ETV Bharat / city

மின்வாரியத்தில் ஹெல்பர், வயர்மேன் பணியிடங்கள் தனியாரிடம் ஒப்படைப்பு!

author img

By

Published : Dec 17, 2020, 1:56 PM IST

Updated : Dec 17, 2020, 6:19 PM IST

மின்வாரியத்தில் ஹெல்பர்
மின்வாரியத்தில் ஹெல்பர்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஹெல்பர், வயர்மேன் பணியிடங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டமாக, மின்வாரிய பணியிடங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுவருவது, அத்துறைப் பணியாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள பொதுத் துறை நிறுவனங்களில் மிகப்பெரிய நிறுவனமாக தமிழ்நாடு மின்வார வாரியம் உள்ளது. பொறியியல் படிப்புகள், தொழில்நுட்பப் படிப்புகள் முடித்தவா்கள் முதல் எட்டாம் வகுப்பு படித்தவர்கள் வரை, இத்துறையில் பணியில் அமர்த்தப்படுகின்றனர். இத்துறையிலுள்ள பணியாளர்களில் ஹெல்பர், வயர்மேன் பொதுமக்களிடம் நேரடியாகத் தொடர்பில் உள்ளவர்கள் ஆவர்.

மின்வாரியத்தில் துணை மின் நிலையங்கள் தனியார் பராமரிப்பில் விடப்பட்ட நிலையில், தற்போது ஹெல்பர், வயர்மேன் பணியிடங்களிலும் தனியார் நிறுவனத்தின் மூலம் பணியாட்களை நியமிக்க அனுமதி வழங்கியுள்ளது மின்வாரியம். வீடுகள், தொழிற்சாலைகள், விவசாய மின் இணைப்புகளில், மின் பழுது ஏற்படும்போது, மேற்குறிப்பிட்ட பணியாளர்கள்தான் முதலில் பழுது சரிசெய்யும் பணியில் ஈடுபடுவர்.

குறிப்பாக, வீடுகளுக்கு மின்சாரத்தைக் கடத்தும் மின்மாற்றியில் ஏற்படும் பழுதினை ஹெல்பர் அல்லது வயர்மேன்தான் பழுதுநீக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவர். தற்போது தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரின் உத்தரவின்பேரில், தலைமைப் பொறியாளர் (பணியாளர்) ரவிச்சந்திரன் அனைத்து தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வாடிக்கையாளர்களுக்குத் தடையின்றி மின்சாரத்தைத் தரமான சேவையாக வழங்க வேண்டியுள்ளது.

சுற்றறிக்கை
சுற்றறிக்கை

3 ஆண்டுகள் தனியார் வசம்

இதற்கு மின்சாரத்தை அளிக்கும் கடத்திகளை தினமும் பராமரிக்க வேண்டியுள்ளது. எனவே பராமரிப்புப் பணிக்காக மூன்று ஆண்டிற்குத் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கவும், தேவைப்பட்டால் கூடுதலாக மேலும் ஒரு ஆண்டிற்குத் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை நீட்டிக்கவும் அனுமதிக்கப்படுகிறது.

மேற்பார்வைப் பொறியாளர்கள் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பிரிவு அலுவலகங்களில் காலியாக உள்ள ஹெல்பர், வயர்மேன் பணியிடங்களில், 20 நபர்களை மூன்று ஆண்டுகள் தனியார் நிறுவனத்தின் மூலம் பணியில் அமர்த்தலாம்.

சுற்றறிக்கை
சுற்றறிக்கை

போராட்டத்தில் ஊழியர்கள்

இவர்களுக்கு ஒரு கோடியே 80 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் கட்டணமாக அளிக்கப்படும். உதவிப் பொறியாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில், 50 விழுக்காட்டிற்கு மேல் காலியாக இருந்தால் 20 பணியாளர்களைத் தனியார் நிறுவனத்துக்கு அளிப்பதற்குத் தனி டெண்டர் விடலாம். உதவிப் பொறியாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் 25 விழுக்காட்டிற்கு மேல் காலியாக இருந்தால் இரு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களை இணைத்து, 20 பணியாளர்களைத் தனியார் நிறுவனத்துக்கு அளிப்பதற்கென தனியாக டெண்டர் விடலாம்.

உதவிப் பொறியாளர் பிரிவில் 25 விழுக்காட்டிற்கும் குறைவாக காலிப்பணியிடம் இருந்தால் அங்குள்ள பணியாளர்களை வைத்து பணிபுரிய வேண்டும். ஒரு பணியாளருக்கு தினமும் 412 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும். 30 நாள்கள் கொண்ட மாதத்திற்கு 12,360 ரூபாய் வழங்கப்படும். ஆண்டிற்கு ஐந்து விழுக்காடு தினக்கூலி உயர்த்தி வழங்கப்படும். தனியார் நிறுவனத்திற்கு மூன்று ஆண்டிற்கு ஒரு கோடியே 80 லட்சத்து 88 ஆயிரம் அளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மின்வாரியத்தில் இந்த அறிவிப்பு வெளியானது முதல் தற்போது பணியிலுள்ள ஊழியர்கள் காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

தாரைவார்க்கப்பட்ட துணை மின் நிலையங்கள்

தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம், மதுரை மாவட்டம், சமயநல்லூர், திருப்பத்தூர் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள துணை மின் நிலையம் ஆகியவற்றை இரண்டு ஆண்டுகள் பராமரிப்பதற்கும், இயக்குவதற்கும் தலா ரூ.93.67 லட்சத்திற்குத் தனியாருக்குவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், உயரழுத்த மின் பாதை 300 கிலோ மீட்டர் நீளத்திற்கு, மூன்று ஆண்டுகள் பராமரிக்க மூன்று கோடியில் தனியாருக்கு விடுவதற்கும், தமிழ்நாடு மின்சார வாரியம் அனுமதி அளித்துள்ளது.

ஹெல்பர், வயர்மேன் பணியிடங்கள் தனியார் வசம் என்ற அறிவிப்பைக் கண்டித்து போராடும் மின்வாரிய பணியாளர்கள்
ஹெல்பர், வயர்மேன் பணியிடங்கள் தனியார் வசம் என்ற அறிவிப்பைக் கண்டித்து போராடும் மின்வாரிய பணியாளர்கள்

அதேபோன்று புளியந்தோப்பில் அமைக்கப்பட்ட புதிய 400/230 கே.வி. (Kilo volt) துணை மின் நிலையத்தை இரண்டு ஆண்டுகளுக்கு, தினமும் மின் தடையின்றி பராமரிப்பதற்காகத் தனியாருக்கு ரூ.202 கோடியே 39 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும் அனுமதி அளித்துள்ளது.

நிவர் புயல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. அதனைச் சரிசெய்த பின்னர், தனியாருக்கு ஒப்படைக்கப்படும். துணை மின் நிலையங்கள் மீண்டும் மின்சார வாரியத்தால் பெறப்பட்டு பராமரிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

ஆனால் அவருக்கே தெரியாமல் இதுபோன்று தனியார் நிறுவனத்தின் மூலம் பணியாளர்கள் தேர்வுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகப் பரவலாகப் பேசப்படுகிறது குறிப்பிடத்தக்கது. மின்வாரியத்தில் தொடர்ந்து பல்வேறு பணிகள் தனியாருக்குத் தாரைவார்க்கப்படுவது, அத்துறை ஊழியர்களிடம் ஒருவிதக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திருப்பத்தூர் துணைமின் நிலைய பராமரிப்புப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு!

Last Updated :Dec 17, 2020, 6:19 PM IST

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.