ETV Bharat / city

ஆளுநராக ஆக்கப்பூர்வமான பணியை செய்கிறேன்- ஆளுநர் தமிழிசை

author img

By

Published : Apr 23, 2022, 6:16 PM IST

ஆளுநராக ஆக்கப்பூர்வமான பணியை செய்து கொண்டிருக்கிறேன் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் தமிழிசை
ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி: தென்னிந்திய வணிக மற்றும் தொழில் அவையின் சென்னை கிளை சார்பில் புதுச்சேரி ஆனந்தா இன் கருத்தரங்க அறையில் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை (ஏப்.24) புதுச்சேரி வர இருக்கிறார்.

அவர் புதுச்சேரிக்கு வருவது புதுச்சேரியின் வளர்ச்சியில் ஒரு மைல்கல்லாக இருக்கும். மேலும், அமித் ஷா, பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைக்கிறார். பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட இருக்கிறார். புதுச்சேரிக்கு ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வரவாக இது அமையும்.

புதுச்சேரி வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பல வளர்ச்சித் திட்டங்களை ஏற்கனவே திட்டமிட்டிருக்கிறோம். நலத்திட்டங்களுக்கு பிரதமரும், உள்துறை அமைச்சரும் பக்கபலமாக இருந்து வருகிறார்கள். மத்திய அமைச்சரின் வருகையை வளர்ச்சித் திட்டங்களுக்கான வருகையாக மட்டுமே பார்க்க வேண்டும்.

அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் புதுச்சேரியின் வளர்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களாகத்தான் இருக்க முடியும். நாட்டின் உள்துறை அமைச்சர் புதுச்சேரியின் வளர்ச்சித் திட்டங்களை தொடங்க வைக்க வருகிறார். புதுச்சேரியில் பல ஆண்டுகாலம் மக்களுக்கு ஆன்மீக சேவையும் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய அரவிந்தரின் 150ஆவது பிறந்த தினத்தை கொண்டாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க இருக்கிறார் என்றுதான் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து.

புதுச்சேரியில் இதுவரை கரோனா தொற்று கண்டறியப்படவில்லை. அறிகுறிகள் இருந்தால் அது தொற்றாக மாறிவிடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது பற்றிய கோவிட் மேலாண்மைக் கூட்டம் இன்று துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற இருக்கிறது. மருத்துவ நிபுணர்களும் மருத்துவக் கல்லூரி நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள்.

மக்களை மீண்டும் தடுப்பூசியின் பக்கம் திருப்புவது கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. மக்களுக்கு விழிப்புணர்வு தேவை. தடுப்பூசி போட்டதால் அனைவரும் கவலையில்லாமல் இருக்கிறோம். தடுப்பூசி திட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும். மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக ஆக்கப்பூர்வமான எந்த கோப்பு வந்தாலும் அதற்கு ஒப்புதல் அளிக்கிறேன். நான் என் பணியை செய்துக் கொண்டிருக்கிறேன். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தவிர்த்து ஆக்கபூர்வமாக பார்க்கவேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: ஜம்முவில் மோடியின் வருகைக்காக உச்ச கட்ட பாதுகாப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.