமசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் அமர்வு முன்பு நேற்று (அக்.14) நடைபெற்றது. அப்போது மனுதாரர் தரப்பில், சமூக ஊடகங்களில் செய்திகளை பதிவேற்றுவதால், இந்திய தண்டனைச் சட்ட விதிகள் மற்றும் தேசத் துரோகத்தின் கீழ் உள்ள விதிகள் எதுவும் பொருந்தாது என்றும், உபா பயங்கரவாதச் செயல் என்பது உடல் ரீதியான செயல்களை மட்டுமே குறிக்கும் வகையில் வரையறுக்கப்பட்டுள்ளது என்றும் வாதிடப்பட்டது.

ஆட்சேபனைக்குரிய சமூக ஊடகப் பதிவு மூன்று நாட்களுக்குள் நீக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. தேசிய புலனாய்வு முகமை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயன், சமூக ஊடகங்களில் பல ஹேஷ்டேக்குகளுடன் ஆட்சேபனைக்குரிய செய்தியை பதிவேற்றியதாகவும், பலரை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடத் தூண்டியதாகவும் வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் முகநூல் பதிவை வாபஸ் பெறுவது மட்டும் வழக்கில் இருந்து விடுவிக்க ஒரு காரணமாக அமையாது என்றும், நிலப்பிரதிநிதித்துவம், ஏகாதிபத்தியம், ஏழைகளைச் சுரண்டுவது போன்றவற்றில் இருந்து நாடு விடுபடவில்லை என்றும், சுதந்திரம் ஒரு கேலிக்கூத்து என்றும் செய்தி பரப்பியுள்ளதாகவும், உண்மையான சுதந்திரத்தைப் பெற நக்சல்பாரி காட்டிய போரின் பாதையில் அணிதிரள்வோம் என்றும் குறிப்பிட்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மனுதாரரை வழக்கிலிருந்து விடுவிக்க உத்தரவிட முடியாது என்று தீர்ப்பளித்துள்ளனர்.

இதையும் படிங்க: 7.5% இடஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் நீட்டிப்பது குறித்து மறு ஆய்வு செய்யலாம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.