B.Sc புரோகிராமிங் & டேட்டா சயின்ஸ் பாடத்தை பி.எஸ். பட்டப்படிப்பாக அறிமுகம் செய்த சென்னை ஐஐடி

author img

By

Published : Aug 1, 2022, 7:05 PM IST

Chennai IIT

பி.எஸ்சி., புரோகிராமிங் & டேட்டா சயின்ஸ் பாடத்தை, நான்காண்டு பி.எஸ். பட்டப்படிப்பாக சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை: பி.எஸ்சி., புரோகிராமிங் & டேட்டா சயின்ஸ் (B.Sc., in Programming and Data Science) பாடத்தை, பி.எஸ்., டேட்டா சயின்ஸ் & அப்ளிகேஷன்ஸ் (BS in Data Science and Applications) நான்காண்டு பட்டப்படிப்பாக சென்னை ஐஐடி தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் படிப்பில் சேர்வதற்கு ஆகஸ்ட் 19ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்: பி.எஸ். பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, நிறுவனங்கள் அல்லது ஆராய்ச்சிக்கல்வி நிலையங்களில் மாணவர்கள் 8 மாத கால பணிப்பயிற்சியோ (Internship), ஆய்வுத் திட்டமோ மேற்கொள்ள முடியும். தனித்துவம் வாய்ந்த இப்பாடத்திட்டம் மாணவர்கள் சேர்வதற்கும், படிப்பை முடித்துச்செல்வதற்கும் ஏற்ற வகையில் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு அவரவர் படிப்பிற்கு ஏற்பச்சான்றிதழ், டிப்ளமோ, பட்டம் ஆகியவை வழங்கப்படுகின்றன. கல்வி கற்போர் தாங்கள் விருப்பப்படி சேர்ந்து பயன்பெற ஏதுவாக நெகிழ்வுத்தன்மையுடன் இந்தப் பாடத்திட்டம் அமைந்துள்ளது. தற்போது 12ஆம் வகுப்பு படித்துவரும் மாணவர்களும் விண்ணப்பங்களை அனுப்பி மாணவர் சேர்க்கையை உறுதிசெய்து கொள்ளலாம்.

வயது வரம்பு இல்லை... ஆன்லைன் வகுப்புதான்: இவ்வாறு சேர்க்கப்படும் மாணவர்கள், தாங்கள் 12ஆம் வகுப்பை வெற்றிகரமாகப் படித்து முடித்தபின் இப்பாடத்திட்டத்தில் படிப்பைத் தொடங்கலாம். எந்த பாடப்பிரிவு மாணவரும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு ஏதும் இல்லை. பத்தாம் வகுப்பில் ஆங்கிலம், கணிதம் படித்த எந்தவொரு மாணவரும் இந்தப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுவதால் எங்கிருந்தும் விண்ணப்பிக்கலாம்.

B.Sc புரோகிராமிங் & டேட்டா சயின்ஸ் பாடத்தை பிஎஸ் பட்டப்படிப்பாக சென்னை ஐஐடி அறிமுகம்
B.Sc புரோகிராமிங் & டேட்டா சயின்ஸ் பாடத்தை பிஎஸ் பட்டப்படிப்பாக சென்னை ஐஐடி அறிமுகம்

தமிழ்நாடு மாணவர்கள், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என தற்போது வரை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தப்பாடத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இந்தியாவின் 111 நகரங்களில் உள்ள 116 தேர்வு மையங்களில் நேரடியாகத்தேர்வுகள் நடைபெறுகின்றன. ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், இலங்கை ஆகிய நாடுகளிலும் தேர்வு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

செப்டம்பர் 2022-ல் ஆரம்பமாகும் டேட்டா சயின்ஸ் பாடத்திட்ட வகுப்புகளில் சேர்வதற்கு ஆகஸ்ட் 19ஆம் தேதி கடைசி நாளாகும். விருப்பமுள்ள மாணவர்கள் https://onlinedegree.iitm.ac.in என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

இதையும் படிங்க: உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியல்: சென்னை ஐஐடி முதலிடம்

'தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றது': இந்தப் பாடத்திட்டம் குறித்து சென்னை ஐஐடி இயக்குநர், பேராசிரியர் வி.காமகோடி கூறும்போது, "தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் நன்கு வடிவமைக்கப்பட்ட பி.எஸ். டேட்டா சயின்ஸ் & அப்ளிகேஷன்ஸ் என்ற படிப்பை ஐஐடி, தரத்துடன் மாணவர்களுக்கு வழங்குகிறது. பிரபலமாகி வரும் பாடப்பிரிவுகளில் தரவு அறிவியலும் (Data Science) ஒன்று. திறமையான வளங்களுக்கான தேவைகள் அதிகரித்துக்காணப்படும் களத்தில் இது ஒரு வேலைவாய்ப்பு சார்ந்த திட்டம்.

தரவை நிர்வகித்தல், நிர்வாக ரீதியான நுண்ணறிவைப்பெற வடிவங்களைக்காட்சிப்படுத்துதல், ஐயப்பாட்டு மாதிரிகள் போன்றவற்றை மாணவர்களுக்கு தரவு அறிவியல் (Data Science) கற்றுக்கொடுப்பதுடன், பயனளிக்கும் வணிக முடிவுகளை எடுக்க ஏதுவாக முன்னறிவிப்பு மாதிரிகளைக் கட்டமைக்கவும் உதவியாக இருக்கும்.

சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம்

விரிவான நேரடிப்பயிற்சி மற்றும் அனுபவக்கற்றல் மூலம், மாணவர்கள் தொழில் தரநிலைகளைச்சந்திக்கும் வகையில் நன்கு பயிற்சி பெறுகின்றனர். இப்பாடத்திட்டத்தில் பட்டயப்படிப்பு (diploma) முடிக்கும் மாணவர்களுக்கு நிறுவனங்களில் உள்ளிருப்புப்பயிற்சியும் வேலைவாய்ப்பும் கிடைக்க சென்னை ஐஐடி உதவுகிறது’’என்றார்.

இந்தத்திட்டம் குறித்து பி.எஸ். டேட்டா சயின்ஸ் & அப்ளிகேஷன்ஸ் பொறுப்பு போராசிரியர், ஆண்ட்ரூ தங்கராஜ் கூறும்போது, "வணிகவியல், மானுடவியல் போன்ற பாடங்களைப் படிப்போரும் ஐஐடி வழங்கும் பட்டத்தைப் பெறலாம். வகுப்புகள் ஆன்லைன் மூலமும், நேரடித்தேர்வுகள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நடைபெறுவதால், பட்டப் படிப்பு பயில்வோரும், முழுநேரப் பணியில் ஈடுபட்டிருப்போரும் இந்த பட்டப்படிப்பைத்தொடரலாம்.

JEE வேண்டாம்: முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இப்பாடத்திட்டத்தின் மூலம், மிகக் கடுமையான போட்டி நிறைந்த ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வை (Joint Entrance Examination -JEE) எழுதாமலேயே சென்னை ஐஐடியில் மாணவர்கள் படிப்பது சாத்தியமாகி உள்ளது.

கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களுக்கு ஜேஇஇ பயிற்சி வகுப்புகள் மிகப்பெரிய தடையாக உள்ள நிலையில், இந்த பாடத்திட்டத்தால் அவர்கள் நேரடியாகப்பயன்பெறுகின்றனர். நிதிவசதி இல்லாத மாணவர்களுக்கு 100 விழுக்காடு வரை கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்

அனைவரையும் உள்ளடக்கிய பாடம்: பி.எஸ். டேட்டா சயின்ஸ் & அப்ளிகேஷன்ஸ் பொறுப்பு பேராசிரியர் டாக்டர் விக்னேஷ் முத்துவிஜயன், "பி.எஸ்.பாத்திட்டத்தில் சேர ஜேஇஇ-யில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. வேறு எந்த நுழைவுத் தேர்வையும் போலன்றி, இப்பாடத்திட்டத்திற்கான தகுதி நடைமுறைகள் அனைவரையும் உள்ளடக்கியதாகும்.

பி.எஸ். டேட்டா சயின்ஸ் & அப்ளிகேஷன்ஸ் பொறுப்பு பேராசிரியர் டாக்டர் விக்னேஷ் முத்துவிஜயன் விளக்கம்

அதிநவீன கற்பிக்கும் தொழில்நுட்பம் காரணமாக, தகுதியுடைய அனைத்து மாணவர்களையும் அதாவது எண்ணிக்கை அடிப்படையில் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி சேர்க்க சென்னை ஐஐடி வழிவகையை ஏற்படுத்தியுள்ளது" எனத்தெரிவித்தார்.

இதையும் படிங்க: கடலுக்கு அடியில் எண்ணெய் நிறுவனத்தின் கட்டமைப்பை ஆய்வு செய்ய புதிய மென்பொருள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.