ETV Bharat / city

உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக கூட்டணி - கே. பாலகிருஷ்ணன்

author img

By

Published : Jul 23, 2021, 6:53 PM IST

வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி தொடரும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்

சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்று நாள் மாநிலக் குழுக் கூட்டம் இன்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், சௌந்தரராசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதைத்தொடர்ந்து கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "விவசாயிகளின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு பரிசீலிக்க மறுக்கிறது. எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி, அவர்களது கட்சியில் இருப்பவர்களின் செல்போன் உரையாடல்களைக்கூட ஒட்டுக்கேட்கும் நடவடிக்கையில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது.

இது ஜனநாயகப் படுகொலை நடவடிக்கையாகும். அத்துடன் புதிய கல்விக் கொள்கையைத் திணித்து வரலாற்றுப் பாடங்களை இந்துத்துவா வரலாறாக மாற்ற முயற்சிக்கிறது.

திமுக கூட்டணி

எதேச்சதிகார நடவடிக்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும் என்ற வகையில் ஒன்றிய அரசு செயல்படுகிறது. இதனைக் கண்டித்து மாநிலக்குழுக் கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளோம். ஒன்பது மாவட்டங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை திமுகவுடன் இணைந்து சந்திப்போம்" என்றார்.

மேலும் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆறு தொகுதிகளில் களமிறங்கி இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நீட் தேர்வு தேவையில்லை -பாலகிருஷ்ணன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.