ETV Bharat / city

கரோனாவைத் தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாடா?

author img

By

Published : Aug 8, 2020, 2:14 PM IST

scarcity
scarcity

சென்னை: குறைந்து வரும் நிலத்தடி நீர் மட்டத்தால் இந்த ஆண்டும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்த விரிவாக அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு.

ஆண்டு தொடக்கத்தில் உலகளவில் கரோனா பரவத் தொடங்கினாலும், அது அடுத்த மார்ச் மாதமே சென்னையிலும் நிலை கொள்ளும் என யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. இதோ இன்னும் அதன் பாதிப்புகளிலிருந்து மக்கள் மீள முடியாமல் தவித்துவருகின்றனர்.

இந்நிலையில், சென்னை மக்களை அடுத்து அச்சுறுத்தக் காத்திருக்கிறது தண்ணீர் பஞ்சம். ஊரடங்கால் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டு, நீரின் தேவை குறைந்திருந்தது. அதனால் பெரிதாக குடிநீர்த் தட்டுப்பாடின்றி இக்கோடை காலம் இருந்து வந்தது. இருப்பினும், ஜூன் மாதத்தில் இருந்த நிலத்தடி நீரின் அளவு தற்போது, ஒரு மீட்டரிலிருந்து இரண்டு மீட்டர் வரை குறைந்துள்ளது.

பூண்டி ஏரி
பூண்டி ஏரி

குறிப்பாக, சோழிங்கநல்லூர் மண்டலத்தில் ஜூன் மாதத்தில் 4.55 மீட்டரில் கிடைத்த நிலத்தடி நீர், ஜூலை மாதத்தில் 3.20 மீட்டர் ஆகக் குறைந்துள்ளது. தேனாம்பேட்டை மண்டலத்தில் ஜூனில் 6.51 மீட்டர் ஆக இருந்த நிலத்தடி நீர், ஜூலையில் 4.92 மீட்டர் ஆக குறைந்துள்ளது. அதேபோல், அண்ணாநகர் மண்டலத்திலும், 6.30 மீட்டரிலிருந்து 4.94 மீட்டராக குறைந்துள்ளது. இவை தவிர ஆலந்தூர், வளசரவாக்கம், அடையாறு, மணலி மற்றும் திருவொற்றியூர் ஆகிய மண்டலங்களிலும் தலா ஒரு மீட்டர் அளவிற்கு நிலத்தடி நீர் குறைந்துள்ளது.

ஏற்கனவே, தொழில் பாதிப்பு, வேலையின்மை என மக்கள் நசிந்திருக்கும் நிலையில், குடிநீர் தட்டுப்பாடும் மக்களை பாதிப்பிற்கு உள்ளாக்குமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது. வரவிருக்கும் தென்மேற்கு பருவமழையால் நிலத்தடி நீர் உயரும் என்ற நம்பிக்கை இருந்தாலும், தற்போதைய நிலவரப்படி சென்னையில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை என்கின்றனர் வானிலை ஆய்வு மையத்தினர்.

புழல் ஏரி
புழல் ஏரி

கடந்தாண்டு சென்னையை வறண்ட நிலைக்கு கொண்டுச் சென்ற குடிநீர் பஞ்சம், பல தொழில்களை முடக்கியது. விடுதிகள், உணவகங்களை மூட வைத்தது. மக்கள் நீருக்காக தவித்த நிலையில், வெளிமாவட்டங்களிலிருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவரும் சூழல் உருவானது. இந்த ஆண்டு ஏரிகள், குளங்கள் என அனைத்தையும் தூர்வாரி தயார் நிலையில் வைத்திருப்பதால், அதிக நீரை சேமிக்க முடியும் என்று மாநகராட்சி மற்றும் பொதுப்பணித் துறை தெரிவித்தாலும், மழை பெய்யுமா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

சென்னை குடிநீர் தட்டுப்பாடு
சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு

ஒருவேளை அப்படி ஒருசூழல் ஏற்பட்டால் தண்ணீர்த் தட்டுப்பாட்டை போக்க என்ன வழிகள் உள்ளன என்பது குறித்து, சென்னை குடிநீர் வாரியத் தலைமைப் பொறியாளர் ராமசாமி கூறுகையில், ” தற்போதய நிலையில் வீராணம் ஏரி முழுவதும் நிரம்பியுள்ளது. புழல் ஏரி 80% நிரம்பியுள்ளது. பூண்டி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் 2.7 டிஎம்சி நீர் உள்ளது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் போதிய அளவு மழை பெய்தால் குடிநீர் பிரச்னை இருக்காது. அப்படி பெய்யவில்லை என்றாலும், தற்போதைய நீர் இருப்பு, கண்டலேரு அணை, கிருஷ்ணா ஆறு, வீராணம் ஏரி, மற்றும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் சென்னை மக்களுக்கு போதுமான குடிநீர் வழங்க முடியும் " என்றார்.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்
கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்

தகுந்த இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றக்கூடிய இவ்வேளையில், தண்ணீருக்காக மக்கள் கூட்டம் கூட்டமாக முண்டியடித்து ஓடும் நிலைக்கு, தண்ணீர் தட்டுப்பாடு கொண்டு சென்று விடக்கூடாது என்பதே அனைவரின் ஏக்கமாக உள்ளது.

இதையும் படிங்க: கோயில் குளத்தை ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க வலியுறுத்தி வழக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.