ETV Bharat / city

’காஞ்சி காமாட்சி அம்மன் கோயில்தான் காமகோடி சக்தி பீடம்’

author img

By

Published : Feb 21, 2020, 11:38 PM IST

kamatchi
kamatchi

காஞ்சிபுரம்: மாமல்லபுரத்திற்கு அடுத்தபடியாக சிற்பங்களின் அழகை ரசிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பது காஞ்சி காமாட்சி அம்மன் கோயில்தான். இக்கோயிலின் சிறப்புப் பற்றியும், இங்கு நடக்கும் திருவிழாக்கள் குறித்தும் இப்போது பார்ப்போம்.

காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி எனும் அம்மனின் 51 சக்தி பீடங்களில், காஞ்சி காமாட்சி அம்மன் கோயில்தான் காமகோடி சக்தி பீடம் என்று அழைக்கப்படுகிறது. எட்டாம் நூற்றாண்டில் ஆதி சங்கரரால் இக்கோயில் சிறப்பு செய்யப்பட்டதாகவும், இங்குள்ள அம்மன் வேத வியாசரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதென்றும் கோயில் தல புராணம் கூறுகிறது.

காஞ்சிபுரத்தில் எவ்வளவோ சிவாலயங்கள் இருந்தாலும், அனைத்திற்குமான ஒரே சக்தி பீடமாக காமாட்சி அம்மன் கோயிலே விளங்குகிறது. இங்கிருக்கும் அம்மன் சிலை, ஒரு கையில் தாமரை மலரும், இன்னொரு கையில் கரும்பும், தோளில் கிளியுடனும் அமர்ந்திருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. திசைக்கு ஒன்றாய் நால்புறமும் வானுயர்ந்த கோபுரங்களும், அழகிய சிற்பங்களும் இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.

காஞ்சிபுரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் கோயில் புண்ணிய தலமாக கருதப்படுவதால், இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக முக்கிய நாட்களில் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். கோயிலின் உள்ளே 100 கால் மண்டபம், தெப்பக்குளம், 70 கிலோ தங்கத்தால் ஆன கோபுரம் போன்றவற்றைக் காண பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் குவிகின்றனர். ஆண்டுதோறும் மாசி மாதத்தில் இங்கு திருவிழா நடைபெறுகிறது. அப்போது தெப்ப உற்சவம், திருவீதி உற்சவம் என சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், ஒவ்வொரு தமிழ் மாதத்தின் கடைசி வெள்ளியன்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

சென்னைக்கு அருகே அமைந்திருக்கும் ஊர் என்பதால் போக்குவரத்திற்கு தொடர்வண்டி, பேருந்து என அனைத்து வசதிகளும் உள்ளன. கோயிலுக்கு அருகிலேயே தங்கும் விடுதிகளும், தரமான உணவு விடுதிகளும் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதற்கும் இலகுவாக உள்ளது. தமிழ்நாடு அறநிலையத்துறையின் கீழ் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வரும் இக்கோயில், காஞ்சிபுரம் சென்றால் போய் பார்க்க வேண்டிய சிறந்த சுற்றுலா இடமாகும்.

இதையும் படிங்க: ஆட்டுக் குடல் போர்த்தி சாமி ஆடும் விநோத வழிபாடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.