ETV Bharat / city

சோழப்பேரரசி 'செம்பியன் மகாதேவியின் சிலை' கண்டுபிடிப்பு!

author img

By

Published : Jul 28, 2022, 3:30 PM IST

பல ஆண்டுகளுக்கு முன் திருடுபோன செம்பியன் மகாதேவி சிலை கண்டுபிடிப்பு
பல ஆண்டுகளுக்கு முன் திருடுபோன செம்பியன் மகாதேவி சிலை கண்டுபிடிப்பு

பல ஆண்டுகளுக்கு முன் திருடுபோன 10ஆம் நூற்றாண்டு சோழ வம்சத்தைச் சேர்ந்த, செம்பியன் மகாதேவி சிலை அமெரிக்காவில் இருப்பதைக்கண்டறிந்து அதை மீட்கும் பணியில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை: கடந்த 2018ஆம் ஆண்டு, யானை ராஜேந்திரன் என்பவர் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் 2015ஆம் ஆண்டு வாஷிங்டன் டிசியில் உள்ள 'free gallery of art' அருங்காட்சியத்தை பார்வையிட்ட போது, அங்கு 10ஆம் நுற்றாண்டைச்சேர்ந்த சோழர் வம்சத்தைச்சேர்ந்த செம்பியன் மகாதேவி சிலை இருப்பதை கண்டதாகவும்,

அதன்பிறகு நாகப்பட்டினத்தில் உள்ள செம்பியன் மகாதேவி கிராமத்தில் உள்ள கைலாசநாதர் சுவாமி சிவன் கோயிலுக்கு சென்று விசாரித்தபோது, 1959ஆம் ஆண்டுக்குப் பிறகு அறநிலையத்துறை அலுவலர்களால் உருவாக்கப்பட்ட 3.5 அடி 'சிலை செம்பியன் மகாதேவி சிலை' வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

30 ஆண்டுகளுக்கு முன்பு, அற நிலையத்துறை அலுவலர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் உதவியுடன், பழங்கால செம்பியன் மகாதேவி சிலை திருடப்பட்டதாகத்தெரிவித்துள்ளார். இந்தப்புகாரின் பேரில் வேளாங்கண்ணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, பின்னர் இந்த வழக்கு சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவுக்கு மாற்றப்பட்டு நிலுவையில் இருந்து வந்தது.

இந்நிலையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி உத்தரவின்பேரில், இந்த வழக்கில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்திய தொல்லியல் துறையிடமிருந்து காணாமல் போன கைலாச நாதர் சுவாமி கோயிலின் கல்வெட்டுகளைப் பெற்றும், 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் கோயில் ஊழியரிடம் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

யார் இந்த செம்பியன் மகாதேவி? விசாரணையில் சோழப்பேரரசர் காந்திரதித்ய தேவரின் மனைவி செம்பியன் மகாதேவி என்பதும், காந்திரதித்ய தேவர் இறந்த பின்பு செம்பியன் மகாதேவி, கோயில் கட்டுவதிலேயே தனது வாழ்க்கையை அர்ப்பணித்ததும் தெரியவந்தது. கும்பகோணத்தில் ஸ்ரீ காந்தா அகஸ்தீஸ்வரம் கோயில் தொடங்கி, 60 ஆண்டுகளாக அவர் பல கோயில்களைக் கட்டினார்.

அவர் வாழ்ந்த காலங்களில் செம்பியன் மகாதேவி பிறந்த நாளை சிறப்புக்கொண்டாட்டமாக அவரது மகன் நடத்துவார். அப்போது செம்பியன் மகாதேவி சிலையை ஊர்வலமாக கொண்டு செல்வதும் வழக்கமுண்டு எனக்கூறப்படுகிறது. அப்போது உருவாக்கப்பட்ட சிலை தான், இந்த செம்பியன் மகாதேவி சிலை என சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினரால் சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் 1929ஆம் ஆண்டுக்கு முன்பாக கோயிலில் இருந்து சிலை திருடப்பட்டு இருப்பதாகவும், இதனால் அப்போது அறநிலையத்துறை உருவாக்கப்படாததால், அவர்களுக்கு இதில் தொடர்பில்லை எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், அமெரிக்காவில் உள்ள ’free gallery of art’ அருங்காட்சியம், நியூயார்க்கில் உள்ள ஹேகோப் கெவோர்கியன் என்பவரிடமிருந்து சிலையை வாங்கி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹேகோப் கெவோர்கியன் 1969ஆம் ஆண்டு இறந்துள்ளதும் இந்த சிலையை யாரிடமிருந்து வாங்கியுள்ளார் என்ற விசாரணை நடைபெற்று வருவதாகவும் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பல ஆண்டுகளுக்கு முன் திருடுபோன செம்பியன் மகாதேவி சிலை கண்டுபிடிப்பு
பல ஆண்டுகளுக்கு முன் திருடுபோன செம்பியன் மகாதேவியின் சிலை கண்டுபிடிப்பு

மேலும் கைலாச நாதர் சுவாமி கோயிலில் தற்போதுள்ள சிலை போலி என்பதும், யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்காவில் உள்ள செம்பியன் மகாதேவி சிலையை மீட்டு கொண்டு வருவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பல நூறு கோடி மதிப்புடைய 14 பழங்கால சிலைகள் மீட்பு - சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.