ETV Bharat / city

"போலீசார் காரில் கூட்டிச்சென்று பேரம் பேசினார்கள்"- விசாரணை கைதி மரணத்தில் பரபரப்பு

author img

By

Published : Apr 30, 2022, 10:03 PM IST

Updated : Apr 30, 2022, 10:30 PM IST

நடந்தது என்ன
நடந்தது என்ன

சென்னையில் விசாரணைக் கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகிவரும் நிலையில், அவரது குடும்பத்தார் பரபரப்பு தகவல்களை செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

சென்னை கெல்லிஸ் சந்திப்பில் ஏப். 18ஆம் தேதி இரவு ஆட்டோவில் வந்த சென்னை பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், விக்னேஷ் இருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்து, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது விக்னேஷ் (25) ஏப். 19ஆம் தேதி மர்மமாக உயிரிழந்தார்.

இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்துவருகிறது. இந்த வழக்கில் மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், விக்னேஷின் குடும்பத்தார் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரம்

காவல்துறையினர் ஏன் பணம் தர வேண்டும்?: இந்த விவகாரம் குறித்து விக்னேஷின் மூத்த சகோதரர் வினோத் கூறுகையில், "என் தம்பியின் மரணத்தை மறைக்க, ஆயிரம் விளக்கு காவல் நிலைய ஆய்வாளர் மோகன்தாஸ், பட்டினப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் என்னையும் எனது தம்பிகளையும் காரில் அழைத்துச் சென்று பணம் கொடுத்தனர். பேரம் பேசி மெரினாவில் கடை வாங்கித் தருவதாக தெரிவித்தனர்" என்றார். அப்போது அவர்கள் கொடுத்த பணத்தையும் செய்தியாளருக்கு காண்பித்தார்.


சிசிடிவி காட்சிகளைப் பார்க்கவேண்டும்: இதையடுத்து போலீசார் விக்னேஷை தாக்குவதை நேரில் பார்த்த ஆட்டோ ஓட்டுநர் பிரபு கூறுகையில், "சம்பவம் நாளன்று எனது ஆட்டோவில் விக்னேஷும், சுரேஷும் வந்தனர். போலீசார் அவர்களை கெல்லிஸ் சாலையில் விசாரிக்கும்போதே உருட்டுக்கட்டையால் தாக்கினர். அப்பகுதி சிசிடிவி பதிவுகளை எடுத்துப் பார்த்தாலே உண்மை தெரியவரும்.

குறிப்பாக கத்தியால் விக்னேஷ் போலீசாரை தாக்க முற்படவில்லை. தான் குதிரை ஓட்டும் வேலை செய்து வருவதால், குதிரையின் நகத்தை வெட்ட கத்தி வைத்திருப்பதாகவே தெரிவித்தார். இந்த கத்தி உள்ளிட்ட அனைத்து உடமைகளையும் போலீசார் வாங்கிய பின்னர் அவரை தாக்கினர்" என்றார். இதையடுத்து விக்னேஷின் மற்றொரு சகோதரரான சத்யா கூறுகையில், என்னுடைய அண்ணனின் முகத்தை இறுதிவரை பார்க்க விடாமல், போலீசாரே இறுதிச் சடங்கை செய்து முடித்துவிட்டனர் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.


சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்: இதையடுத்து காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் பேசிய மனித உரிமை ஆர்வலர் ஹென்ரி திபேன் கூறுகையில், "இந்த விவகாரத்தில், உயர் நீதிமன்றம் வகுத்த விதிகள் எதுவும் பின்பற்றப்படவில்லை.

இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி சம்பந்தப்பட்ட காவலர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சம்பவ இடம் மற்றும் காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி பதிவுகளை வெளியிட டிஜிபி சைலேந்திரபாபு தயாராக இருக்கிறாரா?

அதேபோல சாட்சிகள் பாதுகாப்பு சட்டவிதிகளின் படி விக்னேஷ் குடும்பத்தாருக்கு உரிய பாதுகாப்பை முதன்மை நீதிமன்றம் உறுதிபடுத்த வேண்டும்" என்றார். இதையடுத்து உயிரிழந்த விக்னேஷின் ஜாதி சான்றிதழை காண்பித்து, சிபிசிஐடி போலீசார் இதைப்பார்த்தாவது எஸ்.சி/எஸ்.டி வழக்கு பதிவு செய்வார்களா என்று கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: விக்னேஷ் லாக்கப் மரணம் : ரூ.1 லட்சத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்க குடுப்பத்தினர் முடிவு?

Last Updated :Apr 30, 2022, 10:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.