ETV Bharat / city

ரேஷன் அட்டை உள்ள குடும்பத்தினருக்கு ரூ. 5000 வழங்க வேண்டும் - முத்தரசன்

author img

By

Published : Apr 17, 2020, 1:44 PM IST

indian communist party leader muththarasan press meet
indian communist party leader muththarasan press meet

சென்னை: குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

"கரோனா நோய்க் கிருமித் தொற்று உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 15 பேர் இறந்தனர். இந்த வைரஸ் தொற்றுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது.

பிற நாடுகளுடன் போர் வரும் பொழுது எப்படி ஒன்றுபட்டு எதிர் கொள்கிறோமோ அது போன்று அனைவரும் இந்த வைரஸுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசியமும், தேவையும் இருக்கிறது. மாநில அரசு எதிர்க்கட்சிகளுடன் கூட்டத்தை நடத்தி மக்களுடைய பிரச்னையை கேட்டறிந்து தீர்வுக்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தோம். அந்த வேண்டுகோளை அரசு நிராகரித்துள்ளது.

மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து கரோனா வைரஸுக்கு எதிராக எடுக்கக்கூடிய ஊரடங்குச் சட்டம் உள்பட அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்று அறிவித்து உள்ளோம். இதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. ஆனால் பிரதமர் அறிவித்துள்ள ஊரடங்கை விரிவுபடுத்தி நீட்டிக்கும் போது இதனால் பாதிக்கப்படுகின்ற மக்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும். அதற்கான வழிமுறைகள் என்னவென்ற கேள்விக்கு மத்திய, மாநில அரசுகளிடம் நல்ல பதில்களை பெற முடியாதது வேதனையளிக்கிறது.

பிரதமர் உரையாற்றியபோது நாட்டு மக்களுக்கு ஏழு அறிவுரைகளை கூறியுள்ளார். இந்த ஏழு அறிவுரைகளையும் மக்கள் பின்பற்றும் பொழுது அதிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள பொருளாதார ரீதியாக மத்திய அரசாங்கம் என்ன உதவிகளை செய்கிறது என்பதற்கு எந்த பதிலும் இல்லை. அதேபோல் மாநில அரசு 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என அறிவித்த பிறகு, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். மற்றவர்களைப் பற்றி எந்த அறிவிப்பும் செய்யவில்லை.

பல தொழில்களில் ஈடுபட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு, தற்போதுவரை எந்த ஒரு உதவியும் இல்லை. இந்த நிலை நீடித்தால் பட்டினிச்சாவு ஏற்படும் அபாயமுள்ளது. இந்த அபாயத்தை அரசு உணர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 5000 வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். விவசாயிகள் உற்பத்தி செய்யும் அத்தியாவசிய பொருட்களை அரசே நேரடியாக நல்ல விலைக்கு கொள்முதல் செய்து மக்களுக்கு விநியோகிக்க வேண்டும். ஆனால் இதுபோன்ற ஏற்பாடுகளை அரசு செய்யாமல் விவசாயிகளுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறோம் என்று சொல்வது நடைமுறையில் பொருத்தமற்ற செயலாகும்.

மின் கட்டணத்தை ஓரிரு மாதங்களுக்கு ரத்து செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார். மத்திய அரசிடம் மாநில அரசு கேட்ட 15,000 கோடி நிதியை முழுமையாக வழங்க வேண்டிய நிதியை வழங்க வேண்டும். மாநில அரசும் இதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

இது அரசியல் பிரச்னைகள் அல்ல. எனவே அனைவரும் ஒன்றிணைந்து கரோனாவுக்கு எதிரான யுத்தத்தை மேற்கொண்டு மக்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயமும் தேவையும் இருக்கிறது. மாநில அரசு எல்லாருடைய ஆதரவையும் பெற்று அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போது சிலவற்றிற்கு கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக கூறியிருந்தார். இந்த அறிவிப்புகள் நடைமுறைக்கு புறம்பான ஒன்றாக இருக்கிறது. மருத்துவ தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு மத்திய அரசும் மாநில அரசும் சில நிதிகளை அறிவித்துள்ளன. இது போதுமானது அல்ல. ஒரு கோடி ரூபாயாக உயர்த்தி அறிவிக்க வேண்டும்.

மருத்துவம், காவல்துறை, துப்புரவு ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நோய் தாக்கி இறந்து போனால் ராணுவத்தில் இறந்து போனவர்களுக்கு எவ்வாறு மரியாதையோடு அடக்கம் செய்யப்படுகிறதோ அதை போன்று இவர்களும் மரியாதை கொடுத்து அடக்கம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்". இவ்வாறு கூறினார்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.