ETV Bharat / city

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு சின்னம் - எஸ்டிபிஐ கோரிக்கை

author img

By

Published : Sep 5, 2021, 8:34 AM IST

Sdpi
Sdpi

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் நினைவை போற்றும் வகையில் தமிழ்நாடு அரசு நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை: பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, பூவலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறியதாவது, "பல்வேறு தசாப்தமாக தூத்துக்குடி மக்களுக்கு பிரச்னை அளித்து வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். ஸ்டெர்லைட் நிறுவனம் தமிழ்நாட்டில் வேறு எங்கும் தொடங்கக்கூடாத வகையில் தமிழ்நாடு அரசு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இவற்றை வலியுறுத்தி பல்வேறு அமைப்புகளை ஒன்றிணைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம். அனைத்து நாடுகளிலும் சட்டத்தை புறக்கணித்து செயல்படும் வேதாந்தா நிறுவனத்தை புறக்கணிக்கும் வகையில் தீர்மானம் இயற்றப்பட வேண்டும்.

தேர்தலுக்கு முன்பாக தூத்துக்குடி மக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் சட்டப்பேரவை கூட்ட தொடரில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சிறப்பு தீர்மானம் இயற்றப்படும் என நம்புகிறோம்.

மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் நினைவை போற்றும் வகையில் தூத்துக்குடி மக்களின் எதிர்பார்ப்பான இறந்தவர்களுக்கான நினைவு சின்னத்தை தூத்துக்குடியில் அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.