முதுகலை நீட் நுழைவுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: இந்திய மருத்துவச் சங்கம் கடிதம்

author img

By

Published : May 12, 2022, 6:53 PM IST

முதுகலை நீட் நுழைவுத் தேர்வை ஒத்திவைக்க கோரிக்கை

முதுகலை மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வை ஒத்திவைக்க மத்திய அமைச்சருக்கு இந்திய மருத்துவச் சங்கம் கடிதம் அனுப்பி உள்ளது.

சென்னை: இந்திய மருத்துவச் சங்கம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியாவிற்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "முதுகலை நீட் நுழைவுத் தேர்வு கடந்தாண்டு கரோனா நோய்த் தொற்று காரணமாக, அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு தான் நீட் முதுகலைத் தேர்வு நடைபெற்றது.

அக்டோபர் மாதம் தொடங்கப்பட வேண்டிய முதுகலை கலந்தாய்வு, மருத்துவப் படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கும் அரசின் முடிவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால் ஜனவரி மாதம் தான் தொடங்கப்பட்டது. இதற்கிடையே, கடந்த மார்ச் 30ஆம் தேதி சிறப்பு கலந்தாய்வு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு கலந்தாய்வை மேலும் தாமதப்படுத்தியது.

அகில இந்திய மற்றும் மாநில அளவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற கலந்தாய்விற்கு பிறகும், காலியிடங்களை நிரப்புவதற்காக விடுபட்ட இடங்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதன் காரணமாக, வழக்கமாக ஏப்ரல் மாதம் நடைபெறும் நீட் முதுகளைத் தேர்வு மே மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், மார்ச் மாதத்துக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட அகில இந்திய இடங்களுக்கான கலந்தாய்வு தற்போது வரை முடியவில்லை. இன்னும், பல மாநிலங்கள் தங்களுக்கான கலைந்தாய்வை முடிக்க வில்லை. எனவே, 2021 மருத்துவ முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு முடிவடைதற்கும், 2022 நீட் தேர்வு தொடங்கப்படுவதற்கும் இடையே மிகவும் குறுகிய காலமே உள்ளது. இதுபோன்ற தேர்வினை எதிர்க்கொள்வது மிகவும் கடினமானது.

மேலும், கடந்தாண்டு ஏற்பட்ட கரோனா அலை காரணமாக, மருத்துவ சேவை மற்றும் லேசான கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு‌ சிகிச்சை அளிக்கும் பணியில், இறுதி ஆண்டு எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், 2022 நீட் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்க கரோனா சிகிச்சை பணி கட்டாயமாக்கப்பட்டது. எனவே, மாணவர்களின் நலன் கருதி, அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து சில மாத காலம் கழித்தே தேர்வு நடைபெற வேண்டும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கல்வி உதவித்தொகை வழங்குவதில் முறைகேடு - தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.