நாகை மாவட்டத்தைப் பிரித்து மயிலாடுதுறை தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
மயிலாடுதுறையின் சிறப்பு
கவிச்சக்கரவர்த்தி கம்பர், தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரம் நாவலை எழுதிய கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை , நூலக தந்தை சீர்காழி ரெங்கநாதன் வாழ்ந்து மறைந்த பெருமைகொண்ட ஊர் மயிலாடுதுறை.
புராண வரலாறு கொண்ட 100-க்கும் மேற்பட்ட ஆலயங்கள், பூம்புகார், தரங்கம்பாடி போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்கச் சுற்றுலாப் பகுதிகளை அருகே கொண்ட ஊர் என்னும் பெருமையைப் பெற்றது ’மயிலாடுதுறை’.
30 ஆண்டுகளாக கோரிக்கை
மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் அரசுக்குக் கோரிக்கைவைத்தனர்.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருந்த காலம் தொடங்கி மயிலாடுதுறை மாவட்டக் கோரிக்கை மக்களிடையே தொடர்ந்து இருந்துவந்தது. ஆனால், ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 1991ஆம் ஆண்டு நாகப்பட்டினம் தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது.
இதையடுத்து 1997ஆம் ஆண்டு திருவாரூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறை தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மார்ச் 24ஆம் தேதி விதி எண் 110இன் கீழ் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து உருவாக்கப்படும் இந்தப் புதிய மாவட்டம் மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், இதன்மூலம் தமிழ்நாட்டிலுள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 38ஆக அதிகரித்துள்ளது.
நான்கு வட்டங்கள், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகள், ஐந்து ஒன்றியங்கள், இரண்டு நகராட்சிகள், மூன்று பேரூராட்சிகளைக் கொண்ட மயிலாடுதுறையில் சுமார் 10 லட்சம் பேர் வசிக்கின்றனர்.