சரியான நேரத்தில் வேலையை முடித்துத் தராத ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிப்பு!

author img

By

Published : Oct 12, 2021, 6:42 AM IST

மழைநீர் வடிகால்

மழைநீர் வடிகால் பணிகள், நீர்நிலைகள் புனரமைப்புப் பணிகளில் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் இலக்கை முடிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சியின் சார்பில் காரணம் கேட்டு, ரூ. 4.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் துறையின் சார்பில் 2,070 கி.மீ. நீளமுள்ள 9,224 மழைநீர் வடிகால்கள், 48.80 கி.மீ. நீளமுள்ள 30 நீர்வழிக் கால்வாய்கள் பராமரிக்கப்பட்டுவருகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சியில் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் கொசஸ்தலையாறு, அடையாறு, கூவம், கோவளம் வடிநிலப்பகுதிகளில் பன்னாட்டு வங்கிகளின் நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் வடசென்னை பகுதிக்குள்பட்ட கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் ரூ.3220 கோடி மதிப்பீட்டில் 769 கி.மீ. நீளத்திற்கு ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதிகளில் நடைபெற்றுவரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள் 46 சிப்பங்களாகப் பிரிக்கப்பட்டு, பல்வேறு ஒப்பந்ததாரர்களின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

நேற்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதிகளில் நடைபெற்றுவரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டத்தில் இதுவரை நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவுசெய்யாத நான்கு ஒப்பந்ததாரர்களுக்குக் காரணம் கேட்டு குறிப்பாணையும், ஐந்து ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.1.75 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வடிவமைப்பின்படி அமைக்கப்படாமலும், தரத்தில் குறைபாடுள்ள வடிகால்களை அமைத்த ஒரு ஒப்பந்ததாரருக்கு அவ்வடிகால்களை இடித்துவிட்டு, அவர்களின் சொந்த செலவினத்திலேயே தரமான, சரியான வடிவமைப்பில் மழைநீர் வடிகால்களை மீண்டும் அமைக்க மாநகராட்சி உத்தரவிடப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.109.88 கோடி மதிப்பில் 47 நீர்நிலைகளைப் புனரமைத்துச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இப்பணிகளில் குறிப்பிட்ட காலத்திற்குள் நிர்ணயிக்கப்பட்ட பணியினை முடிக்காத நான்கு ஒப்பந்ததாரர்களுக்கு ரூ. 2.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரூ.106.47 கோடி மதிப்பீட்டில் 5.9 கிலோமீட்டர் நீளத்திற்கு நடைபெற்றுவரும் மாம்பலம் கால்வாய் கட்டுமான பணிகளில் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் இலக்கினை முடிக்காத ஒரு ஒப்பந்ததாரர், இதுவரை பணியினைத் தொடங்காத மூன்று ஒப்பந்ததாரர்களுக்குக் காரணம் கேட்டு குறிப்பாணையும் வழங்கப்பட்டுள்ளது.

இப்பணியில் குறிப்பிட்ட காலத்திற்குள் பணியை முடிக்காத காரணத்திற்காக ஒரு ஒப்பந்ததாரருக்கு ரூ. 50,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் சார்பில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் பணிகள், நீர்நிலைகள் புனரமைப்பு, நீர்வழி கால்வாய் கட்டுமான பணிகளை மாநகராட்சிப் பொறியாளர்கள் அவ்வப்போது ஆய்வுசெய்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணியினை முடிக்க வேண்டும்.

மேலும், மழைநீர் வடிகால், நீர்நிலைகள் புனரமைப்பு என்பது சென்னை மாநகருக்கு மழைக் காலங்களில் மழைநீர் வெளியேற மிகவும் இன்றியமையாத ஒரு கட்டமைப்பு என்பதால் இப்பணிகளைத் துரிதப்படுத்தவும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டுவரவும் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பையா சிவஞானம், கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.