ETV Bharat / city

இந்தியா-பாகிஸ்தான் போரின் பொன்விழா 2021 - தமிழ்நாட்டு ராணுவ வீரர்களை போற்றி நினைவுப்பரிசு

author img

By

Published : Jul 31, 2021, 6:46 AM IST

இந்தியா-பாகிஸ்தான் போரில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தார்.

இந்தியா-பாகிஸ்தான் போரின் பொன்விழா
இந்தியா-பாகிஸ்தான் போரின் பொன்விழா

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று (ஜூலை 30) கலைவாணர் அரங்கத்தில், 1971ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா, பாகிஸ்தானை வென்று வங்கதேசம் என்ற தனிநாட்டை உருவாக்கிய வரலாற்று வெற்றியின் பொன்விழா நடைபெற்றது.

முதலமைச்சர், இந்நிகழ்வின் வரலாற்று நாயகர்களாக வருகை புரிந்த 1971 இந்தியா - பாகிஸ்தான் போரில் பங்கேற்ற முன்னாள் படைவீரர்களுக்கு தனது வாழ்த்துகளையும் வணக்கங்களையும் தெரிவித்து பேசும்போது, “இந்திய ராணுவத்திற்குத் தமிழர்கள் தொடர்ந்து தம்முடைய பங்களிப்பினைச் செலுத்தி வருகின்றனர். தாய்நாட்டிற்காக ராணுவ வீரர்கள் தம் இன்னுயிரையும் தியாகம் செய்ய தயங்குவதில்லை. அவர்தம் குடும்பங்களுக்கு உதவுவதில் தமிழ்நாடு எப்போதும் முன்னணியில் இருந்து வருகிறது.

கோடி ரூபாய் நிதி திரட்டிய கலைஞர்

வரலாற்று ரீதியாக பார்க்கும் போதும் தமிழ்நாடு எப்போதுமே நாடு காக்கும் பணிக்கு தம்மை அர்ப்பணித்து வருவது தெரிகிரது. 1962ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதியன்று சென்னை எஸ்.ஐ.ஏ.ஏ திடலில் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நாட்டு பாதுகாப்பு நிதி வசூல் கூட்டத்தில், அப்போது திமுக பொருளாளராக இருந்த கலைஞர், சில மணி நேரங்களில் 35ஆயிரம் ரூபாய் நிதி திரட்டி பேரறிஞர் அண்ணாவிடம் வழங்கி, அவர் மூலம் அன்றைய முதலமைச்சர் காமராசரிடம் வழங்கப்பட்டது.

மேலும், 1971ஆம் ஆண்டில் போர் நிகழ்ந்தபோது, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர், அன்றைய பிரதமர் இந்திரா காந்தியை சென்னைக்கு அழைத்து, தீவுத்திடலில் நடைபெற்ற விழாவில் நாட்டு பாதுகாப்பு நிதியாக 6 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. அன்றைய சூழலில் இந்தியா முழுமைக்கும் வசூலான 25 கோடி ரூபாயில், தமிழ்நாடு வழங்கிய 6 கோடி ரூபாய் என்பது நான்கில் ஒரு பங்கு நிதியாகும்” எனக் குறிப்பிட்டார்.

ஸ்டாலினின் வீரவணக்கம்

தொடர்ந்து பேசிய அவர், “வங்கதேசப் போரில் கலந்து கொண்ட மாவீரர்களுக்கு மட்டுமல்ல, அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவர் ராணுவத்தில் இருக்கிறார் என்றால், அவர் மட்டுமல்ல, அவரது குடும்பமே ராணுவத்தில் இருப்பதாகத்தான் அர்த்தம். நாட்டுக்காக அர்ப்பணித்துக் கொண்ட குடும்பங்களுக்கு நாம் முதலில் மரியாதை செலுத்தியாக வேண்டும்.

வெற்றி தீபம்
வெற்றி தீபம்

இத்தகைய போர் வீரர்களோடு சேர்ந்து நிற்பதில் பெருமை அடைகிறேன். இப்போரில் உயிர்நீத்த வீரர்களின் துணைவியர்களுக்கும் எனது வீரவணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். இவ்விழாவில், இந்தியாவின் நான்கு திசைகளிலும் பயணித்த வெற்றி தீபம் தென் மண்டல ராணுவத் தளபதியால் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டதுடன், மேடையில் வைக்கப்பட்ட வெற்றி தீபத்திற்கு அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.

வெற்றி தீபத்திற்கு மரியாதை
வெற்றி தீபத்திற்கு மரியாதை

ராணுவ வீரர்களை போற்றி பரிசு

இந்திய பாகிஸ்தான் போரில் வான்வெளி தாக்குதலை தடுத்து வணிகக் கப்பல்களை சிதறடித்து வெடிக்கச் செய்து 93ஆயிரம் எதிரி படைவீரர்கள் சரணடையக் காரணமாக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த கடற்படை உயர் அலுவலர் எஸ். ராம்சாகர், தன் சுய பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல் படைக்குழுவினருடன் பதுங்குக் குழியின் வழியாக முன்னேறி எதிரிப் படையில் பலத்த சேதத்தை ஏற்படுத்தி, படைகள் சரணடைய காரணமாக இருந்த கர்னல் ஏ.கிருஷ்ணசாமி , இப்போரில் பங்கேற்று உயிர்த்தியாகம் செய்த மூன்று வீரர்களின் குடும்பத்தினர், போரில் பங்கேற்ற 6 போர்வீரர்கள் அனைவரையும் பாராட்டி நினைவுப்பரிசாக இந்தியா-பாகிஸ்தான் போரின் நினைவு முத்திரைப் பொறிக்கப்பட்ட தஞ்சாவூர் தட்டினை முதலமைச்சர் வழங்கி கவுரவித்தார்.

நினைவு பரிசு வழங்கிய முதலமைச்சர்
நினைவு பரிசு வழங்கிய முதலமைச்சர்

இவ்விழாவில், தென் மண்டல ராணுவத் தளபதி ஏ.அருண், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, பொது மற்றும் மறுவாழ்வுத் துறை செயலாளர் முனைவர் டி.ஜகந்நாதன், அரசு உயர் அலுவலர்கள், ராணுவ உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கும் விழா: ஸ்டாலின் பங்கேற்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.