ETV Bharat / city

முதுகலை மருத்துவ கலந்தாய்வு நடத்த நடவடிக்கை எடுக்க மருத்துவர்கள் வலியுறுத்தல்

author img

By

Published : Dec 4, 2021, 1:56 PM IST

medical pg counselling, Doctors urging the government to conduct medical pg counselling, case against EWS Reservation in Supreme court, medical pg Admission
medical pg counselling

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டு வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும்வரை அந்த ஒதுக்கீட்டை நிறுத்திவைக்க வேண்டும் எனவும், முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையை உடனடியாக நடத்திட உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர். ரவீந்திரநாத் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: இது குறித்து சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர். ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நாடு முழுவதும் கரோனா தொற்று குறைந்திருந்தது. இருப்பினும், ஜனவரி மாதம் 10ஆம் தேதி நடக்கவிருந்த, முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட் (NEET PG) நுழைவுத் தேர்வை தேதி குறிப்பிடாமல் மத்திய அரசு தள்ளிவைத்தது. அதற்கு எந்தக் காரணத்தையும் கூறவில்லை.

ஜனவரி 10ஆம் தேதியே தேர்வு நடத்தியிருந்தால் 40 ஆயிரம் முதுநிலை மருத்துவ மாணவர்கள் இரண்டாவது அலையின்போதே கரோனா பெருந்தொற்றில் பணியாற்ற நாடெங்கிலும் கிடைத்திருந்திருப்பார்கள். மத்திய அரசு செய்த மாபெரும் தவறின் விளைவால் மாணவர்களும், மருத்துவத் துறையினரும், நோயாளிகளும் பல்வேறு இன்னல்களைச் சந்தித்துவருகின்றனர்.

மாணவர் சேர்க்கை நடத்தப்படவில்லை

அதன்பிறகு, அந்தத் தேர்வு ஏப்ரல் 18ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவியதன் காரணமாக, ஏப்ரல் 18ஆம் தேதியும் தேர்வு நடத்தப்படவில்லை. மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு, செப்டம்பர் 11ஆம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவுகளும் வெளிவந்துவிட்டன.

ஆயினும், இதுவரை மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. மாணவர் சேர்க்கைக்காக 1.75 லட்சம் பேர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர். அவர்கள் விரக்தியில் உள்ளனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வழக்கின் தீர்ப்பு காலதாமதமாவதால் மாணவர் சேர்க்கையும் காலதாமதமாகிறது. இதற்கு மத்திய அரசும், உச்ச நீதிமன்றமுமே காரணம்.

மாணவர்கள் போராட்டம்

முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெறாததால், ஏற்கனவே முதுநிலை மருத்துவம் பயிலும் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்கள் கடும் பணிச்சுமைக்கு உள்ளாகியுள்ளனர். உடல், மன ரீதியான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையை உடனடியாக நடத்திடக்கோரி, அகில இந்திய அளவில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

சர்ச்சைக்குரிய, சமூகநீதிக்கு எதிரான, முன்னேறிய வகுப்பில் உள்ள ஏழைகளுக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு (EWS) வழக்கு இறுதித் தீர்ப்பு வரும்வரை நிறுத்திவைத்துவிட்டு இம்மாணவர் சேர்க்கையை நடத்தி இருந்தால் இந்த நெருக்கடியான நிலை ஏற்பட்டிருக்காது. இத்தகையப் போராட்டமும் வெடித்திருக்காது.

மத்திய அரசுக்கான வேண்டுகோள்கள்

  • இப்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் EWS இட ஒதுக்கீடு, இந்திய அளவில் அனைத்துத் துறைகளிலும் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் சமூக நீதிக்கு எதிராக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்று.
  • இந்தியாவில் சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு அண்மையில் எடுக்கப்படவில்லை. முன்னேறிய வகுப்பினரின் மக்கள் தொகை எவ்வளவு? அவர்களில் உள்ள ஏழைகள் எவ்வளவு பேர் என்ற புள்ளிவிவரங்கள் அரசிடம் இல்லை. இது பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது.
  • இப்பொழுது உள்ள EWS இட ஒதுக்கீட்டின்படி ‘ஏழைகள்’ என்பதற்கான வரையறை மிகவும் தவறாகவும், பாரபட்சமாகவும், நியாயமற்றதாகவும் உள்ளது. ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சம் வரை உள்ளவர்களுக்கு பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படுவது சரியல்ல. அவர்கள் எவ்வாறு ஏழைகளாக முடியும் என்ற கருத்து உள்ளது.

உச்ச நீதிமன்றம் மீது அச்சம் எழுகிறது

  • பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கு இட ஒதுக்கீடு என்றால் அதைப் பட்டியல் சாதியினர்/ பட்டியல் பழங்குடியினர்/ பிற பிற்படுத்தப்பட்ட சாதியினர் போன்ற எல்லா வகுப்பிலும் உள்ள ஏழைகளுக்கும் வழங்கியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், பட்டியல் சாதியினர்/ பட்டியல் பழங்குடியினர்/ பிற பிற்படுத்தப்பட்ட சாதியினர் இட இதுக்கீட்டில் வராத பிரிவினரில் உள்ள ஏழைகளுக்கு என்ற பெயரில், முன்னேறிய வகுப்பில் உள்ள ஏழைகளுக்கு மட்டுமே இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதும் நியாயம் அல்ல. எனவே, இவை குறித்த பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன.
  • இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வேலைவாய்ப்பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிட முன்னாள் பிரதமர் வி.பி. சிங் உத்தரவு போட்டதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தவுடன், அந்த இட ஒக்கீட்டிற்கு உச்ச நீதிமன்றம் உடனடியாக தடைபோட்டது. இறுதித் தீர்ப்புக்குப் பிறகே அது நடைமுறைக்கு வந்தது.
  • இதர பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய உயர் கல்வியில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிட போடப்பட்ட சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது, அந்த இட ஒதுக்கீட்டிற்கும் உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடைவிதித்தது. இறுதித் தீர்ப்புக்குப் பிறகே அது 2008இல் நடைமுறைக்கு வந்தது. இவ்வாறு இதர பிற்படுத்தப்பட்டோருக்கு, இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட சட்டங்கள் வந்தபோதெல்லாம், அது தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றம், இறுதித் தீர்ப்பு வரும்வரை அந்த இட ஒதுக்கீட்டிற்குத் தடைவிதித்தது.

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரை பாதிக்கும்

  • ஆனால், முன்னேறிய வகுப்பில் உள்ள ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு பிரச்சினையில் அவ்வாறு தடை எதையும் விதிக்கவில்லை. அதற்காக மாணவர் சேர்க்கையையே நாடு முழுவதும் காலதாதம் செய்கிறது. ஒரு கல்வி ஆண்டே இல்லாத நிலை ஏற்பட உள்ளது. இது உச்ச நீதிமன்றத்தின் செயல்பாட்டில் சமூக நீதி மீது அக்கறை உள்ளோருக்கு ஐயத்தை உருவாக்கியுள்ளது. மத்திய அரசும் அவசர கதியில்தான் EWS இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது. இதுவும் இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணம்.
  • முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை ஏற்கனவே மிகவும் காலதாமதமாகியுள்ளது. அதனால் ஏற்கனவே முதுநிலை மருத்துவம் பயிலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்குப் பணிச்சுமை அதிகரித்துள்ளது.
  • ஆனால், அதே சமயத்தில் முதுநிலை மருத்துவ மாணவர்களின் போராட்டங்களைக் காரணம் காட்டி, சமூக நீதிக்கு எதிரான EWS இட ஒதுக்கீடு பிரச்சினையில் அவசர முடிவுகளை உச்ச நீதிமன்றம் எடுத்துவிடக் கூடாது. இது இதர பிற்படுத்தப்பட்டோரையும், சமூக நீதியையும் நிரந்தரமாகப் பாதித்துவிடும்.

மாணவ சேர்க்கையைத் தொடங்க வேண்டும்

  • இந்திய மக்கள் தொகையில் 52 விழுக்காடாக இருக்கக்கூடிய இதர பிற்படுத்தப்படோருக்கு, கடந்த ஆண்டு வெறும் 3.5 விழுக்காடு அளவிலேயே மருத்துவப் படிப்பு இடங்கள், அகில இந்தியத் தொகுப்பில் கிடைத்தன. இது சமூக நீதிக்கு எதிரானது. இந்நிலையில், மருத்துவப் படிப்புகளில், அகில இந்திய தொகுப்பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கிட மோடி அரசு உத்தரவிட்டுள்ளது. இது பல கட்டப்போராட்டங்களுக்கு கிடைத்த பதிமூன்று ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த வெற்றியாகும்.
  • எனவே, ஓபிசி இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே உடனடியாக அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் வழங்கிட வேண்டும்.
  • சர்ச்சைக்குரிய, எந்தவித புள்ளிவிவர ஆதாரமும் அற்ற சமூக நீதிக்கு எதிரான EWS இட ஒதுக்கீடு வழங்குவதை, இறுதித் தீர்ப்பு வரும்வரை நிறுத்திவைக்க வேண்டும்.
  • மாணவர் சேர்க்கைகளை உடனடியாகத் தொடங்கிட வேண்டும். சமூக நீதியை உச்ச நீதிமன்றம் காத்திட வேண்டும். இதன் மூலம் முதுநிலை மருத்துவ மாணவர்களின் பணிச்சுமையும் குறையும், சமூக நீதியும் காக்கப்படும்.

தமிழ்நாடு அரசுக்கான வேண்டுகோள்

  • பணிச்சுமையைக் குறைக்கக் கோரி மருத்துவ மாணவர்கள் நடத்தும் போராட்டத்தால், அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் பணிச்சுமையைக் குறைத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். நோயாளிகள், பொதுமக்கள், அனைத்து மாணவர்களின் நலனையும் காத்திட வேண்டும்.
  • எனவே, 2021 ஜூலை மாதத்தில் எம்.டி.எம்.எஸ். படிப்பை முடித்து தேர்ச்சிப் பெற்ற முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு, அவர்கள் படித்த துறைகளுக்குச் சம்பந்தமே இல்லாத இடங்களில் தற்காலிகமாகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதனால், முதுநிலை மருத்துவம் முடித்த மருத்துவர்களின் சேவைகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை.
  • எனவே அவர்களை உடனடியாக மருத்துவக் கல்லூரிகளில் அவரவர் துறைகளில் பணி நியமனம் செய்ய வேண்டும். இது உடனடியாக, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு முதுநிலை மருத்துவ மாணவர்களின் பணிச்சுமையைக் குறைக்க உதவும்.

கலந்தாய்வை நடத்தவும்

  • மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, மருத்துவர்களைக் கூடுதலாகப் பணிநியமனம் செய்திட வேண்டும்.
  • கரோனாவுக்காக நியமிக்கப்பட்ட மருத்துவர்களையும் பணி நீக்கம் செய்ததை ரத்துசெய்ய வேண்டும். அவர்களை மீண்டும் பணியில் அமர்த்தி, மினி கிளினிக் மருத்துவர்களையும் இணைத்துக் கொண்டு கரோனா தடுப்பூசி வழங்கல், வெள்ள நிவாரண மருத்துவப் பணிகளுக்கு மருத்துவக் கல்லூரிகளிலும், மற்ற மருத்துவமனைகளிலும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். இப்பணிகளுக்கு, இம்மருத்துவர்களின் எம்பிபிஎஸ் தகுதியே போதுமானது. அதன் மூலம் முதுநிலை மருத்துவ மாணவர்களின் பணிச்சுமை குறையும்.
  • தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலை மருத்துவ இடங்களுக்கான முதல்கட்ட மாணவர் சேர்க்கையை, உரிய அனுமதி பெற்று தமிழ்நாடு அரசு உடனடியாக நடத்திட வேண்டும்.
  • அகில இந்தியத் தொகுப்பு இடங்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படும்போது, முதல்கட்ட கலந்தாய்வு மூலம் சேர்ந்த மாணவர்களும் கலந்துகொள்ள மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான சேர்க்கை முடிந்தபின் இரண்டாம்கட்ட தமிழ்நாடு கலந்தாய்வை நடத்த வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கடும் பணிச்சுமை: மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை உடனடியாக நடத்த கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.