ETV Bharat / city

குறைபாடுகள் இருந்தால் நேரடியாக விவாதிக்க தயார் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

author img

By

Published : Oct 7, 2021, 7:11 PM IST

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கடந்த ஆண்டை காட்டிலும் மருத்துவ துறைக்கு நிதி ஒதுக்கியதில் எவ்வித குறைபாடும் இல்லை, குறைபாடுகள் இருந்தால் நேரடியாக விவாதிக்க தயார் என ஓ. பன்னீர்செல்வத்திற்கு, மக்கள் நல்வாழ்வுத் துறை மா. சுப்பிரமணியன் சவால் விடுத்துள்ளார்.

சென்னை: உத்தரகாண்ட் பிரதமர் சேவை நல நிதியின் மூலம் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்நிலையில், சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் நடைபெற்ற புதிய பிஎஸ்ஏ ஆக்சிஜன் நிலையத்தினை தொடங்கி வைத்த பின்னர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், “தர்மபுரியை சேர்ந்த காவலர், கடந்த ஜனவரி மாதம் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றபோது முகம் சிதைவுற்று உயிருக்கு போராடும் நிலையில் சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு திறமையான மருத்துவர்கள் அளித்த சிகிச்சையால் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

இந்தியா முழுவதும் 1,222 ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளை பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் திறக்கப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் 70 இடங்களில் திறக்கப்படுகிறது. இந்த 70 ஆக்ஸிஜன் ஆலைகள் மூலம் 6,490 படுக்கைகளுக்கு 10 லிட்டர் என்கிற வகையில் ஆக்ஸிஜன் வழங்குவதற்கு உபயோகமாக இருக்கும்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் புதிதாக 850 இடங்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. மேலும் 800 இடங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க வேண்டியுள்ளது. நாமக்கல், ராமநாதபுரம், திருவள்ளூர், திருப்பூர் மருத்துவ கல்லூரியில் மத்திய மருத்துவ குழுவினர் கூறிய குறைகள் சரி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ கல்வி இயக்குனர் டெல்லி பயணம்

இந்த ஆவணங்களுடன் மருத்துவ கல்வி இயக்குனர் டெல்லி சென்றுள்ளார். திண்டுக்கல், கிருஷ்ணகிரி, அரியலூர் மாவட்டங்களில் உள்ள மருத்துவ கல்லூரிக்கு மாணவர் சேர்க்கைக்கு ஆய்வு மேற்கொள்ள உடனடியாக மருத்துவ குழுவை அனுப்ப கோரிக்கை வைக்க உள்ளார்.

மேலும் தமிழ்நாடு அரசு நிதி நெருக்கடியில் தள்ளாடுவதால் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே பிலிம் நெகட்டிவ் பிரிண்ட் போட முடியாத நிலை இருப்பதாக முன்னாள் நிதி அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அரசு மருத்துவமனைகளில் எக்ஸ்ரே முடிவுகளை பிலிம் நெகட்டிவ் மூலம் கொடுக்காததற்கு நிதிச்சுமை காரணமல்ல. டிஜிட்டல் உலகம் என்பதால் வாட்ஸ்அப் மூலம் சரியான முடிவுகள் மருத்துவர்களுக்கு உடனுக்குடன் அனுப்பப்படுகிறது.

தனியார் மருத்துவமனைகளில்கூட எக்ஸ்ரே முடிவுகளை பிலிம் ரோல்களில் வழங்குவதில்லை. தமிழ்நாடு அரசை நிதிச்சுமையில் விட்டுச்சென்ற சென்ற முன்னாள் துணை முதலமைச்சர் உண்மைத்தன்மை தெரியாமல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சமூகவலைதள செய்திகளை நம்பி அறிக்கை வெளியிடக் கூடாது

அதுமட்டுமின்றி சமூக வலைதளம் மற்றும் ஊடகத்தில் வரும் செய்திகளை மட்டும் நம்பி எந்தவித விவரங்களையும் அறியாமல் 10 ஆண்டுகள் நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்த ஓ. பன்னீர்செல்வம் இவ்வாறு அறிக்கை வெளியிட்டிருப்பது தவறு .

கடந்த ஆட்சியைவிட ரூ. 487 கோடி மருத்துவ துறைக்கு நிதி குறைத்து ஒதுக்கியுள்ளதாக ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். ஆனால் நிதியறிக்கை தலைப்புவாரியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ள விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. மருத்துவ துறையில் எந்தத் தலைப்பின் கீழும் நிதி குறைக்கப்படவில்லை

மினி கிளினிக்கில் செவிலியர்கள் எங்கே?

அதேபோல் 144 கோடி ரூபாய் மினி கிளினிக்குக்கு ஒதுக்கினீர்கள். அதில் செவிலியர் சம்பளம் என்று கணக்கு காட்டினீர்கள். ஆனால் மினி கிளினிக்கில் செவிலியர் எங்கே?, இல்லாத செவிலியருக்கு எப்படி ஊதியம் கொடுத்தீர்கள்.

சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை வைத்து ஓ. பன்னீர்செல்வம் அரசு மருத்துவமனைகள் மீது குறை கூறுவது நாகரீகமாக இல்லை. மருத்துவத் துறைக்கு நிதி ஒதுக்கியதில் எவ்வித குறைபாடும் இல்லை, குறைபாடுகள் இருந்தால் நேரடியாக விவாதிக்க தயார்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: எடியூரப்பா நெருங்கிய உதவியாளர் வீட்டில் சோதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.