ETV Bharat / city

கோயம்பேடு மேம்பாலத்தில் கொளுந்துவிட்டு எரிந்த கார்: ஒருவர் உயிரிழப்பு

author img

By

Published : Jun 28, 2021, 1:20 PM IST

Updated : Jun 28, 2021, 11:00 PM IST

கோயம்பேடு மேம்பாலத்தில் ஓடும் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்பேடு மேம்பாலத்தில் தீப்பிடித்து எரிந்த கார்
கோயம்பேடு மேம்பாலத்தில் தீப்பிடித்து எரிந்த கார்

சென்னை: கோயம்பேடு நூறடி சாலை - பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகியவற்றை இணைக்கும் இடத்தில் அமைந்துள்ள மேம்பாலத்தின் மீது கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, அந்தக் காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்தக் கார் வேலப்பன் சாவடியில் இருந்து வந்து மேம்பாலத்தின் மீதேறி கோயம்பேடு நூறடிச் சாலையில் இறங்கும் போது இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஓட்டம் பிடித்த ஓட்டுநர்

காரின் பின்பக்கத்தில் தீப்பிடித்து, ஓட்டுநரின் முதுகில் தீப்பிடித்ததும் மேம்பாலத்தின் மீது காரை நிறுத்திவிட்டு, தீக்காயத்துடன் கதவை திறந்து கொண்டு இறங்கி ஓடியுள்ளார்.

புகையினால் மயக்கம்

இதனால், காரின் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த நபர் காருக்குள் புகையில் சிக்கி மயக்கமடைந்து வெளியில் வரமுடியாமல் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

சக வாகன ஓட்டிகள் காரின் கதவுகளை திறக்க முயல்வதற்குள் கார் மளமளவென தீப்பிடித்தது. தகவலறிந்து கோயம்பேடு தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சேர்வதற்குள் கார் முழுமையாக எரிந்து உருக்குலைந்தது.

எலும்பு கூடுதான் மிஞ்சியது

இதில் பின்னிருக்கையில் இருந்த நபர் எரிந்து சாம்பலாகி எலும்புக்கூடு மட்டுமே மிஞ்சியது. முதலில் உயிரிழந்தது ஆணா ? பெண்ணா ? எனத் தெரியாத நிலையில், காவல் துறையினர் எலும்பு துண்டுகளைச் சேகரித்து தடயவியல் துறைக்கு அனுப்பினர்.

இறந்தது ஆண்

இதனிடையே, இரண்டு கைகளிலும் தீக்காயத்துடன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார் ஓட்டுநர் சுனில் குமாரிடம் விசாரணை நடத்தியபோது, காரில் எரிந்து சாம்பலானது சென்னை வேலப்பன்சாவடியைச் சேர்ந்த அர்ஜுன் (48) என்பது தெரியவந்தது.

டிராவல்ஸ் நிறுவனத்தின் இந்தக் காரில், அர்ஜுன் பயணித்துள்ளார் எனக் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து கோயம்பேடு காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உரிய பராமரிப்பு வேண்டும்

முழு ஊரடங்கு நாள்களில் பயன்படுத்தாமல் நீண்ட நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை, உரிய பராமரிப்பு இல்லாமல் அப்படியே எடுத்து இயக்கும்போது, இதுபோன்ற தீ விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என தீயணைப்புத்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

கோயம்பேடு மேம்பாலத்தில் கார் தீ விபத்து

மேலும், ஏசிக்கு பயன்படுத்தப்படும் கேஸ், ஆயில் போன்றவை கசிந்ததால் தீ விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தீவிர விசாரணை

அதே வேளையில் இந்தத் தீ விபத்து சம்பவம் எதனால் நடந்தது என்பது குறித்து தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே விருகம்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் பிரபாகர் ராஜா தீவிபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார்.

இதையும் படிங்க: ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அகத்தியர் கோயிலுக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலம் மீட்பு!

Last Updated : Jun 28, 2021, 11:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.