ETV Bharat / city

சூரப்பா மீதான விசாரணைக்குழுவின் கால அவகாசம்: மேலும் 3 மாதம் நீட்டிக்கக்கோரி கடிதம்!

author img

By

Published : Feb 9, 2021, 1:49 PM IST

சூரப்பா மீதான விசாரணை குழு மேலும் மூன்று மாத கால அவகாசம்!
சூரப்பா மீதான விசாரணை குழு மேலும் மூன்று மாத கால அவகாசம்!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட அலுவலர் ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன் குழுவின் கால அவகாசத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டுமென அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ததில் சில தவறுகள் நடந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா தனது காலத்தில் சுமார் 280 கோடி ரூபாய்க்கு ஊழல்கள் செய்துவிட்டதாக அரசுக்குப் புகார்கள் வந்துள்ளன.

அந்தப் புகார்கள் குறித்து விசாரணை செய்து அறிக்கை அளிப்பதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் விசாரணை அலுவலராக நியமனம்செய்து உயர்க் கல்வித் துறைச் செயலாளர் அபூர்வா நவம்பர் மாதம் 11ஆம் தேதி உத்தரவிட்டார்.

அந்த உத்தரவில் நிதி முறைகேடுகள், நியமன முறைகேடுகள் உள்ளிட்டவற்றை விசாரணை செய்து மூன்று மாத காலத்திற்குள் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். அதன்படி விசாரணைக் குழுவின் காலம் பிப்ரவரி 11ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை அலுவலர் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் கூறியதாவது, “அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா மீது புகார் அளித்தவர்களை விசாரணை செய்துவிட்டோம். ஆனால் புகார்தாரர்கள் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து ஆவணங்களை பல்கலைக்கழகத்தில் கேட்டால் தருவற்கு காலதாமதம் செய்கின்றனர். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா தொடர்ந்து நீடித்துவரும் நிலையில், அங்கிருந்து ஆவணங்களைப் பெறுவதில் சவால்களும், சிரமமும் உள்ளன.

அதேபோல் பிற துறைகளில் நடைபெற்ற நியமனங்கள் குறித்து ஆவணங்களைக் கேட்டு ஆய்வுசெய்துள்ளோம். அவற்றில் சில தவறுகள் நடைபெற்றதும் தெரியவந்துள்ளது. புகார்தாரர்களை விசாரித்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் அலுவலர்களை அழைத்து விசாரணை செய்ய வேண்டியுள்ளது.

எனவே, விசாரணை ஆணையத்தின் காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். ஆனால் விசாரணையை விரைந்து முடித்து அதற்கு முன்னர் சமர்ப்பிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுவருகிறோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் சதீஷ்குமார் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.