பி.ஹெச்டி., ஆராய்ச்சி படிப்பில் கால் பதித்த முதல் இருளர் மாணவி!

author img

By

Published : Apr 2, 2022, 6:47 AM IST

Updated : Apr 2, 2022, 8:44 AM IST

ஆராய்ச்சித்துறையில் கால் பதித்த முதல் இருளர் மாணவி

பி.ஹெச்டி ஆராய்ச்சி படிப்பில் முதல் முதலாக கால் பதித்த இருளர் சமூக மாணவியின் நேர்காணலை காணலாம்.

சென்னை: வறுமை, பொருளாதார நெருக்கடியிலும், முதுகலை, எம்பில் பட்டத்தை இடைநின்று படித்து முடித்தவர் கே.ரோஜா. இவர், சென்னை லயோலா கல்லூரியில் பி.ஹெச்டி ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார்.

தமிழ் வழியில் படித்த மாணவி கே. ரோஜா தற்போது சென்னை லயோலா கல்லூரியில் பிளாண்ட பயாலஜி அண்ட் பயோ டெக்னாலஜி துறையில் பி.ஹெச்டி ஆய்வுப் பட்டப் படிப்பைப் படித்து வருகிறார். இருளர் பழங்குடியினரில் பி.ஹெச்டி பட்டப் படிப்பில் சேர்ந்து படிக்கும் முதல் பெண் இவர்தான்.

சாதி சான்றிதழ் வழங்கவில்லை: தொழில்நுட்பம் வளர்ந்திருந்தாலும் சாதி சான்றிதழ் வழங்குவதில் உள்ள சிக்கல் தீரவில்லை என சுட்டிக்காட்டும் முனைவர் பட்டப் படிப்பு ஆராய்ச்சி மாணவி ரோஜா, தங்களுக்கான வாழ்க்கையின் வழி தெரிந்து விட்டதாகவும், அதன் இலக்கை அடைய தேவையான சாதி சான்றிதழ் கிடைத்தால், வழியில் உள்ள முள்களை எடுத்துப் போட்டுவிட்டு முன்னேறுவோம் என நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.

பாம்பு பிடித்து வந்த தங்களின் முன்னோர்கள் ஒரு தலைமுறையாக செங்கல் சூளையில் வாழ்க்கையை கழித்து வந்துள்ளனர் எனக் கூறும் ரோஜா, தனக்கு முதுகலை பட்டம் பெற்றப்பின்னரே வெளி உலகம் தெரிந்ததால், தனது , தம்பி, தங்கையையும் படிக்க வைக்க முடியாமல் போனதை நினைத்து வருத்தம் அடைவதாகவும் தெரிவித்தார்.

முனைவர் ஆராய்ச்சி படிப்பில் கால் பதித்த முதல் இருளர் மாணவி

இது குறித்து ஆராய்ச்சி மாணவி கே.ரோஜா ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள மரூர் கிராமத்தில் பிறந்து, அரசுப் பள்ளிக்கு தானாக சென்று படிக்கத் தொடங்கியவர் ரோஜா.

தனது 4 வயதில் பக்கத்து வீட்டு அக்காவின் கையை பிடித்துக் கொண்டு பள்ளிக்கு சென்றவர். தலைமை ஆசிரியர் அவரின் தந்தையிடம் உங்களின் மகள் நன்றாக படிக்கிறார். பள்ளியில் சேருங்கள் என அறிவுறுத்தியதால், தனது தந்தை பள்ளியில் சேர்த்தார்.

பள்ளிப் படிப்பைக்கூட படிக்கவில்லை: தனது குடும்பத்தில், பரம்பரை பரம்பரையாகப் பள்ளிக்கூடத்தையே எட்டிப் பார்க்கவில்லை. அவரது அப்பா கலிவரதனும் அம்மா குமாரியும் பள்ளிப் படிப்பைக்கூட படிக்கவில்லை.

அந்த அளவுக்குக் குடும்பம் ஏழ்மை நிலையில் இருந்தது. இருவருக்கும் செங்கல் சூளையில்தான் வேலை. அந்த வருமானத்தில்தான் எனது தம்பி, தங்கைகளையும் சேர்த்து ஐந்து பேர் கொண்ட குடும்பம் நடக்க வேண்டும்.

இந்த அளவுக்கு சிரமமான சூழ்நிலையில், மரூரில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை பாட்டி வீட்டில் தங்கிப் படித்தேன். பள்ளி ஆசிரியைகள் படிப்பதற்கு ஊக்கமளித்து வந்தார்கள்.

எப்படியாவது நன்றாகப் படித்து நல்ல வேலைக்குப் போக வேண்டும் என்று சொல்லி அந்த சின்ன வயதிலேயே என்னைப் படிக்கத் தூண்டினார்கள். மேலும் எனக்கு பள்ளிக்கு சென்றால் தலைச்சீவி ஆசிரியர்கள் பார்த்துக் காெள்வார்கள்.

அதனால் எனக்கு வீட்டில் இருப்பதை காட்டிலும் பள்ளியில் இருப்பது தான் மிகவும் விருப்பமாக இருந்தது. ஐந்தாவது படித்து முடித்தும், ஆறாவது படிக்க மரூரிலிருந்த 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரெட்டணை கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்ல வேண்டும்.
எனது படிப்பு அத்துடன் தடைப்பட்டு விடுமோ என நினைத்தேன். எனது தாயிடம் தொடர்ந்து படிக்க வேண்டும் எனக் கேட்டேன். என்னைத் தொடர்ந்து படிக்க வைத்தார்கள். சொந்த ஊரிலிருந்து காலையில் 7 மணிக்கு பேருந்தில் போய்விட்டு மாலையில் 6 மணிக்கு பேருந்தில் திரும்பி வர வேண்டும். பள்ளிப் படிப்பு முழுக்க தமிழ் வழியில்தான் படித்தேன்.

கடும் முயற்சிக்குப் பிறகு..: பத்தாம் வகுப்பு தேர்வை எழுதி, அதில் 500க்கு 275 மதிப்பெண்கள் பெற்றேன். அதன் பின்னர் 12ஆம் வகுப்புத் தேர்வில் 1200க்கு 772 மதிப்பெண்கள் பெற்றேன். தொடர்ந்து என்னப் படிப்பது என்பது தெரியாமல் இருந்தேன்.

இந்த நிலையில், பேராசிரியர் கல்யாணியின் அறிவுறுத்தலின் படி, விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரியில் பிஎஸ்சி தாவரவியல் படிப்பில் சேர விணப்பித்தேன். கல்லூரியில் சேர விண்ணப்பம் செய்தது எனது குடும்பத்தினருக்கு தெரியாது.

எனக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் கிடைக்கவில்லை. கல்லூரிக்கு படிக்க செல்லும் போது தான் சாதி சான்றிதழ் தேவை என்பதை அறிந்தேன். சாதி சான்றிதழ் இருந்தால் தான் கல்லூரியில் சேர்க்க முடியும் என முதல்வர் தெரிவித்தார்.

அதனால் முதல் கட்ட கவுன்சிலிங்கில் இடம் கிடைக்கவில்லை. இறுதிக் கட்ட கலந்தாய்வில் பொதுப்பிரிவில் சேர்த்துக் கொள்வதாகவும், சாதிச் சான்றிதழ் கிடைத்தால்தான் எனக்கு கல்வி உதவித் தொகை கிடைக்கும் எனவும் தொிவித்தார்.

மேலும் கல்லூரி முதல்வர் எனக்கு, பிஸ்சி தாவரவியல் படிப்பில் இடம் கொடுத்தார். அரசுக் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்தேன். மேலும் பேராசிரியர் கல்யாணியின் கடும் முயற்சிக்குப் பிறகுதான் எனக்கு பழங்குடியினருக்கான சாதிச் சான்றிதழ் ஒராண்டு கழித்து கிடைத்தது. அதனால் எனக்கு இரண்டாம் ஆண்டிலிருந்து கல்வி உதவித் தொகை கிடைத்தது. அதனால் கல்லூரியில் தொடர்ந்து படிக்க முடிந்தது.
கல்லூரியில் பாடமொழி ஆங்கிலம் என்றாலும் தேர்வுகளைத் தமிழில் எழுத அனுமதித்தார்கள். அதனால் எனக்குப் படிப்பதில் பிரச்சினை இல்லை. பிஎஸ்சி பட்டப் படிப்பில் 62 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன். அதையடுத்து, முதுநிலைப் பட்டப் படிப்பில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று விரும்பினேன். குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை.

எனவே, பெருந்துறையில் உள்ள சாயநூல் கம்பெனியில் லேப் டெக்னிஷியனாகப் போய் சேர்ந்தேன். மாதம் ரூ.12 ஆயிரம் சம்பளம். எனது சாப்பாட்டுக்கும் வீட்டுக்கும் கொடுத்தது போக மீதம் உள்ள பணத்தைச் சேர்த்து வைத்தேன். எப்படியும் தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

ஒராண்டு சேர்த்த அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு 2015ஆம் ஆண்டில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் எம்எஸ்சி தாவரவியல் படிப்பில் சேர்ந்தேன். எம்எஸ்சி படிப்பும் ஆங்கில வழியில்தான். ஆங்கில வழியில் தேர்வு எழுத வேண்டும்.

ஆங்கிலத்தில் எழுதுவற்கு சிரமமாக இருந்தது: பாடங்கள் புரிந்தாலும்கூட, ஆங்கிலத்தில் எழுதுவற்கு சிரமமாக இருந்தது. இந்த நிலையில் முதலாம் ஆண்டு தேர்வு அன்று படித்த பாடங்கள் அனைத்தும் மறந்து விட்டது என எனது தாயிடம் கூறி அழுதேன்.

அவர் தேர்வு எழுதி பெயிலானலும் பரவாயில்லை, எழுது என ஆறுதலாக கூறினார். ஆனால் அரியர்ஸ் எதுவும் வைக்கவில்லை. கொஞ்ச நாள் சிரமமாக இருந்தது. அப்புறம் என்னை தயார்படுத்திக் கொண்டு படித்தேன்.

எம்எஸ்சி படிப்பில் 82 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றேன். எங்களது கல்லூரியில் எங்களது பாடப்பிரிவில் நான்தான் முதல் மாணவி. அதைத் தொடர்ந்து பலரது உதவியுடன் 2017-இல் சென்னை மாநிலக் கல்லூரியில் எம்பில் படிப்பில் சேர்ந்து படித்தேன்.

அதனைத் தொடர்ந்து சென்னை லயோலா கல்லூரியில் ஆராய்ச்சி படிப்பில் சேர வேண்டும் என பேராசிரியர் கல்யாணியிடம் கூறினேன். அவர் வேட்டவலத்தில் உள்ள லயோலா கல்லூரியின் முதல்வர் மூலம் சென்னை லயோலா கல்லூரியின் முதல்வரிடம் பேசினார்.

அதனைத் தொடர்ந்து தற்போது லயோலா கல்லூரியில் பிளாண்ட பயாலஜி அண்ட் பயோ டெக்னாலஜி துறையில் பிஎச்டி படித்து வருகிறேன்.

எனது ஆய்வுத் தலைப்பு: Antidiabetic and Antilipidemic activity of medicinal plants in invitro , invivo and insilico methods, பேராசிரியர் அகஸ்தியன் மேற்பார்வையில் பிஎச்டி ஆய்வை மேற்கொண்டு வருகிறேன்.

இருளர் இனத்தில் பிறந்ததற்காக நன்றாக ஆடை உடுத்தி, வாழ்க்கைத் தரத்தில் நாங்கள் மேம்படக்கூடதா? எனவும், சாதி சான்றிதழ் வாங்கச் சென்றால், எங்களின் முன்னோர்கள் இருந்தது போல், அழுக்கு முகம், கிழிந்த ஆடையுடனுமா? இருக்க முடியும். எங்களுக்கும் சாதிச் சான்றிதழ் அளித்தால் நாங்களும் கல்வி அறிவு பெற்று வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவோம்.

அரசின் மீது நம்பிக்கை: இருளர் இனத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து, கல்வியை கற்பிக்க வேண்டியது அரசின் பொறுப்பாகும். அதேபோல் எங்களின் இனத்திற்கான சாதி சான்றிதழ் பெறுவதில் உள்ள சிக்கலை அரசு தீர்க்கும்.

தற்போது என்னை முன்னுதாரணமாக கூறி தங்கள் ஊரில் குழந்தைகளை படிக்க வைக்கின்றனர் என்பது பெருமையாக இருந்தாலும், செங்கல் சூளையில் வேலை பார்ப்பதற்காக சென்னைக்கு தொடர்ந்து குழந்தைகளுடன் வருகின்றனர்.

எனவே அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த தங்கள் ஊரில் மாற்றுத் தொழில் செய்ய வழி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: VideoLeak:பட்டியலின மாணவனை அதிக கட்டணம் செலுத்தக் கூறி பேரம் பேசிய தாளாளர்

Last Updated :Apr 2, 2022, 8:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.