சென்னை: திண்டிவனம் கிராண்டிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கொத்தனார் சுப்பிரமணி (40). இவருக்கு 2015ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கனிமொழி (24) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 வயதில் மகன் உள்ளார்.
திருமணமான 2 வருடங்களிலேயே கணவர், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கனிமொழி தனது மகனுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் சுப்பிரமணி அடிக்கடி மாமியார் நிர்மலா வீட்டிற்குச் சென்று தனது மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார்.
மனைவியை கொலை செய்த கணவர்
இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் சுப்பிரமணி வேலைக்குச் செல்லாமல் சுற்றி திரிவதால் கனிமொழியை அவருடன் அனுப்ப நிர்மலா மறுத்து வந்தார்.
நேற்று மீண்டும் சுப்பிரமணியன் மாமியார் வீட்டிற்கு சென்று மனைவி கனிமொழியை தன்னுடன் வாழ அனுப்புமாறு கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டு பின்னர் கனிமொழி தனது தாயுடன் அறைக்கு தூங்க சென்றனர். அனைவரும் சென்ற பின்னர் சுப்புரமணி யாருக்கும் தெரியாமல் மனைவி வீட்டு மொட்டை மாடிக்குச் சென்று பதுங்கியுள்ளார்.
அதிகாலை கனிமொழி தனது மகனுடன் தூங்கிக் கொண்டிருந்த போது உள்ளே நுழைந்த கணவர் சுப்பிரமணி அருகில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து மனைவி கனிமொழி தலையில் போட்டுக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதில் கனிமொழி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சரணடைந்த கணவர்
பின்னர், இது குறித்து தாய் நிர்மலா ஐஸ் ஹவுஸ் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், கனிமொழியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில், மனைவியை கொலை செய்த கணவர் சுப்பிரமணி, ஜாம்பஜார் காவல் நிலையத்தில் சரணடைந்தார். ஜாம்பஜார் காவல் துறையினர் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற ஐஸ்ஹவுஸ் காவல் துறையினர், சுப்பிரமணியை கைது செய்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் கனிமொழிக்கு கடந்த மூன்று வருடங்களாக வேறொரு நபருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து, உண்மை நிலை குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: முன்விரோதம்: ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை