ETV Bharat / city

'நான் தலைவராக இருக்கும்போது தேர்தல் நடைபெறுவது மகிழ்ச்சி' - கே.எஸ்.அழகிரி

author img

By

Published : Oct 17, 2022, 4:10 PM IST

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

தான் தலைவராக இருக்கும்போது அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெறுவது மகிழ்ச்சி என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் போட்டியிடுகின்றனர். அனைத்து மாநிலங்களிலும் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.

தேர்தலில் காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்கள் இருக்கும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் மாநில கமிட்டிகளின் முன்னாள் தலைவர்கள் ஆகியோர் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள். அனைவருக்கும் கியூஆர் கோடுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் உள்ள கூட்ட அரங்கில், வாக்குப்பெட்டிகள் வைப்பதற்காக 4 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு, தமிழ்நாட்டில் 711 பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக டெல்லியில் இருந்து 4 வாக்குப்பெட்டிகளும், ஒரு பெட்டிக்கு 200 வாக்குச்சீட்டுகள் வீதம் 800 வாக்குச்சீட்டுகளும் கொண்டு வரப்பட்டுள்ளன.

காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் பிரதாப் பானு சர்மா, உதவி தேர்தல் அலுவலர்கள் நெய்யாற்றின்கரை சனல், கர்நாடகாவை சேர்ந்த அஞ்சலி நிம்பல்கர் ஆகியோர் தேர்தலை முன்னின்று நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தனது வாக்கினை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, "அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 711 வாக்குகள் உள்ளன. அனைவரும் உற்சாகத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் நடைபெறுவதில்லை என தெரிவித்து வந்தனர். ஆனால் அதிக முறை தேர்தல் நடத்தியது காங்கிரஸ் கட்சியில் தான்.

சோனியா காந்திக்கு எதிராகவும் பல்வேறு வேட்பாளர்கள் நின்று உள்ளனர். அதற்காக அவர்கள் சோனியா காந்திக்கு எதிரானவர்கள் என்று கூறி விட முடியாது. காங்கிரஸ் கட்சியில் உள்ள ஜனநாயகம் மற்றும் அவர் உரிமைக்காக தேர்தலில் நிற்கிறார்கள்.

நான் தலைவராக இருக்கும்பொழுது தேர்தல் நடைபெறுவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. 60 ஆண்டு காலமாக நான் காங்கிரஸ் கட்சியில் உள்ளேன். நான் இரண்டாவது முறையாக வாக்களிக்கிறேன்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம்: இபிஎஸ் பதில் கூற மறுப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.