பரம்பரை மருத்துவர்களின் உயர்த்தப்பட்ட ஓய்வூதிய தொகை ஆணைகளை வழங்கினார் ஸ்டாலின் ..

author img

By

Published : Sep 22, 2022, 1:13 PM IST

Etv Bharat

தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்துள்ள 61 சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி பரம்பரை மருத்துவர்கள் பயன்பெறும் வகையில் உயர்த்தப்பட்ட ஓய்வூதிய தொகையான ரூ.3000 க்காண ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் பயனாளிகளுக்கு வழங்கினார்.

சென்னை: தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்துள்ள சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி பரம்பரை மருத்துவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.1000 வழங்கப்பட்டு வந்தது. அந்த ஓய்வூதியத்தை ரூ.3000 ஆக உயர்த்தி வழங்குவதற்கான ஆணையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(செப்.22) வழங்கினார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதற்கட்டமாக 11 ஓய்வுபெற்ற பரம்பரை மருத்துவர்களுக்கு ஓய்வூதியத்திற்கான ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்து கொண்ட பரம்பரை சித்த மருத்துவர்களில் 60 வயதிற்கு மேற்பட்ட மருத்துவர்களின் வறுமை நிலையினை களைய உதவும் வகையில் மாதம் ரூ .500 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது.

இது பின்னர், 60 வயதிற்கு மேற்பட்ட பதிவுபெற்றுள்ள ஆயுர்வேதா, யுனானி , மற்றும் ஓமியோபதி பரம்பரை மருத்துவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது . தொடர்ந்து இந்த ஓய்வூதியமானது டிசம்பர் 2011 ஆம் ஆண்டு ரூ .1000 ஆக உயர்த்தப்பட்டது.

தற்போது நிலவிவரும் பொருளாதார சூழ்நிலையின் அடிப்படையில், தங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியமான ரூ.1,000 தங்களின் குறைந்தபட்ச வாழ்வாதார தேவைகளுக்கு போதுமானதாக இல்லை. எனவே, தங்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத்தினை ரூ .1,000 லிருந்து ரூ .3,000 ஆக உயர்த்தி வழங்கிட கோரிக்கை வைத்து வந்தனர்.

அதன் அடிப்படையில், 2022-23 ஆம் ஆண்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில் , சித்தா , ஆயுர்வேதா , யுனானி மற்றும் ஓமியோபதி பரம்பரை மருத்துவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ரூ .1000 ஓய்வூதியம் , நடப்பு ஆண்டு முதல் ரூ. 3000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி , தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்துள்ள 61 சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி பரம்பரை மருத்துவர்கள் பயன்பெறும் வகையில் உயர்த்தப்பட்ட ஓய்வூதியத் தொகையான ரூ.3000 க்காண ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.

இதையும் படிங்க: இடம் காலி செய்வது தொடர்பான விவகாரம்.. தனியார் நிறுவன நிர்வாகியை மிரட்டியதாக திமுக எம்எல்ஏ மீது வழக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.