Farm Laws: ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த சீக்கிய விவசாயிகள்!

author img

By

Published : Nov 25, 2021, 9:04 AM IST

ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த சீக்கிய விவசாயிகள், sikhs farmers thanked cm stalin

மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிய விவசாயிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளித்ததற்கு சென்னை குருத்வாரா சார்பில் சீக்கிய விவசாயிகள் சங்கத்தினர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

சென்னை: மத்திய அரசு கடந்தாண்டு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாக சில விவசாய அமைப்புகள், எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டிவந்தனர். இதையடுத்து, விவசாயிகளின் ஓராண்டு போராட்டத்திற்குப் பின் பிரதமர் நரேந்திர மோடி, மூன்று சட்டங்களையும் திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், நரேந்திர மோடி சட்டத்தைத் திரும்பிப் பெற்றுள்ள இந்த நேரத்தில், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளித்த மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்க சென்னை குருத்வாரா சார்பில் சீக்கிய விவசாயிகள் அவரைத் தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர்.

விவசாயிகளுடன் ஆயிரம் விளக்கு எம்எல்ஏ

இந்தச் சந்திப்பின்போது குருத்வாரா தலைவர் ஹர்பன்ஸ் சிங், மஞ்சித் சிங் சேதி, ரவிந்தர் சிங் மாதோக், பிரமிந்தர் சிங் ஆனந்த், ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன் ஆகியோர் உடனிருந்தார்.

ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த சீக்கிய விவசாயிகள்

சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளரிடம் பேசிய எழிலன், "வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த ஆண்டு திமுக வள்ளுவர் கோட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் உண்ணாவிரதம் இருந்தது.

திமுக தொடர் போராட்டம்

அதே போன்று, ஆட்சிக்கு வந்ததும் சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது, பிரதமர் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்துள்ளார். இதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்து சீக்கிய விவசாயிகள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்" என்றார்.

இதையடுத்து பேசிய குருத்வாரா தலைவர் ஹர்பன்ஸ் சிங், "மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் தமிழ்நாடு முதலமைச்சரைச் சந்தித்து நன்றி தெரிவித்தோம். 700 விவசாயிகளை நாம் இழந்திருந்தாலும் தற்போது வென்றுள்ளோம். இதற்குத் துணையாக இருந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.

இதையும் படிங்க: அரசு அலுவலர்களை செருப்பால் அடிக்க அனுமதிகேட்டு மனு: கலெக்டருக்கு ஷாக் கொடுத்த சமூக ஆர்வலர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.