ETV Bharat / city

புதிதாகப் பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு தேர்தல் அலுவலர்கள் அறிவிப்பு

author img

By

Published : Oct 16, 2020, 11:37 PM IST

சென்னை: புதிதாகப் பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்களில் மாவட்டத் தேர்தல் அலுவலகச் செயல்பாடுகளை அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், மாவட்ட ஆட்சியர்களை தேர்தல் அலுவலர்களாக அறிவித்து உத்தரவிட்டுள்ளதாக மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Tamilnadu election officer
Tamilnadu election officer

தமிழ்நாடு அரசின் நிர்வாக வசதிக்காக விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு எனவும், வேலூர் மாவட்டம் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் எனவும், திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி, தென்காசி எனவும் பிரிக்கப்பட்டன. இதனால் மாவட்டங்களின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளது.

தற்போது பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்குத் தேர்தல் அலுவலர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம் இதில் சேர்க்கப்படவில்லை.

இதுகுறித்து மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்கள், எபிக் (EPIC data base) ஈபிஐசி தரவுத்தளத்தைப் பராமரிப்பதற்காக தேர்தல் நிர்வாகத்திற்கான தனி உள்கட்டமைப்பு இம்மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ளது.

இதுதவிர, புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் தனித் தேர்தல் பிரிவு நிறுவப்பட்டுள்ளது.

எனவே, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950இன் பிரிவு 13 ஏஏ படி (Section 13AA of the Representation of the People Act, 1950) கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களின் ஆட்சியர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் மாவட்டத் தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத் தேர்தல் அலுவலர்களின் பதவி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசின் அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை மாவட்ட தேர்தல் அலுவலராக சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். மற்ற 36 மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர், தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழ்நாடு அரசின் அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.