'லாவண்யா மரணம்; உச்ச நீதிமன்ற உத்தரவு நீதிக்கு கிடைத்த வெற்றி!'

author img

By

Published : Feb 14, 2022, 10:39 PM IST

லாவண்யா மரணம்

லாவண்யா மரணத்தை சிபிஐ விசாரிக்கும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நீதிக்கும், பாஜகவின் அறப் போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி எனத் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை: இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி லாவண்யா, தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சி மேற்கொண்ட தொடர் போரட்டத்தின் காரணமாக, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி மதுரைக் கிளை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டது.

இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. தமிழ்நாடு அரசுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கும் இந்தத் தீர்ப்பு, நீதிக்குக் கிடைத்த வெற்றி; இது பாஜகவின் தொடர் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!

கட்டாய மதமாற்றம் - அப்பள்ளியைக் காப்பாற்ற ஆளும்கட்சி முனைப்பு

கட்டாய மதமாற்றம் செய்வதற்காக கொடுக்கப்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசு அலுவலர்களோ, தமிழ்நாடு அரசின் அமைச்சர்களோ, அல்லது முதலமைச்சரோ பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நேரில் சென்றோ அல்லது ஆறுதல் உதவிகளையோ இதுவரை கொடுக்கவில்லை.

இன்னமும் சொல்லப்போனால், விசாரிக்கும் முன்பே காவல் துறையினர், மாநில அரசின் அமைச்சர்கள் எனப் பேசிய அனைவரும், இவ்வழக்கில் கட்டாய மதமாற்றத்திற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்ற முடிவுக்கு வந்து ஊடகத்தின் வாயிலாக வெளிப்படுத்தினர்.

இந்த வழக்கு பற்றி எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் முதலமைச்சர் மௌனம் காப்பதாலும், ஆளும் கட்சியின் எண்ணம் தெளிவாகத் தெரிந்தது. கட்டாய மதமாற்றத்திற்கு ஒரு இளம்பெண்ணை பலி வாங்கிய கட்டாய மதமாற்றத்தைக் கண்டிக்காமல் அப்பள்ளியைக் காப்பாற்றுவதில் ஆளும்கட்சி முனைப்பாக இருந்தது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது.

சிறையிலிருந்து வந்த சகாய மேரிக்கு திமுக எம்எல்ஏ நேரில் மரியாதை

மேலும், குற்றம் சாட்டப்பட்ட பள்ளி நிர்வாகி சகாய மேரி சமீபத்தில் சிறையிலிருந்து பிணையில் வெளிவந்தபோது, ஆளும் கட்சியின் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் நேரில் சென்று மரியாதைகள் செய்து, குற்றஞ்சாட்டப்பட்டவரை வரவேற்கிறார். முதலமைச்சர் அனுமதி இல்லாமல் இது சாத்தியமா?

மதுரை உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டபோது, அதை ஏற்காமல், ஆளும் கட்சி அவசர அவசரமாக உச்ச நீதிமன்றத்தில், மதுரை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடைகோரி வழக்குத் தொடர்ந்தது. மேற்கண்ட சம்பவங்களிலிருந்து ஆளும் கட்சியின் எண்ணத்தை நாம் புரிந்துகொள்ள முடியும்.

இனியாவது அறிவாலயம் அரசு தான் சொன்ன பொய்களுக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்குமா? மகளை இழந்து தவிக்கும் பெற்றோரை இதுவரை சந்திக்காத ஆட்சித் தலைவர் இனியாவது செல்வாரா? இனியாவது உயிரிழந்த மாணவியின் பெற்றோரை முதலமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவாரா?

தீர்ப்பு நேர்மையின் பக்கம்

உச்ச நீதிமன்றத்தின் இந்தச் சிறப்பான தீர்ப்பின் மூலம் பல உண்மைகள் தெளிவாகின்றன. ஆளும் அரசும் அலுவலர்களும் அடுக்கடுக்காக சொன்ன பொய்களை இந்தத் தீர்ப்பு வெளிச்சப்படுத்துகிறது. பாரதிய ஜனதா கட்சி உண்மையின் பக்கம், நேர்மையின் பக்கம், மக்களின் பக்கம் நியாயத்தின் பக்கம் இருப்பதை இந்தத் தீர்ப்பு உறுதிசெய்கிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சட்டத்திற்குப் பங்கம் ஏற்பட்டால் சரிசெய்ய அனைத்தையும் செய்வோம்! - எடப்பாடி எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.