ETV Bharat / city

மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததாக தொழிலதிபர் மீது பொய் வழக்கா? - சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!

author img

By

Published : Jul 2, 2022, 6:25 PM IST

MHC
MHC

மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததாக தொழிலதிபர் மீது பதிவு செய்யப்பட்டது பொய் வழக்கா? என்பது குறித்து சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் மாம்பாக்கம் தொழிற்பேட்டையில் தொழிற்சாலை நடத்தி வரும் பிரபு, அவரது 4 கார்களில் மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து ஶ்ரீபெரும்பதூர் போலீசார் சோதனை நடத்தினர். கடந்த பிப்ரவரி மாதம் 5ஆம் தேதியன்று, அவரது 4 கார்களை பறிமுதல் செய்ததுடன், தொழிலதிபர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு போலீசாரால் புனையப்பட்ட பொய் வழக்கு எனக் கூறி, அதை ரத்து செய்யக்கோரி தொழிலதிபர் பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி சதிஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. பிரபு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பவம் நடந்த நாளின் சிசிடிவி பதிவுகளை நீதிமன்றத்தில் சமர்பித்தார்.

சிசிடிவி பதிவுகளை பார்வையிட்ட நீதிபதி, அதில் சாதாரண உடையில் ஒரு கும்பல் தொழிற்சாலைக்குள் நுழைந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த நான்கு கார்களை எவ்வித சோதனையும் நடத்தாமல் பலவந்தமாக எடுத்து செல்வது பதிவாகியிருப்பதாக நீதிபதி குறிப்பிட்டார்.

எனவே தொழிலதிபர் பிரபு மீது பதியப்பட்ட வழக்கின் உண்மைத்தன்மை குறித்து சிபிசிஐடி எஸ்பி தலைமையில் விசாரணை நடத்தி, மூன்று மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் இது பொய்யாக புனையப்பட்ட வழக்கு என விசாரணையில் கண்டறியப்பட்டால், இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் தமிழர் அல்லாதவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால் அரசு உடனே விழித்துக்கொள்ள வேண்டும்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.